இயக்குநராக வேண்டும் என்கிற கனவில் இயக்குநர் மணிரத்னமிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார் கார்த்தி. பின் அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
முதல் படத்தில் கார்த்தி அளவிற்கு பாராட்டுக்களை குவித்த நடிகர்கள் வெகு சிலர். சிவகுமார் , சூர்யா போன்ற நடிகர்கள் அவர் குடும்பத்தில் இருந்தாலும் நடிப்பிற்கு தொடர்பே இல்லாதவராக தான் கார்த்தி இருந்துள்ளார்.
பெரும்பாலும் முதல் படத்தில் நடிப்பவர்கள் அவர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய கதைகளையே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் தனக்கு எந்த விதத்திலும் சம்மந்தம் இல்லாத மதுரையைச் சேர்ந்த ஒருவனாக பருத்திவீரன் படத்தில் அவர் நடித்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.
ஆக்ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என எல்லா காட்சிகளிலும் தன்னால் இயல்பாக நடிக்க முடியும் என்று இப்படத்தில் நிரூபித்தார்.
சகுனி, ஆல் இன் ஆல் அழகுரஜா, காஷ்மோரா போன்ற படங்கள் தோல்வி படங்களாக அமைந்தாலும் இப்படத்தில் கார்த்தியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
தொடர்ந்து நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன், பையா என வெவ்வேறு விதமான கதைகளில் நடித்து தன்னுடைய திறமைக்கு சவால் விட்டுக் கொண்டே இருந்தார்.
தீரன், மெட்ராஸ், கைதி, பொன்னியின் செல்வன் என இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
மக்கள் நல பணிகள்
நடிப்பு தவிர்த்து பல்வேறு சமூக செயற்பாடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளின் போது மக்களுக்கு உணவு வழங்குவது என ரசிகர் மன்றம் வழியாக பல்வேறு நலப் பணிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் இந்த ஆண்டும் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் முதல் அன்ன தானம் வரை பல முன்னெடுப்புகளை கார்த்தியின் ரசிகர் இயக்கம் செய்துள்ளது.
மெய்யழகன்
நடிகர் கார்த்தியின் 27-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தினை சூர்யா – ஜோதிகாவின் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், அரவிந்த் சாமி இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
மேலும் இப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா, சீரியல் நடிகை சுவாதி ஆகியோர் நடிப்பதாகவும் படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.
– ராகேஷ் தாரா
நன்றி: ஏபிபி நாடு இதழ்.