நேரத்தை சேமிக்கும் வகையில், மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு வெளியூர் செல்லும் தலைவர்கள், ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவது வழக்கம்.
தேர்தல் காலகட்டங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசார பயணத்துக்கு ஹெலிகாப்டர்களின் தேவை அதிகரிக்கும்.
தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் பிரசாரம் செய்வதற்கு அதிகளவில் ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவார்கள்.
இப்போதைய தேர்தலில், மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் அதிகளவில் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதனால் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களுக்கு, மக்களவைத் தேர்தல் ‘ஜாக்பாட் ‘டாக அமைந்துள்ளது.
வாடகை விவரம்
ஹெலிகாப்டர்கள் மணிநேர அடிப்படையில் வாடகைக்கு விடப்படுகின்றன. ஏழு நபர்கள் அமரக்கூடிய ஒற்றை இன்ஜின் கொண்ட ‘BEL 407’ ஹெலிகாப்டருக்கான ஒரு மணி நேர வாடகை, ஒன்றரை லட்சம் ரூபாய்.
எட்டு நபர்கள் அமரக்கூடிய இரட்டை என்ஜின் கொண்ட ‘AUGUSTA AW 109’ ஹெலிகாப்டருக்கான கட்டணம் 3 லட்சம் ரூபாய்.
15 பேர் வரை அமரக்கூடிய ‘AUGUSTA WEST LAND’ ஹெலி காப்டரின் ஒரு மணி நேர கட்டணம், 4 லட்சம் ரூபாய்.
கடந்த தேர்தலின்போது, வழக்கத்தைவிட 20 முதல் 30 சதவீதம் வரை ஹெலிகாப்டர் நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தன. இந்தத் தேர்தலில் கூடுதலாக 50 சதவீதம் வரை வசூலித்துள்ளன.
ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்காத நிலையில், மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் ஹெலிகாப்டர் பயணத்தைத் தேர்வு செய்ததால், இவற்றின் தேவை அதிகரித்துள்ளது.
தேர்தல்களின் போது, ஹெலிகாப்டர் நிறுவனங்கள் 45 முதல் 60 நாட்கள் வரையிலான நீண்ட கால வாடகைக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன.
பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஹெலிகாப்டர்களை, முன்கூட்டியே வாடகைக்கு எடுத்து விடுகின்றன.
ஒப்பந்தங்களில் குறைந்தபட்ச உத்தரவாதமாக, ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று மணி நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தினாலும் சரி, பயன்படுத்தாவிட்டாலும் சரி, இந்த நேரத்திற்கான கட்டணத்தை செலுத்தியே தீரவேண்டும்.
60 நாட்களுக்கு வாடகை எடுக்கப்படும்பட்சத்தில், 180 மணிநேரத்துக்கான வாடகையை கொடுத்துவிட வேண்டும்.
ஒரு மணி நேரத்திற்கு 3 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும் பட்சத்தில், 180 மணி நேரத்திற்கு, குறைந்தபட்சம் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை செலுத்த வேண்டும்.
அனைத்து விதமான ஹெலிகாப்டர்களையும் கணக்கில் சேர்த்தால் நாட்டில், மொத்தம் 200 ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன.
இந்தத் தேர்தலில் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு கொடுக்கும் நிறுவனங்கள் 400 கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
– மு.மாடக்கண்ணு
#பா.ஜ.க. #காங்கிரஸ் #மக்களவைத்_தேர்தல் #ஹெலிகாப்டர் #BEL_407 #AUGUSTA_AW_109 #AUGUSTA_WEST_LAND #Politicians #Helicopter_Rent #Lok_sabha_Elections_2024 #Helicopter_operators #bjp #congress #அரசியல்_தலைவர்கள்