சில திரைப்படங்கள் வித்தியாசமான முயற்சி என்ற அடையாளத்தைத் தாங்கி வெளியாகும். அவற்றில் சில படங்கள் அந்த எல்லையைத் தாண்டிவிடாமல் நின்றுவிடும். மிகச்சில மட்டுமே வித்தியாசமான படம் என்று ரசிகர்களால் அங்கீகரிக்கப்படும்; காலம்காலமாகக் கொண்டாடப்படும்.
வெற்றி, அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா நடிப்பில், முருகன் இயக்கியுள்ள ‘பகலறியான்’ படம் பற்றிக் கேள்விப்பட்டபோது மேற்சொன்ன விஷயமே நினைவுக்கு வந்தது. டைட்டிலை கேட்டவுடன் இது வித்தியாசமான முயற்சி என்றே முதலில் தோன்றியது.
படம் பார்த்து முடிந்த பின்னர் நம்முள் தோன்றுவது என்ன? இது வெறும் வித்தியாசமான முயற்சியாக மட்டும் தென்படுகிறதா அல்லது வித்தியாசமான படைப்பாக உள்ளதா?
இரண்டு தேடல்கள்!
தங்கை மைதிலியைக் காணவில்லை என்று ரவுடி சைலண்டும் (முருகன்) அவரது ஆட்களும் சென்னை முழுக்கத் தேடி வருகின்றனர். மைதிலி தனது காதலன் உடன் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றதே அதற்குக் காரணம்.
அந்த சம்பவத்தைப் பயன்படுத்தி, மைதிலியை அவரது காதலனிடம் இருந்து பிரித்து கடத்தி வரத் திட்டமிடுகிறது சைலண்டுக்கு எதிரான ஒரு ரவுடி கும்பல்.
அதேநேரத்தில், தனது காதலியை அழைத்துக்கொண்டு பெங்களூரு செல்கிறார் வுல்ஃப் (வெற்றி).
அவரது நண்பர் பைக் பாஸ்கர், அவர்கள் இருவரும் செல்வதற்காக ஒரு காரை தந்தனுப்புகிறார்.
‘போகிற வழியில் எதுவும் கிறுக்குத்தனமா யோசிக்காத’ என்று சொல்லி அனுப்புகிறார்.
நண்பன் ஒருவனிடம் பணம் வாங்கிக்கொண்டு, விடிவதற்குள் பெங்களூரு சென்றடையலாம் என்று தனது காதலியிடம் சொல்கிறார் வுல்ஃப். ஆனால், வழியிலேயே அப்பெண்ணை மயக்கமடையச் செய்ய இரண்டு தூக்க மாத்திரைகள் வாங்குகிறார்.
இன்னொரு புறம் சைலண்ட் தனது தங்கையையும் அவரது காதலரையும் கண்டறிந்து பிடித்து வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார்.
இரண்டு பக்கமும் தேடல்கள் நிகழ்கின்றன. எதிரெதிர் திசைகளில் இருந்து ஒரு புள்ளியை நோக்கி நகரும் சைலண்டும் வுல்ஃபும் நேருக்கு நேராகச் சந்தித்துக் கொண்டார்களா? அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது ‘பகலறியான்’ படத்தின் மீதி.
பெரிது பெரிதாகக் காட்சிகள், கொஞ்சமாய் வசனம், மிகச்சில பாத்திரங்களின் இருப்பு என்று நகர்கிறது ‘பகலறியான்’. இக்கதையின் பின்பாதியில் ஒரு திருப்பம் வருகிறது. அதனை மட்டுமே நம்பி இந்த படத்தை ஆக்கியிருக்கிறார் இயக்குனர் முருகன்.
வித்தியாசமான முயற்சி!
‘பகலறியான்’ படத்தின் பெரும்பகுதி இரவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதனால் ஒரு சில பாத்திரங்களே திரையில் வந்து போகின்றன. பின்னணியில் ஆட்களோ, செட்களோ பெரிதாக இடம்பெறவில்லை.
அபிலாஷ் பிஎம்ஒய்யின் ஒளிப்பதிவு இரவு நேரத்து சென்னையை அழகுறக் காட்டியிருக்கிறது.
குரு பிரதீப் படத்தொகுப்பைக் கையாண்டிருக்கும் விதம் முன்பாதியை வேகவேகமாக நகர்த்துகிறது.
கோபி கருணாநிதியின் கலை வடிவமைப்பு, ரவுடித்தனத்தைத் தொழிலாகக் கொண்டவர்களின் வாழ்வைக் காட்ட முயற்சித்திருக்கிறது.
ராம் குமாரின் சண்டை வடிவமைப்பில் சினிமாத்தனமான அடிதடி பெரிதாக இல்லை.
விவேக் சரோ இதன் இசையமைப்பாளர். ‘நீ ராட்சசனோ’ பாடல் அவரது இசையில் சட்டென்று நம்மோடு ஒட்டிக் கொள்கிறது. பின்னணி இசையில் கூட, ஆங்காங்கே நம்மை பயமுறுத்தியிருக்கிறார்.
விக்னேஷ் குணசேகர் உடன் இணைந்து படத்தின் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் முருகன். அவரே சைலண்ட் எனும் பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
பெரிதாக முகபாவனைகளை வெளிப்படுத்தாமல் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக திரையில் தென்படுகிறார். அதற்கேற்றவாறு நீண்ட தலைமுடி, தாடி என்று இருக்கிறார். அதைத் தாண்டி வேறு வேலைகளை அவர் செய்யவில்லை.
இந்தக் கதையில் இரண்டு தேடல்கள் இருந்தபோதும், அவை முடியுமிடம் ஒன்றாக இருக்குமா, வெவ்வேறா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.
படத்தின் முடிவில் அதற்கு விடை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
ஜீவி, 8 தோட்டக்கள், பம்பர் போன்ற வித்தியாசமான படங்களைத் தந்த வெற்றி, இதில் நாயகன். முந்தைய படங்கள் போல அடர்ந்த தாடியுடன், இறுக்கமான முகத்துடன் படம் முழுக்க வந்து போயிருக்கிறார்.
சீரியல்களில் நாயகியாக வரும் அக்ஷயா கண்டமுதன் இப்படத்தின் நாயகி. ‘நீ ராட்சசனா’ பாடலில் அவர் வந்து போகுமிடங்கள் அழகாக உள்ளன.
அளவாய் நடித்து, ‘ஓகே’ என்று ரசிகர்கள் சொல்லும் விதமாகத் திரையில் வாழ்ந்திருக்கிறார்.
சாய் தீனா இதில் இன்ஸ்பெக்டராக வருகிறார். சாப்ளின் பாலு இதில் ரவுடியாகவும் முன்னாள் சவக்கிடங்கு ஊழியராகவும் வந்து போயிருக்கிறார்.
இவர்களது பாத்திரங்கள் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை ‘ஹைலைட்’ செய்யும்விதமாகக் காட்சிகள் இல்லை.
இவர்கள் தவிர்த்து ரவுடிகளின் அடியாட்கள் என்று சுமார் 3 டஜன் பேராவது திரையில் உலாவியிருப்பார்கள்.
அயர்வுற வைக்கும்!
‘வித்தியாசமான முயற்சி’ என்றளவில் கவனம் பெற்ற ‘பகலறியான்’, அதைத் தாண்டி எதையும் செய்யவில்லை. இதற்கு மேல் சொல்வதெல்லாம் ‘ஸ்பாய்லர்’ வகையில் சேரும்.
கதை இரு வேறு கிளைகளாகப் பிரிந்து பயணித்தபோதும், அவை முடியும் புள்ளி ஈர்க்கும் வகையில் அமைய வேண்டும். இதில் அந்த புள்ளி முத்தாய்ப்பாக இல்லை.
அது போதாதென்று ஒரு கிளைக்கதை மிகச்சோகமான முடிவைக் கொண்டுள்ளது.
நல்லதொரு கிளைமேக்ஸ் உடன் அதற்கு ‘தி எண்ட்’ போட்டிருக்கலாம். ஆனால், ஏனோ அதனை இயக்குனர் செய்யவில்லை.
உண்மையைச் சொன்னால், கொஞ்சம் பெரிய குறும்படமாக வந்திருக்க வேண்டிய கதை இது.
கேங்க்ஸ்டர், த்ரில்லர் படங்களுக்கான ட்ரீட்மெண்டில் இரு வேறு கிளைக்கதைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதாகக் காட்டி, ரசிகர்களிடத்தில் பரபரப்பை ஊட்ட முயற்சித்திருக்கிறது படத்தின் காட்சியாக்கம்.
சாப்ளின் பாலு, சாய் தீனா போன்ற நடிகர்களைச் சற்றே வித்தியாசமான கோணங்களில் காட்டியுள்ள படம் என்பதைத் தாண்டி இந்த ‘பகலறியான்’ பெரியளவில் ஈர்ப்பை உருவாக்கவில்லை.
- உதயசங்கரன் பாடகலிங்கம்
#பகலறியான்_விமர்சனம் #இயக்குனர்_முருகன் #வெற்றி #அக்ஷயா_கந்தமுதன் #சாப்ளின்_பாலு #சாய்_தீனா #Pagalariyaan_movie_review #director_murugan #vetri #akshaya_kanthamuthan #saplin_balu #sai_dheena