யதார்த்தத்தையும் மனித உணர்வுகளையும் பிரதிபலிக்கும் திரைக்கதைகளில் தன்னை ஒரு பாத்திரமாக மட்டுமே வெளிப்படுத்திக் கொள்வதில் தான் ஒரு ஜித்தன் என்று பல ஆண்டுகளாக நிரூபித்து வருகிறார் மம்முட்டி.
அதற்கு இணையாக அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். ஆனால், சமீபகாலமாக அவர் ஹீரோயிசம் காட்டிய படங்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
அதேநேரத்தில், வித்தியாசமான நாயக பாத்திரம், கதைக்களம், திரைக்கதை வார்ப்போடு கூடிய அவரது படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘காதல் தி கோர்’, ‘கன்னூர் ஸ்குவாட்’ என்று பல படங்களை அதற்கு உதாரணம் சொல்ல முடியும்.
இந்தச் சூழலில், அவர் மீண்டும் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கியிருக்கும் படமே ‘டர்போ’. விசாக் இயக்கியுள்ள இப்படத்திற்கு மிதுன் மேனுவல் தாமஸ் எழுத்தாக்கம் செய்துள்ளார்.
இந்தப் படம் எப்படியிருக்கிறது?
தற்செயலாக நிகழ்ந்த பயணம்!
ஒருநாள், நண்பன் ஜெர்ரி (சபரீஷ் வர்மா) ஒரு பெண்ணைக் காதலிப்பதை அறிகிறார் ஜோஸ். அப்பெண்ணின் பெயர் இந்துலேகா (அஞ்சனா ஜெயபிரகாஷ்).
இந்துவின் சம்மதமில்லாமல் அவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாகக் கேள்விப்படுகிறார் ஜோஸ். ஜெர்ரிக்குத் தகவல் தெரிவிக்காமல், அப்பெண்ணை அழைத்துச் செல்ல முயல்கிறார். அந்த நேரத்தில், அவரது வீட்டில் இருக்கும் உறவினர்களோடு ஜோஸ் சண்டையிடுகிறார். அவர்களில் சிலர் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள். அதனால், அடுத்த நிமிடமே போலீசில் புகார் பதிவாகிறது.
இந்துவை ஜெர்ரியின் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் ஜோஸ். ஆனால், இதயநோயாளியான தந்தைக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடாது என்றெண்ணும் ஜெர்ரி, ‘இந்த பெண்ணை யார் என்றே தெரியாது’ என்கிறார். அதையடுத்து, மீண்டும் வீடு திரும்ப முடியாத நிலைக்கு ஆளாகிறார் இந்துலேகா.
ஜாமீனில் வெளிவர இயலாத பிரிவுகளில் புகார் பதிவான காரணத்தால், ஜோஸும் உடனடியாக வீடு திரும்ப முடியாத இக்கட்டில் மாட்டிக்கொள்கிறார். அவரது தாய் ரோசாக்குட்டியோ, ‘அந்த பெண்ணை அவரது வீட்டில் விட்டுவிட்டு இங்கு வா’ என்கிறார்.
சென்னையிலுள்ள வங்கியொன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார் இந்துலேகா. அதனால், அவர் தனது பெற்றோரிடம் செல்லாமல் நேராகச் சென்னைக்குப் பயணிக்கிறார். அவருடன் ஜோஸும் சேர்ந்து செல்கிறார்.
சென்னையில் தெரிந்தவர்கள், நண்பர்கள் யாருமில்லாமல் முதலில் திணறினாலும், பிறகு இந்துவின் சிபாரிசில் ஒரு நிறுவனத்தில் ஜோஸுக்கு வேலை கிடைக்கிறது.
ஜெர்ரியும் இந்துலேகா போன்று ஒரு வங்கியில் மேலாளராகப் பணியாற்றுபவர் தான். சென்னை திரும்பிய பிறகு பலமுறை இந்துவை நேரில் கண்டு, தனது தரப்பு நியாயங்களைச் சொல்ல முயல்கிறார் ஜெர்ரி. ஆனால், அவரோ அதனைக் கேட்பதாக இல்லை.
சில நாட்கள் விடுப்புக்குப் பிறகு பணிக்குத் திரும்பிய ஜெர்ரி, இறந்துபோன ஒருவரின் வங்கிக்கணக்கில் இருந்து எழுபது லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருப்பதாக ஒரு குடும்பம் புகார் கடிதம் தந்திருப்பதைக் காண்கிறார். ஜெர்ரியின் ‘பாஸ் கீ’யை பயன்படுத்தி அந்த மோசடி நிகழ்ந்திருப்பதாகச் சொல்கிறார் அவருடன் பணியாற்றும் சித்தாரா.
அது போன்று பல வங்கிக்கணக்குகளில் அந்த வங்கியிலுள்ள சில பணியாளர்களின் ‘பாஸ் கீ’யை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததைக் கண்டறிகிறார் ஜெர்ரி. பணம் மாற்றப்பட்ட வங்கிக்கணக்குகள் அனைத்தும் போலியானவை என்றும் அறிகிறார்.
அந்தப் பணம் எங்கே சென்றது என்றறியும்போது, சென்னையைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர் வெற்றிவேல் சண்முகசுந்தரம் (ராஜ் பி ஷெட்டி) குறித்து ஜெர்ரிக்குத் தெரிய வருகிறது.
நடந்த முறைகேடு குறித்து தன்னால் முடிந்த அளவுக்குத் தகவல்களைத் திரட்டியவர், அது பற்றி தனது மேலதிகாரியிடம் கூறுகிறார். அந்த விஷயம் பற்றி காவல் துறையினரிடம் புகார் தெரிவிப்பதற்கு முன்பாக, இந்துவை நேரில் சந்தித்து அது பற்றிப் பேச முனைகிறார். ஆனால், ஜெர்ரி மீதிருக்கும் தனிப்பட்ட கோபம் காரணமாக, அவரைச் சந்திக்க மறுக்கிறார் இந்துலேகா.
அன்றிரவே, ஜெர்ரி இறந்து போகிறார்.
ஜோஸ் தங்கியிருக்கும் பிளாட்டில், தூக்கிலிட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. நடந்தது தற்கொலை என்றே போலீசில் பதிவாகிறது. ஆனால், ‘அது ஒரு கொலை’ என்று ஜோஸ், இந்துலேகாவிடம் சொல்கிறார் சித்தாரா. கூடவே, வெற்றிவேலின் மோசடி குறித்து தாங்கள் அறிந்த உண்மைகளையும் கூறுகிறார்.
வெற்றிவேலை எதிர்க்கத் தங்களது பலம் போதாது என்றெண்ணும் ஜோஸ், அனைவரும் சொந்த ஊருக்குச் செல்வதே நலம் என்று கூறுகிறார். ஆனால், இந்துவோ ‘ஜெர்ரி சேகரித்த தகவல்களைக் கொண்டு போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும்’ என்பதில் விடாப்பிடியாக நிற்கிறார்.
அவர்கள் புகார் தெரிவித்த அடுத்த கணமே, வெற்றிவேலுக்குப் பல திசைகளிலும் ஆட்கள் இருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது.
புகார் தெரிவிக்கச் சென்ற ஜோஸும் இந்துலேகாவும் உயிர் பிழைத்தார்களா? அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
இடுக்கியை விட்டு எங்கும் நகரமாட்டேன் என்றிருக்கும் ஜோஸ், சென்னைக்குத் தற்செயலாகப் பயணம் மேற்கொள்வதில் இருந்து திரைக்கதை சூடு பிடிக்கத் தொடங்குகிறது. பிறகு தமிழக அரசியலில் நிகழும் மாற்றங்களுக்கு கதை தாவுகிறது. அதற்கடுத்து வரும் வெற்றிவேலின் அறிமுகம், திரைக்கதையை பரபரவென்று நகர்த்துகிறது.
திருப்தி ’மிஸ்ஸிங்’!
நீண்ட நாட்கள் கழித்து மம்முட்டியின் ஆக்ஷன் அவதாரத்தை இதில் காண்கிறோம். அவரது வயதோ, தோற்றமோ அதற்குக் கொஞ்சமும் இடைஞ்சலாக இல்லை என்பதே அவரது நடிப்புத்திறனுக்கான பாராட்டு.
சபரீஷ், அஞ்சனா ஜெயபிரகாஷ், பிந்து பணிக்கர், திலேஷ் போத்தன் போன்றவர்களோடு ‘மெட்ராஸ்’ நந்தகுமார், அருள்தாஸ், நமோ நாராயணா உள்ளிட்ட தமிழ் முகங்களும் கூட தலைகாட்டியிருக்கின்றனர். தெலுங்கு நடிகர் சுனில் இதில் காமெடி வில்லனாக வந்து போயிருக்கிறார். அவரது பாத்திரத்திற்கு பில்லா என்று பெயர் வைத்திருப்பதை என்னவென்று சொல்ல..?
கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி இதில் வெற்றிவேல் ஆக வந்து போயிருக்கிறார். முகபாவனை, உடல்மொழி மிரட்டலாக இருந்தாலும், தனது தமிழ் உச்சரிப்பில் நம்மை விரட்டப் பார்க்கிறார் மனிதர். அதேநேரத்தில், மலையாள வசனங்களைக் கனகச்சிதமாக உச்சரித்திருக்கிறார்.
அஞ்சாம் பதிரா, ஆப்ரகாம் ஓஸ்லர் போன்ற ஹிட்டான த்ரில்லர் படங்களின் இயக்குனரான மிதுன் மேனுவல் தாமஸ், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார்.
இறந்து போனவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தைத் திருடி, ஊழல் மோசடிகளில் அதனை ஒரு கும்பல் பயன்படுத்துவதாகச் சொல்லியிருப்பதுதான் இப்படத்தின் சிறப்பம்சம். பரபரவென்று நகரும் ஒரு ஆக்ஷன் திரைக்கதைக்குத் தேவையான கச்சாப்பொருளாகவும் அதுவே உள்ளது.
பின்னணி இசை தந்த கிறிஸ்டோ சேவியர், கமர்ஷியல் படத்திற்குத் தேவையான காட்சியாக்கத்தைக் கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா, பரபரவென்று நகரும் காட்சிகளைச் சீராகக் கோர்த்திருக்கும் படத்தொகுப்பாளர் சமீர் முகம்மது, காட்சிகளின் தன்மைக்கு ஏற்றவாறு களங்களை அமைத்திருக்கும் தயாரிப்பு வடிவமைப்பாளர் ஷாஜி நடுவில் மற்றும் ஆடை வடிமைப்பாளர்கள் மெல்வி ஜே, அபிஷித், ஒலிக்கலைவையைக் கையாண்டிருக்கும் எம்.ஆர்.ராஜகிருஷ்ணன் என்று பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் தங்களது உழைப்பைச் சரியான அளவில் தந்திருக்கின்றனர்.
சண்டைப்பயிற்சி இயக்குனர் பீனிக்ஸ் பிரபு, மம்முட்டியின் உடல்வாகுக்கும் வயதுக்கும் ஏற்ற வகையில் அக்காட்சிகளை வடிவமைத்திருப்பது சிறப்பு. ஆனாலும், தற்போதைய ட்ரெண்டில் இருந்து அந்த ஷாட்கள் வேறுபட்டிருப்பதால் பழைய படங்களைப் பார்த்த உணர்வு மேலெழுகிறது.
இந்தப் படத்தை இயக்கியவர் விசாக். இவர் ஏற்கனவே ‘போக்கிரி ராஜா’வில் மம்முட்டியையும், ‘புலிமுருகன்’ படத்தில் மோகன்லாலையும் இயக்கியவர். இரண்டுமே பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் குவித்த படங்கள். அந்த வகையில் மம்முட்டியைத் திரையில் கண்டு கொண்டாடும்விதமாகப் பல தருணங்களை அவர் இதில் அமைத்திருக்கிறார்.
அடுத்த பாகம் உண்டா?!
ஜெர்ரி – இந்துலேகா காதல், தமிழக அரசியலில் வெற்றிவேல் செலுத்த முயலும் ஆதிக்கம், வில்லனின் கும்பல் செய்யும் தகிடுதத்தங்கள் போன்றவற்றை இன்னும் விலாவாரியாகக் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மம்முட்டிக்கு இணையான இடத்தை ராஜ் பி ஷெட்டிக்கோ, சுனிலுக்கோ, சபரீஷுக்க்கோ, அஞ்சனாவுக்கோ திரைக்கதை தரவில்லை. அதனைச் செய்திருந்தால் இந்த திரைக்கதை தொட்டிருக்கும் உயரம் வெறொன்றாக அமைந்திருக்கும்.
இப்படத்தின் இறுதியில் விஜய் சேதுபதியின் குரல் ஒலிக்கிறது. கிட்டத்தட்ட ‘விக்ரம்’ படத்தில் வரும் சூர்யாவின் தோற்றம் போன்றே, அவரது குடல் ‘டர்போ’வில் இடம்பெற்றிருக்கிறது.
ஆனாலும், தியேட்டரில் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது. அதுவே, அடுத்த பாகம் இப்படத்திற்கு உண்டா என்ற கேள்விக்குப் பதிலளிக்கிறது.
‘இது ஒரு பெர்பெக்டான கமர்ஷியல் படமா’ என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும். சில ஷாட்கள் குழந்தைகளுக்குக் காட்ட முடியாத அளவுக்கு வன்முறையைக் கொண்டுள்ளன.
இன்று தமிழ், தெலுங்கு படங்களில் இடம்பெறும் வன்முறையைக் காட்டிலும் அதன் அளவு குறைவே. அது போன்ற பலவீனங்களை மீறி, மம்முட்டியின் ‘ஜோஸ்’ பாத்திர உருவாக்கம் மிகக்கடினமானது என்று புரிய வைத்த வகையில் நம்மை ஈர்க்கிறது இந்த ‘டர்போ’!
– உதய் பாடகலிங்கம்
#turbo_malayalam_movie_Review #Vyshak #Mammootty #டர்போ_விமர்சனம் #விசாக்
#மிதுன்_மேனுவல்_தாமஸ் #mithun_menuvel_thomas
#பிந்து_பணிக்கர் #pindhu_panikar
#சபரீஷ்_வர்மா #sabareesh_varma
#அஞ்சனா_ஜெயபிரகாஷ் #anjana_jeya_prakash