பணத்தை விட அன்பும் சேவையுமே உயர்ந்தவை!

அன்னை தெரசா

அன்னை தெரசாவைப் பற்றி கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து பகிர்ந்து கொண்டவை:

1991-92ம் வருடங்களில், ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாடுவதற்கு ஊதியமாக எங்களுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படுவது வழக்கம்.

ஒருமுறை கல்கத்தாவில் நடந்த ஒரு போட்டியின்போது அப்படி எனக்குக் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு, அன்னை தெரசாவை சந்திக்கச் சென்றேன்.

“எனக்கு அவரை கட்டாயம் சந்திக்கவேண்டும். அவர் செய்துவரும் தன்னலமற்ற சேவைக்காக அவருக்கு இந்தப் பணத்தைக் கொடுத்தேயாகவேண்டும்” என்று எனக்குள் ஓர் உந்துதல் ஏற்பட்டு, அவரது ஆசிரமத்துக்குச் சென்றேன்.

‘Sisters of Charity’ என்ற அந்த அலுவலகம் மிகச்சிறியதாய் இருந்தது. அங்கே இருந்த கன்னியாஸ்திரிகளிடம் ”Where is Mother?” என்று கேட்டேன்.

அதற்கு அங்கே இருந்த ஒரு கன்னியாஸ்திரி, “Mother is at the ‘Home for the dying” என்றார். எனக்கு “Home for the dying” என்று அவர் கூறியதன் பொருள் விளங்கவில்லை. அவர்கள் என்னை அந்த அலுவலகத்தின் பின்புறம் இருந்த ஒரு கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அந்தக் கட்டிடத்தினுள் தங்களது வாழ்வின் கடைசி மணித்துளிகளை எண்ணிக் கொண்டிருக்கும், மரணப்படுக்கையில் இருக்கும் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

நான் உள்ளே நுழைந்தபோது அந்தக் கட்டிடத்தினுள்ளிருந்து ஒரு சகிக்க இயலாத நாற்றம் வந்து கொண்டிருந்தது. அழுகிக் கொண்டிருக்கும் மாமிசத்திலிருந்து வருவது போன்றதான அந்த நாற்றத்தின் நெடி குமட்டலை வரவைத்தது. அதைச் சகித்துக்கொண்டு அந்த சிறிய சந்தின் வழியாக நான் நடந்து சென்று ஒரு அறையை அடைந்தேன்.

அங்கேதான் முதன்முதலாக அன்னைத் தெரசாவைக் கண்டேன். தன் மரணப் படுக்கையிலிருந்த நீண்ட தலைமுடியைக் கொண்ட ஒரு மனிதன் அங்கே படுக்க வைக்கப்பட்டிருந்தான். அவனது உடலில் ஆடை எதுவும் காணப்படவில்லை. ஒரு துணி மட்டும் அவனது இடுப்பின் கீழே போர்த்தப்பட்டிருந்தது.

அவன் உடல்முழுவதும் அழுகி, புண்களில் இருந்து சீழ் வடிந்து கொண்டிருந்தது. அன்னை, மிகுந்த அன்புடன் அந்தப் புண்களில் வழிந்து கொண்டிருந்த சீழை ஒரு துணியினால் துடைத்துக் கொண்டிருந்தார். அவன் மிகுந்த வேதனையில் துடித்துக் கொண்டிருந்தான். அவன் உடலிலிருந்து வந்த நாற்றம் என் குடலைப் புரட்டியது.

ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. அந்தக் கட்டிடத்தினுள் இருந்து நான் வயிற்றைப் பிடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தேன். அங்கிருந்த சாக்கடையில் பெரும் குமட்டலுடன் வாந்தியெடுத்தான்.

பத்து நிமிடங்கள் கழித்து அன்னை தெரசா என்னிடம் வந்தார். புன்னகையுடன், “Yes My Son” என்றார். “Mother I wanted to meet you” என்றேன். “Come my son! Follow me!“’ என்றவர் நடக்கத் துவங்கினார். அலுவலகம் வந்தோம்.

நான் மனம் நிறைய அகங்காரத்துடன் என் பாக்கெட்டிலிருந்த பத்தாயிரம் ரூபாயை எடுத்தேன். அங்கிருந்த மேஜையின் மேல் வைத்தேன். அவரை வணங்கி, “Mother.. You are an Instrument of Good… I have come here to assist you. I would be really obliged if you accept this” என்றேன்.

அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தவாறு, “Son.. I don’t need your money. I need your time. Can you spend time with these people? Can you give me some days where you can nurse them?” என்றார். என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

‘இவ்வுலகில் இப்படி உள்ளம் கொண்ட மனிதர்களும் இருக்கிறார்களா? நான் கொடுக்கும் பணத்தை மறுத்து, என்னை வந்து இந்த நோயாளிகளுடன் நேரம் செலவிடச் சொல்கிறாரே?’ என்று உறைந்துபோனேன்.

அந்த நாற்றத்தினுள் இரண்டு நிமிடங்கள் என்னால் நிற்கக் கூட இயலவில்லை. நான் எங்கிருந்து அவர்களுக்கு சேவை செய்வது?

‘That was a life changing story for me…‘

‘பணம் கொடுத்து யாருக்கும் உதவி செய்துவிடலாம்’ என்ற என் எண்ணம் அன்று சுக்கு நூறாகிப்போனது. ’பணத்தை விட அன்பும், நாம் பிறர்க்கு செய்யும் சேவையும் மிக மிக உயர்ந்தவை’ என்று அன்னை தெரசா அன்று எனக்கு உணர்த்தினார்.

 

#கிரிக்கெட்_வீரர்_நவ்ஜோத்சிங்_சித்து #cricket_player_Navjot_Singh_Sidhu #நவ்ஜோத்_சிங்_சித்து #Mother_Teresa #அன்னை_தெரசா #Navjot_Singh_Sidhu

 

cricket player Navjot Singh SidhuMother TeresaNavjot Singh Sidhuஅன்னை தெரசாகிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துநவ்ஜோத் சிங் சித்து