நூல் அறிமுகம்:
நமது இந்திய விடுதலைப் போரில் பங்கெடுத்தப் பலரின் வரலாறும் அவர்களின் உழைப்பும் நாம் அறிந்திருக்கிறோம்; அவர்கள் பட்ட வேதனையிலும் சிந்திய ரத்தத்தினாலும் உயிர் தியாகத்தினாலும் நம் சுதந்திரம் கைகூடியது என்றாலும் சுதந்திரப் போர் எனும் கடலில் நீந்தி, கரையேறியவர்களும் அதன் தாக்கத்தால் இடையில் மறைந்தவர்களும்,
காணாமல் போனவர்களும், தனது சிறு சிறு குறிக்கோளை அடைந்தவர்களும், அதிகார வர்க்கத்தின் வலைவீச்சு தாங்காமல் உயிரிழந்தவர்களும், உறவுகளை இழந்தவர்களும், மனநலம் பிறழ்ந்தவர்களும், சொத்துக்களை இழந்தவர்களும், அவ்வர்க்கத்தோடு கலந்து காணாமல் போனவர்களும் அதிகம்.
இவர்கள் எல்லோரையும் நாம் அறிந்திருப்பது நிச்சயம் கடினம். இதில் மறக்கப்பட்டவர்களும், ஏன், மறைக்கப்பட்டவர்களும் உண்டு.
இந்தப் போரில் ஆண்களும் அவர்களுக்கு நிகராகப் பெண்களும் கலந்து கொண்டனர்; இதில் ஆண்களின் போராட்டக்களம் வெளியில் தெரியுமளவுக்குப் பெண்களின் போராட்டங்கள் பகிரப்படவில்லை என்பதே நிஜம். குறிப்பாகத் தமிழகம்.
பெண்கள் என்றாலே மென்மையானவர்கள்; பாச உணர்ச்சிக்கு அடிமையானவர்கள், ஆயுதமேந்திப் போராடியவர்கள் மிகவும் குறைவு எனும் எண்ணமே கொண்ட எனக்கு இந்தப் புத்தகத்தை வாசிக்க வாசிக்க, அந்த எண்ணம் அகன்று, அதன் உண்மைகள் இயல்புகள் தெரிய வந்தது.
ஆணுக்கு நிகராக பெண்களும் நவீன ஆயுதங்களைக் கையாண்டு, எப்படிப் போராட்டக் களத்தை முன்நடத்தினார்கள் என்பதும் வியப்பிலாழ்த்தியது.
இந்த நூலை, அந்நியர் ஆட்சிக் காலத்தில், தானும் ஒரு போராளியாக இருந்து தன்னோடு, வங்காளத்தில் இயங்கிய பெண் போராளிகளைப் பற்றியும் எழுதியிருக்கும் புத்தகம்தான் கமலா தாஸ் குப்தா அவர்கள் எழுதிய ‘இந்திய விடுதலைப் போரில் பெண் போராளிகள்’ எனும் இந்நூல்.
கல்லூரியில் படிக்கும்போதே, சுதந்திரம் வேண்டி தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஜுகாந்தர் குழுவில் இடம்பெற்று, வீட்டில் பெற்றோர்களின் காவலையும் மீறி, திருமணம் செய்து கொள்ளாமலே, தனது பணியைச் செய்யும்போது, அவ்வப்போது மாதக் கணக்கில் – வருடக் கணக்கில்கூட சிறையிலிருந்து இருக்கிறார்.
பின்பு, கால மாற்றத்தில் காந்தியின் தாக்கத்தில், சட்ட மறுப்புப் போராட்டத்துக்கு தீவிரக் குழுக்களும் ஒத்துப்போக வேண்டிய சமயத்தில், மந்திரா எனும் பத்திரிகையையும் பல வருடங்கள் ஆசிரியராக இருந்து நடத்தியுள்ளார்.
ஆட்சியரின் அடக்குமுறையில் நீர்த்துப்போன பல தீவிர குழுக்கள் சில கம்யூனிஸ்டு கட்சியிலும், பல குழுக்கள் காங்கிரசிலும் இணைந்தன; இவரும் காந்தியின் விருப்பத்துக்கு உரியவராக மாறி, நவகாளி யாத்திரை சேவையில் பங்கு கொண்டு தீவிரமாகக் களப் பணியாற்றினார். சில வருடங்கள் வங்கதேச மாநில மகளிர் தலைவராகவும் காங்கிரசில் பணியாற்றினார்.
இந்தப் பயணத்தில் தான் நம்பிய தலைவர்கள், அவர்களால் தன்னுடன் களப்பணி செய்ய அனுப்பப்பட்ட தோழர்கள், தன்னால் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தோழர்கள் மற்றும் ஆண் தோழர்களின் சாகசத்தையும் அவர்களோடு இருந்த சிறை வாழ்க்கையையும் அழகாக விளக்குகிறார் அனுபவத்தோடு.
புட்டு என்கிற சுகாசினி கங்குலி, வீணா தாஸ், கல்பனா தத், சாந்தி கோஷ்,சோபாராணி தத்தா, ஜோதிகணா தத்தா, சுனிதிதேவி, மாயாதேவி, உஷா முகர்ஜி, பிரதிபா பத்ரா, இந்து சுதா கோஷ், வனலதா தாஸ் குப்தா, பிரீதிலதா வதேதார், ரோகிணி அதிகாரி, அம்பிகா ராய், அனுஜா சென், ஆபா தே, ரேணு சென் இப்படி இன்னும் பல பெண் போராளிகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர்.
தினேஷ் மஜும்தார், டாக்டர். ஜாதுகோபால் முகர்ஜி, பூபேந்திர நாத் தத்தா, பூபேந்திர குமார் தத்தா, மனோரஞ்சன் குப்தா, ரசிக்லால் தாஸ், ஜதீஷ் சந்திர பௌமிக், அருண்சந்திர குஹா, சுதிர்ராய் சௌத்திரி போன்று இவரை வழிநடத்தியவர்களைப் பற்றியும், அவர்களின் செயல்பாடுகளினூடே அறிமுகப்படுத்துகிறார்.
மேற்கண்டவர்களின் செயல்பாட்டைப் இப்புத்தகத்தைப் படிப்பதன்மூலம் அறிய முடியும். பல புதிய செய்திகளை இப்புத்தகம் அளித்துள்ளது.
வங்கமொழியில் வந்த இப்புத்தகத்தை அருமையாக சலிப்பில்லாமல் வாசிக்கும் அளவுக்கு அய்யா. சு. கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார். அலைகள் வெளியீட்டகம் வழங்கிய நல்ல நூல்! நீங்களும் வாசியுங்கள்!
*****
நூல் : இந்திய விடுதலைப் போரில் பெண் போராளிகள்
ஆசிரியர் : கமலா தாஸ் குப்தா
மொழிபெயர்ப்பு : சு. கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம்
விலை : ரூ. 120/-
நூலறிமுகம் எழுதியவர் : ராஜேந்திரன் தங்கவேலு