சென்னை அணி சறுக்கியது எதனால்?

மிகப்பெரிய ஏமாற்றத்தில் இருக்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள். இந்த ஐபிஎல் தொடரில் பட்டத்தை வென்று தந்து தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்வார் என்று எல்லோரும் நம்பிக்கையுடன் இருந்தார்கள்.

ஆனால், ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்வியுடன் அந்த நம்பிக்கை பொய்த்துப் போய் இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்குக் கூட செல்ல முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது.

சிஎஸ்கே அணியின் இந்த தோல்விக்கு என்ன காரணம்? அது எங்கே சறுக்கியது?

டெவன் கான்வேயின் காயம்:

இந்தத் தொடரில் சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சறுக்கியதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதல் காரணம் டெவன் கான்வே.

கடந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்கு வகித்தவர் டெவன் கான்வே.

அவர் தந்த அதிரடியான தொடக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பல ஆட்டங்களில் ஜெயிக்க வைத்தது. ஆனால் இந்த தொடரில் அவர் காயம் காரணமாக ஆட முடியாமல் போனது.

கான்வேக்கு இணையாக ஒரு தொடக்க ஆட்டக்காரர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த தொடரில் கிடைக்கவில்லை.

கான்வே

ருதுராஜுக்கு ஜோடியாக ரஹானே, ரச்சின் ரவீந்திரா, மிட்செல் என்று பல வீரர்களை மாற்றிப் பார்த்தும் ஒருவரும் க்ளிக் ஆகவில்லை.

இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

மற்ற அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியான ஆட்டத்தை தர, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோ, விக்கெட்டை காப்பாற்றவே போராட வேண்டி இருந்தது.

தல தோனியின் உடல்நிலை:

கடந்த ஐபில் தொடார்களில் தோனி எந்த அளவுக்கு அணிக்கு பலமாக இருந்தாரோ, அதே அளவுக்கு இந்த தொடரில் பலவீனமாக இருந்தார். முட்டியில் ஏற்பட்ட காயத்தால் பழைய தோனியாக அவரால் இந்த தொடரில் இருக்க முடியவில்லை.

முன்புபோல் ஓடியாடி ரன்களை எடுக்க முடியாது என்பதால் கடைசி 2 ஓவர்களில் மட்டுமே அவரால் ஆட முடிந்தது. அதிலும் சிக்சர்களுக்கு மட்டுமே கவனம் செலுத்தி சிங்கிள்ஸ் ஓடாமல் தவிர்த்தார்.

தோனியின் காயத்தால் அவருக்கு ஓய்வு கொடுக்கலாம் என்றால் அவருக்கு மாற்றாக ஆடும் டெவன் கான்வேயும் இந்த தொடரில் ஆடவில்லை.

அதனால் தோனியை ஒவ்வொரு ஆட்டத்திலும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்துக்கு சிஎஸ்கே அணியின் மற்ற வீரர்கள் தள்ளப்பட்டிருந்தனர்.

இதனால் அணியைக் காக்கும் வேலையை இதுவரை செய்துவந்த தோனி, இந்த தொடரில் அணிக்கு கடும் சுமையாக மாறிப் போனார்.

முதுகெலும்பில்லாத பந்துவீச்சு:

இந்த தொடரில் அதிக பலவீனத்தை கொண்டிருந்த பந்துவீச்சு சிஎஸ்கேவினுடையதுதான்.

அதிலும் பதிரணா, தீபக் சாஹர், முஸ்தபிசுர் ஆகியோர் பாதியில் காணாமல் போன பிறகு, நம் சிஎஸ்கேவின் பந்துவீச்சு, பல் இல்லாத பாம்பாக மாறிவிட்டது.

குஜராத் டைட்டன்ஸ் அணியே 200 ரன்களுக்கு மேல் அடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது.

பழைய அணுகுமுறை:

இந்த ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளைத் தவிர அனைத்து அணிகளும் பவர் ப்ளேவில் 70 ரன்களையாவது அடிப்பது என்ற அதிரடியான ஃபாமுலாவுடன் வந்தன.

அதற்காக சுனில் நரைன், அபிஷேக் சர்மா, அஸ்வின் என பல வீரர்களை முதல் 10 ஓவர்களில் களம் இறக்கின.

ஆனால், சிஎஸ்கே மட்டும், முதல் 10 ஓவர்களில் விக்கெட்டைக் காப்பாற்றுவது, இரண்டாவது பாதி ஆட்டத்தில் ரன்களைக் குவிப்பது என்ற பழைய ஃபார்முலாவையே கட்டிக்கொண்டு இருந்தது. காலத்துக்கு ஏற்றார்போன்று ஆட்ட முயற்சியை மாற்றாததும் சறுக்கலுக்கு காரணமானது.

ரஹானே மீது அதீத நம்பிக்கை:

இந்தத் தொடரில் ரஹானேவுக்கு அவரது திறமையைவிட அதிகமாக வாய்ப்பு கொடுத்தது சிஎஸ்கே. அவருக்காக அதிரடி வீரர் சமீர் ரிஸ்வியை ஓரம்கட்டியது.

ரஹானே

ஆனால் ரஹானேவோ டி20 போட்டிக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் டெஸ்ட் தரத்தில் ஆடிச் சொதப்பினார்.

பழையை வீரர்களிடம் சென்னை அணி காட்டும் செண்டிமெண்ட் சிஎஸ்கே அணியின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாகி விட்டது.

மேற்கூறிய காரணங்கள் இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் தோல்விகளுக்கான முக்கிய காரணங்கள். அடுத்த ஐபிஎல் தொடரிலாவது இந்த பலவீனங்களை உதறிவிட்டு வந்தால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு நல்லது.

– ரெஜினா சாமுவேல்

Comments (0)
Add Comment