திருப்பூர் முதலி பாளையத்தில் உள்ள நிஃப்டி பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்பு கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
அந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு காஸ்டியூம் டிசைனிங் மற்றும் பேஷன் துறையில் படிக்கும் மாணவி கமலி என்பவர், களிமண் மற்றும் அட்டையைக் கொண்டு தத்ரூபமாக ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளார்.
அருகில் வந்து தொட்டுப் பார்த்தால் மட்டுமே இந்த இருசக்கர வாகனம் களிமண்ணால் செய்யப்பட்டது என்பது தெரியவரும் என்ற அளவுக்கு தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
கமலி ஃபேஷன் டிசைனிங் படித்து வந்தாலும் இவருக்கு களிமண்ணை கொண்டு சிற்பங்கள் செய்வதிலே சிறுவயதில் இருந்தே ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது.
இதன் காரணமாக பொன்மொழிகள், தேசத் தலைவர்களின் உருவப்படம் ஆகியவற்றை களிமண் கொண்டு வடிவமைத்துள்ளார்.
இந்த நிலையில்தான் ராயல் என்பீல்டு இருசக்கர வாகனத்தை தத்ரூபமாக வரைந்துள்ளார். இதற்காக 95 கிலோ களிமண்ணை பயன்படுத்தியதாகவும் 157 நாட்களிலே இதனை செய்து முடித்ததாகவும் கமலி கூறியுள்ளார்.
பயணம் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட கமலி, அதனை முன்மாதிரியாக வைத்து இந்த இரு சக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளார். அதோடு ஒரு பறவை எவ்வாறு தன் சிறகை விரித்து ஆனந்தமாய் பறக்குமோ அந்த வடிவத்திலேயே இதற்கு வர்ணமும் சேர்த்துள்ளார்.
கமலி வடிவமைத்துள்ள இந்த இருசக்கர வாகனம் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த இருசக்கர வாகனத்தை தங்களது ஷோரூமில் காட்சிப் பொருளாக வைப்பதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
#royal_enfield #Tirupur_student #ராயல்_என்பீல்டு #திருப்பூர் #கமலி #clay_bike #களிமண்_ராயல்_என்பீல்டு