மக்களவைத் தேர்தல்: ரூ.8,889 கோடி பறிமுதல்!

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த நொடியிலேயே நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் அளிப்பதை தடுப்பதற்காக, பறக்கும் படையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 8,889 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கப் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு மட்டும் 3 ஆயிரத்து 958 கோடி ரூபாயாகும்.

 849 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பிற பொருட்கள் மற்றும்  அதன் மதிப்பு விவரம்:

இலவசப் பரிசுப் பொருட்கள் –    ரூ. 2006 கோடி

தங்கள், வெள்ளி போன்றவை – ரூ.1,260 கோடி

மதுபானங்கள் –  ரூ. 815 கோடி

************

பாலிவுட் பிரபலங்கள் அழைப்பு:

தேர்தலில் மும்பை மக்கள் தவறாமல் வாக்களிக்கும்படி பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷய் குமார், ஷில்பா ஷெட்டி, சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஷாருக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பொறுப்புள்ள குடிமக்களாக, வாக்களிக்கும் நமது உரிமையை மகராஷ்டிர மக்கள் இன்று பயன்படுத்த வேண்டும். நாட்டு நலனை மனதில் கொண்டு, நமது கடமையை ஆற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.

**************

கங்கனாவின்  அதிரடி:

பிரபல நடிகை கங்கனா ரனாவத், மக்களவைத் தேர்தலில் இமாசலப்பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால், சினிமாவில் இருந்து விலகிவிடப்போவதாக கங்கனா  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “திரையுலகம் பொய்யானது – அங்கு எல்லாமே போலிதான் – பார்வையாளர்களைக் கவர்வதற்காகப் பொய்யான உலகை உருவாக்குகிறார்கள் – இதுதான் யதார்த்தம்” என குறிப்பிட்டுள்ளார்.

“நான் உணர்ச்சி வசப்படுபவள் – எனவே  நடிப்பு போரடித்தால் கதை, இயக்கம், தயாரிப்பு என்று சென்றுவிடுகிறேன் – இப்போது அரசியலுக்கு வந்துவிட்டேன் – மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால், சினிமாவுக்கு முழுக்கு போட்டு விடுவேன்” என்று கங்கனா  கூறியுள்ளார்.

**************

அமித்ஷா பெருமிதம்:

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அனுராக் சர்மாவை  ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் செய்தார்.

அப்போது, “நரேந்திர மோடி பிரதமராகவும், யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதலமைச்சராகவும் ஆன பிறகு, இந்த மாநிலம் வளர்ச்சி அடையத் தொடங்கியது‘’ என குறிப்பிட்டார்.

“உத்தரபிரதேசத்தில் ஒரு காலத்தில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டன – ஆனால் பிரதமர்  மோடி, புந்தேல்கண்ட் பகுதியில் ராணுவ தளவாட வழித்தடத்தை  உருவாக்கியுள்ளார் – இங்கு பீரங்கி குண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. பாகிஸ்தான் தவறு செய்தால், இங்கு  தயாரிக்கப்படும் குண்டுகள் அந்த நாட்டை அழிக்க பயன்படுத்தப்படும்” என அமித்ஷா தெரிவித்தார்.

-மு.மாடக்கண்ணு

Comments (0)
Add Comment