நுட்பமும் சுத்தமும் பேசும் தேனீக்கள்!

மே 20 – உலக தேனீக்கள் தினம்

‘தேனும் தினை மாவும் தேவர்க்கு அமிர்தம்’, ‘தேன் கூட்டில் கல் எறியலாமா?’, ‘தேனை வழிக்கிறவன் புறங்கையை நக்க மாட்டானா?’ இப்படிப் பல பழமொழிகள் நம்மிடையே இன்றும் புழக்கத்தில் உண்டு.

இனிக்க இனிக்கப் பேசும் நபர்களைத் ‘தேனொழுகப் பேசுவான்’ என்று சொல்வதும் கூட வழக்கமான ஒன்று. ஏதேனும் ஒரு இனிப்பைச் சுவைத்தால், ‘தேன் சுவைக்கு ஈடாகுமா’ என்று மனம் நினைப்பதும் இயல்பு.

இப்படித் தேன் சார்ந்தும், தேனீக்கள் சார்ந்தும் சிந்தனையைச் சிதறவிடும் இயல்பு கொண்ட நமக்கு, அவற்றின் வாழ்வு குறித்து என்னவெல்லாம் தெரியும்?

வாழ்விக்கும் தேனீக்கள்!

பூச்சி இனங்களில் தேனீ மிக முக்கியமானது. வண்டு, எறும்பு, குளவி போன்று இவற்றின் வாழ்வும் இருப்பும் இந்த பூமியில் பல மாற்றங்களுக்கு வித்திடுகிறது. முக்கியமாக, மகரந்தச் சேர்க்கையை நிகழ்த்துவதே இவற்றின் முக்கியப் பணி.

‘மலர் விட்டு மலர் தாவும் வண்டு போல’ என்பது காதலில் வெறுப்பை உமிழ்வதற்குப் பயன்படும் உவமை. ஆனால், அதனை இயல்பைக் கொண்டு தாவரங்களில் இருக்கும் தேனைச் சேகரிக்கின்றன தேனீக்கள்.

ஒன்றில் இருக்கும் மகரந்தத்தை எடுத்து இன்னொன்றில் இட்டு, இரண்டுக்குமான இனப்பெருக்கத்திற்குத் துணை நிற்கின்றன.

தலை, மார்பு, வயிறு என்று மூன்று முக்கியப் பாகங்களைக் கொண்டவை தேனீக்கள். இவை கூட்டமாக வாழ்பவை. ஒரு தேன் கூட்டில் 30,000 முதல் 40,000 தேனீக்கள் வரை இருக்கும். ராணீத் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ என்று இவை மூன்று விதமாக இருக்கும்.

பெண் தேனீக்களான வேலைக்காரத் தேனீக்களே தேன் கூட்டை சுத்தமாகப் பராமரிப்பது, கட்டுவது, தேன் சேகரிப்பில் ஈடுபடுவது போன்றவற்றை மேற்கொள்கின்றன.

ஆண் தேனீக்கள் ராணித்தேனீயோடு இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. அதன்பிறகு அவை இறந்துபோகின்றன.

அதனால் தான் பெறும் உயிரணுக்களைக் கொண்டு சுமார் ராணித் தேனீ ஒரு நாளைக்கு 2,000 முட்டைகள் வரை இடுவதாகச் சொல்லப்படுகிறது.

ஒரு கூட்டில் ஒரு ராணித்தேனீ மட்டுமே இருக்கும். அதற்கு வயதானால் மட்டுமே இன்னொரு ராணித்தேனீ அந்த இடத்தைப் பிடிக்கும்.

அதுவரை உருவாகும் ராணித் தேனீக்கள் ஏற்கனவே தலைமை வகிக்கும் ராணித்தேனீயால் உடனடியாகக் கொல்லப்பட்டுவிடும். பொதுவாக, ஒரு ராணித்தேனீ 2 – 3 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

தேன் கூடுகள் பொதுவாக அறுங்கோண வடிவில் இருக்கும். அவற்றின் வடிவம் மிகநுட்பமாக அமைந்திருக்கும். ராணித்தேனீ மட்டுமே அவற்றில் கழிவுகளை இடும். அது, அக்கூட்டினை விட்டு வெளியேறாது.

வேலைக்காரத் தேனீக்கள் அந்த கூட்டினை சுத்தமாகப் பராமரிக்கும்; இறக்கும் தருவாயில், அதற்கு வெளியே சென்று விடும்.

இவை ஓராண்டுக்கு 150 கிலோ வரை தேன் உற்பத்தியில் ஈடுபடும்.

மலைப்பகுதிகளில் வாழும் மலைத்தேனீ, மரங்கள் மற்றும் புதர்களில் வாழும் கொம்புத்தேனீ, இரண்டுக்கும் இடையே ஒரு நடுவாந்தரமான உருவத்தைப் பெற்றுள்ள அடுக்குத்தேனீ, மிகச்சிறிய அளவில் இருக்கும் கொசுத்தேனீ ஆகியவை இந்தியாவில் வாழ்கின்றன. இவற்றில் அடுக்குத்தேனீ மட்டுமே தேன் வளர்ப்பில் ஈடுபடுத்தப்படுகின்றன.

தேனீக்களின் சிறப்புகள்!

தேனீக்களுக்கு ஐந்து கண்கள் உண்டு என்பது முதல் அவை குறித்த பல்வேறு தகவல்கள் சுவாரஸ்யம் தரும். கிட்டத்தட்ட 150 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக இப்பூமியில் தேனீக்கள் தேன் தயாரிப்பில் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள வெலன்சியாவில் ஒரு குகையில் தேன் கூட்டில் இருந்து தேன் திருடுவது போன்ற ஓவியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது.

இந்தப் பூமியில் சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக தேனீக்கள் மட்டுமே எவ்வித மாற்றங்களுக்கும் உள்ளாகாமல் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

பல்லுயிர் பெருக்கம், உணவுப் பாதுகாப்பு, பயிர் விளைவிப்பு போன்றவற்றில் இவற்றின் பங்கு அளப்பரியது.

தேன் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது. அதனலேயே, பாரம்பரியத் தமிழ் மருத்துவத்தில் அதற்குத் தனியிடம் உண்டு.

பல கசப்பு மருந்துகளை உண்பதற்குப் பயன்படுத்தப்படுவதோடு, உடலின் சீர்மைக்கும் அது பயன்படுகிறது.

தேனை இறுக்கமாக ஒரு கொள்கலத்தில் அடைத்து மண்ணில் புதைத்து வைத்தால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அது கெடாமல் இருக்குமாம்.

தேன் உணவாக மட்டுமல்லாமல், வெளிப்புறமாகவும் கூட மருத்துவப் பயன்பாட்டில் ஈடுபடுத்தப்படுகிறது.

இது குறிப்பிட்ட பாக்டீரியா, பூஞ்சைகளின் கட்டுப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

தோல் பரமாரிப்புக்கான க்ரீம்கள், கைகள் மற்றும் கால்களில் தடவப்படும் லோஷன்கள், லிப்ஸ்டிக்குகளில் தேன் மற்றும் தேன் மெழுகு ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.

உடல் உடனடி ஆற்றலைப் பெறத் தேன் உண்பது பலன் தரும். இது போன்று பல சுவாரஸ்யங்கள் தேனீக்களின் வாழ்வில் புதைந்துள்ளன. அவை மனிதர்களின் கவனிப்பைப் பெறத்தக்கவை.

தேனீக்களுக்கான முக்கியத்துவம்!

இயற்கையில் நிகழும் மகரந்தச் சேர்க்கையைக் கொண்டாடினால் மட்டுமே இப்பூமி காலம்காலமாகத் தழைத்தோங்கும். அதனை உணர்ந்தவர்கள் தேனீக்கள் போன்ற வண்டு இனம் இப்பூமிக்கு ஆற்றிவரும் பங்களிப்பைக் கொண்டாடுவார்கள்.

அதனை உணர்ந்தே, ஒவ்வொரு ஆண்டும் மே 20ஆம் தேதியன்று ‘உலக தேனீக்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது.

தேனீ வளர்ப்பில் பல புதுமைகளை உலகுக்கு அறிமுகப்படுத்திய ஸ்லோவேனியாவின் ஆண்டன் ஜான்சா பிறந்த தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

பூமியைக் காக்கும் தேனீக்கள் உள்ளிட்ட வண்டு இனங்கள் பாதுகாப்பாக வாழ்வதை உறுதிப்படுத்தும் நோக்கிலும், அதற்கேற்ற நடவடிக்கைகளை நாம் செயல்படுத்தும் வகையிலும் இது கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுக்கவிருக்கும் தேனீ வளர்ப்பாளர்கள் மட்டுமல்லாமல் அரசு சார்ந்தும் அதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் சனிக்கிழமையன்று ‘தேசிய தேனீ விழிப்புணர்வு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.

– உதய் பாடகலிங்கம்

World Bee Dayஉலக தேனீக்கள் தினம்
Comments (0)
Add Comment