திறமையாக நடிக்கும் நல்ல நடிகை திருமதி ‘வி.என். ஜானகி அம்மாள்’!
ஏக தடபுடலான விளம்பரங்களை முன்னால் கொண்டு பவனிக்குப் புறப்பட்டிருக்கும் ‘மோஹினி’யைக் காண வேண்டும் என்ற ஆவல் பலருக்கும் உண்டாகியிருக்கும்.
இதே ஆவலுடன் பலர் போன வெள்ளியன்று சென்னையில் நடந்த பிரத்யேகக் காட்சிக்கு வந்து கூடினர்.
மோஹினி ஒரு கற்பனைக் கதை. படம் பார்க்க வருவோரில், உத்சாகத்தோடு திரும்பத் திரும்ப வந்து பார்த்து, படமுதலாளியின் பைகளை முக மலர்ச்சியோடு நிரப்பக்கூடிய சீமான்களையும், சீமாட்டிகளையும் மனதில் கொண்டே இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
கொடுக்கிற பணத்திற்கு, போதும் போதும் என்கிற அளவிற்குப் பெரிய படமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படும், கிராமிய மக்களையும் மோகினியின் சிருஷ்டிகர்த்தர்களான ஜூபிடர் பிக்சர்ஸார் மறந்துவிடவில்லை.
கால்களை மடக்கி நிமிர்த்திக் கொண்டு ஏக்காலத்தில் மூன்று பேர்களைத் தாங்கிக் கொண்டு, அந்தரத்திலே நிற்கக் கூடிய ஒரு அலுமினிய(மாய)க் குதிரை இக்கதையில் வரும் காதலர்களைப் பிரிக்கவும், சேர்க்கவும். சிலரது மனங்களில் புகைச்சலை எழுப்பவும் சிலருக்கு மகிழ்ச்சியை அளிக்கவும் உதவுகிறது.
ஆனால், இப்படம் வெளிவருவதற்கு முன்னால் இக்குதிரையைப் பற்றி வந்த சேதிகள் எவ்வளவு வியப்பை உண்டாக்கி வந்தனவோ, அவ்வளவு ஆச்சரியத்தை இக்குதிரை படத்திலே உண்டாக்கவில்லை.
இந்தக் குதிரையினுள், மோட்டார் வண்டிகளில் உள்ளது போல் கியர்கள், சிறு மோட்டார்கள், லிவர்கள் எல்லாம் வைத்து இதன் கண்கள் வால் முதலியவற்றை அசைக்கவும் மின்சார நிபுணர்களான பிரபல சேதுராமன் கம்பெனிக்கார்கள் வழி செய்திருந்தார்களாம்.
படத்திலே வாலை ஆட்டாது தான் பறக்கிறது குதிரை. அதற்கு முன்னால் ஒரு மின்சார விசிறியையாவது வைத்து அதைப் பறக்க வைத்திருந்தால், மாயத்தோற்றம் இன்னும் பூர்த்தியாக இருந்திருக்கும். குதிரையைக் கீழே இறக்கும் வழி அறியாமலே, இந்த மாயக்குதிரை மீது ஒரு ராஜகுமாரன் ஏறி அமர்ந்து, பறக்கத் தொடங்குகிறான்.
வெகு நேரமான பிறகு களைத்துப் போய் மூர்ச்சிக்கும் சமயம், தற்செயலாக அவனது கை, கீழே இறக்கும் சூச்சத்தில் பட்டு, குதிரை கீழே வந்து ஒரு கன்னி மாடத்தின் மாடியில் இறங்கிற்று என்று காட்டியிருந்தால் நன்றாயிருந்திருக்கும். இதெல்லாம் படத்தில் கிடையாது.
ஒரு ‘ஆள் உயரத்திற்கும் அதிகமாக பளபள என்ற இருக்கிறது இக்குதிரை இதைப்போய் வெட்ட வெளியாக உள்ள ஒரு இடத்திலே, நிறுத்தி வைத்து விட்டு, ‘மலைக்கோவிலில் ஒளித்து வைத்திருக்கிறேன் என்று மோகனுக்கு ஒரு சம்பாஷணையைக் கொடுத்து விட்டார்கள் புதர்களடர்ந்த மரங்கள் நிறைந்த இடத்திலே குதிரையே வைப்பது சிரமமா?த்சு! கதை தானே?
கதை பெரிய கதை! சேலத்துத் தாம்புகயிறு மாதிரி, போகிறது, போகிறது, போய்க் கொண்டே இருக்கிறது. ஓரிரு இடங்களில் கதை முடிந்து போகிறப் போலிருக்கிறது. ஆனால் புதிதாக ஏதோ ஒன்று முளைத்து, கதை மறுபடியும் துளிர்த்து வளருகிறது.
கதையிலே நிறையச் சம்பவங்களிருக்கின்றன. ஏராளமான பாட்டுக்களிருக்கின்றன.
தமாஷும் நிறைய இருக்கிறது. நடனங்களுக்குப் பஞ்சமே இல்லை. நல்லோர் பல கஷ்டங்களுக்கு உள்ளாகி கடைசியில் சுகமடைவார்கள். தீயோர் கடைசியில் தண்டிக்கப்படுவார்கள் என்ற நீதியும் இப்படக் கதையில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
நடிகர்களில் நாலைந்து பேர்கள் நமது கவனத்தைக் கவருகின்றனர். டி.எஸ். பாலையா, ஆர். பாலசுப்ரமண்யம், புளிமூட்டை ராமஸ்வாமி, எஸ்.ஏ. நடராஜன், எம்.என். நம்பியார் ஆகியோரே அவர்கள் நடிகையரில் பாக்கியம், மாதுரிதேவி, வி.என். ஜானகி ஆகிய மூவரும் படம் பார்ப்பவர்கள் முன்னால் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
நம்பியார், பாக்கியம் தமாஷ் ஜோடி ரொம்ப நன்றாக நடித்துப் பாடியிருக்கிறார்கள். நம்பியார், காளிநாத் என்ற மாயக் கலைஞனின் சிஷ்யனாக வருகிறார்.
‘குருதேவா! எல்லாம் உன் தயவு! என்ற பதங்களை அடிக்கடி இவர் உச்சரிக்கிறார். முக்கால் படம் ஆகும் வரை. இப்பதங்கள் எதிர்பார்த்த சிரிப்பையோ கலகலப்பையோ உண்டாக்காது தோல்வியடைகின்றன.
கடைசியிலே சில கட்டங்களில், இந்தப் பதங்களை அசந்தர்ப்பமான இடங்களில் நம்பியார் உபயோகிக்க முயன்ற, அந்த முயற்சியை நசுக்கும் போது தான் சிரிப்பு மூளுகின்றது. ஆர். பாலசுப்ரமணியனுக்கு நல்ல வேஷப்பொருத்தம் இருக்கிறது.
சரியான வில்லான நடிக்கிறார். பாலையா, மாயக் குதிரைக்குப் பூஜை போட்டு, குமாரி என்ற கதாபாத்திரத்தைத் தூக்கிப் போக எத்தனிக்கும் கட்டம் வெகு ஜோர்.
புளிமூட்டை ராமசாமி ஒரு அளவொடு நின்று தமது பேச்சிலும், சிறு அபிநயங்களாலுமே நல்ல பெயர் பெற்று விடுகிறார்.
ஜெய்சிங்காகவரும் நடராஜன் எடுத்ததற்கெல்லாம் ‘பீம்சிங்” என்ற மிடாத்தப்பளை மாதிரி கத்திப் பேசுவது தமாஷாக இருக்கிறது.
நல்ல நடிகர்தான் இவர். பீம்சிங்காகவரும் சாயிராம் குமாரிக்குப் பேயோட்டும் கட்டம் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. எம்.ஜி. ராமச்சந்திரன் நாட் அண்ணாஜிராவ் முஸ்தப்பா முதலியோர் பரவாயில்லை.
நடிகர்களிலே, பாக்கியம் முதற் பரிசு தட்டி விடுகிறார். மாதுரிதேவி நன்றாக நடனமாடுகிறார். வேறு சில பிரபல படங்களின் நடனங்களை நினைப்பூட்டி இருக்கிறது.
இவர் ஆடும் நடனங்களில் பேயாடும் ஸீனில் சங்கோசமில்லாது நடித்திருக்கிறார். சுத்தமாகப் பேசுகிறார். சில கோணங்களில் நல்ல முகவெட்டு இருக்கிறாப்போல் தெரிகிறது. வி.என்.ஜானகியின் குதிரை சவாரியோட தான் படம் ஆரம்பமாகிறது.
உண்மையாகவே குதிரை சவாரி செய்கிறார் என்பது ஒரு விசேஷம், தெளிவாகப் பேசுவது இவரது நடிப்பின் முக்கிய அம்சமாகும். அடக்கமாக கொடுத்ததை தன் திறமைக்கு ஏற்றபடி நடிக்கும். நல்லதொரு நடிகை வி.என். ஜானகி அம்மையார்.
லலிதா, பத்மினி ஆகிய இருவரது நடனம் புது முறையில் நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது. நடன மாளிகையாகவே ஒரே ஸீனில் எடுத்திருக்கிறார்கள்.
இப்படத்தில் வருவோரில் முக்காலே அரைக்கால்வாசிப் பேர்கள் பாடுவதற்கு பிறர் குரலை இரவல் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். குமாரி ரத்னம், கே.வி. ஜானகி, பி. லீலா ஆகியோர்தான் குரல் சப்ளை செய்திருக்கிறார்கள்.
மூவரது பாட்டுக்களும் நன்றாகவே அமைந்திருக்கின்றன. பாட்டு அமைத்தவரும் ட்யூன் போட்டவர்களும் நல்ல வேலை செய்திருக்கிறார்கள்.
சம்பாஷணை பொதுவாக நன்றாக இருக்கிறது. ஆனால், ஒருவன் என்ற பதத்திற்குப் பெண்பாலாக ஒருவன் என்ற தவறான பதத்தை உபயோகிக்கும் தவறை இப்படத்திற்குச் சம்பாஷனை எழுதியவரும் செய்திருக்கிறார்.
ஸீன் ஜோடனைகள் பரவாயில்லை. படப்பிடிப்பு ஒலிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் நன்றாக இருக்கின்றன. டைரக்டர் லங்காசத்யத்திற்கு மோஹினி ஒரு பெயரைப் பெற்றளிப்பாள் என்பதில் சந்தேகமில்லை. ராஜகுமாரி, அபிமன்யு மாதிரி மோஹினியும் ஊர் சுற்றி வருவாள் என்ற தைரியமாகக் கூறலாம்.
ஆனால், சென்னை மாதிரி பெரிய ஊர்களில் இருப்பவர்கள் படம் ரொம்ப நீளம் சில ஸீன்கள் அநாவசியம் என்று சொல்வார்கள். ஆனால், அவர்களை மட்டும் மனதில் கொண்டு படம் பிடிக்க முடியுமா என்ன? மொத்தத்தில் மோஹினியை பெரியாள் மோஹினி என்று அழைக்கலாம்.
1948-ல் வெளிவந்த ‘மோகினி’ திரைப்படம் குறித்து நாரதர் இதழில் வெளியான திரை விமர்சனம்.
நன்றி: தமிழ் சினிமா விமர்சனங்கள் 1931-1960