சிரிக்கச் சிரிக்க ஒரு சீரியசான கதை!

சீரியசான காட்சிகளின்போது பார்வையாளர்கள் சிரிப்பதென்பது ஒருகாலத்தில் வினோதமாகக் கருதப்பட்டதுண்டு. இன்று அதுவே ‘ப்ளாக் ஹ்யூமர்’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், விபின் தாஸ் இயக்கிய ‘ஜெய ஜெய ஜெய ஹே’ படம் ஓடிடி ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மலையாளத்தில் வெளியான அப்படம் பல மொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

முதுகாவ், அந்தாக்‌ஷரி படங்களில் குணசித்திர வேடங்களில் நடிப்பவர்களை முன்னிலைப்படுத்திய விபின் தாஸ், நான்காவதாக இயக்கியுள்ள ‘குருவாயூர் அம்பலநடையில்’ படத்தில் பிருத்விராஜ் உடன் பணியாற்றியுள்ளார். ‘ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தில் நாயகனாக நடித்த பசில் ஜோசப்பும் இதிலுண்டு.

இந்தப் படம் தரும் அனுபவம் எப்படிப்பட்டது?

மச்சான் உறவு!

அரபு நாடொன்றில் பணியாற்றி வருபவர் வினு ராமச்சந்திரன் (பசில் ஜோசப்). அவரது அலுவலகத்தில் பணியாற்றும் குஞ்சுண்ணி (அகில்), தனது பள்ளித்தோழன் ஆனந்துக்கு (பிருத்விராஜ்) கல்யாண வயதில் ஒரு தங்கை இருப்பதாகச் சொல்கிறார். அன்று முதல் ஆனந்த் உடன் வினு மொபைல் வழியே நட்பு கொள்கிறார்.

ஆனந்தின் தங்கை அஞ்சலி (அனஸ்வரா ராஜன்) வினுவைத் திருமணம் செய்யச் சம்மதிக்கிறார். கல்யாண ஏற்பாடுகள் நடக்கின்றன.

அதற்கு முன்னரே, தனக்கு ஒரு காதலி உண்டு என்ற உண்மையை ஆனந்திடம் பகிர்கிறார் வினு. அந்தக் காதலே தன்னைத் திருமணம் செய்யவிடாமல் தடுப்பதாகவும் கூறுகிறார்.

இயல்பில் முரட்டுத்தனம் கொண்ட ஆனந்த், வினுவிடம் தன்னை மெல்லிய மனம் உள்ளவராக வெளிப்படுத்திக் கொள்கிறார். வினுவின் சுபாவம் அவருக்கு ரொம்பவும் பிடித்துப் போகிறது.

தனது தங்கைக்குப் பொருத்தமான வரன் அமைந்ததாக மகிழ்ச்சியடைகிறார். அதேநேரத்தில், ஆனந்த் தனது மனைவியையும் குழந்தையையும் பிரிந்திருப்பதை எண்ணி வருத்தப்படுகின்றனர் அவரது பெற்றோர்.

அதனை அறியும் வினு, தனது மைத்துனர் குடும்பத்துடன் நல்வாழ்வு வாழ வேண்டுமென்று விரும்புவதாகத் தெரியப்படுத்துகிறார். ஆனந்த் தனது மனைவியைக் கவர பல ஐடியாக்கள் தருகிறார்.

டெல்லி அருகே பணியாற்றும் ஆனந்த், திருமணத்தையொட்டி குருவாயூர் திரும்புகிறார். வந்த கையோடு, தனது பெற்றோர் உடன் சென்று மனைவி பார்வதியை (நிகிலா விமல்) வீட்டுக்கு அழைத்து வருகிறார்.

இதற்கிடையே, வினுவும் அரபு நாட்டிலிருந்து இந்தியா வருகிறார். ஆனந்தின் வீட்டுக்குத் தான் கொண்டு வந்த பரிசுப்பொருட்கள் உடன் செல்கிறார் வினு. அவற்றில் ஆனந்த் மனைவிக்காக வாங்கிய சேலையும் ஒன்று.

ஆனந்த், வினு இருவரும் முதன்முறையாக நேரில் சந்திக்கின்றனர்; இது போல உறவு கிடைக்காது என்று மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

அப்போதும் தனது பழைய காதலி மீதான வெறுப்பை உமிழ்கிறார் வினு. ஆனந்த் அவரைச் சமாதானப்படுத்துகிறார்.

அந்த நேரத்தில், அடுக்களையில் சில பணிகளில் ஈடுபடுகிறார் பார்வதி. சில நிமிடங்கள் கழித்து வினுவைக் காணும் அவர் அதிர்ச்சியில் உறைகிறார். அவரும் அவ்வாறே ஆகிறார்.

காரணம், வினு காதலித்த பெண் பார்வதி என்பதே. அந்த நொடியில், ‘இவனா தனது நாத்தனாருக்கு கணவராகப் போகிறவன்’ என்று பார்வதி அதிர்கிறார்.

தனது உயிராக எண்ணும் மைத்துனர் ஆனந்தின் மனைவி இவளா என்று எரிச்சலடைகிறார் வினு.

அதன் தொடர்ச்சியாக, அந்த திருமணத்தை நிறுத்தத் தனது சகோதரன், நண்பனின் உதவியை நாடுகிறார் வினு. தனது இமேஜை முற்றிலுமாக உடைக்கவும் அவர் தயாராகிறார். அவரது பிரயத்தனங்கள் விழலுக்கு இறைத்த நீராகின்றன.

ஒருநாள் வினுவை நேரில் சந்திக்கிறார் அஞ்சலி. அப்போது, அவரிடம் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்கிறார் வினு.

அதற்கு, ‘பார்வதி அண்ணி தான் உங்களது காதலி என்பதுதான் காரணமா’ என்று கேட்கிறார். ‘இந்த கல்யாணம் நடக்கலேன்னா நான் உடைஞ்சு போவேன்கறதை யோசிக்க மாட்டீங்களா’ என்கிறார்.

அதனைக் கேட்டதும் வினுவின் மனம் மாறுகிறது. பார்வதி குறித்த தனது வெறுப்பை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அஞ்சலியை மணக்கத் தயாராகிறார்.

அப்போது, ஆனந்துக்கு வினு – பார்வதி குறித்த உண்மை தெரிய வருகிறது. அவர் எவ்வாறு ரியாக்ட் செய்கிறார், அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

’மச்சான் உறவு இருந்தால் மலையைக் கடக்கலாம்’ என்ற பழமொழி உண்டு. அந்த அளவுக்கு மனைவியின் சகோதரர் உடனான உறவு ஒரு மனிதருக்குப் பக்கபலமாக இருக்கும் என்பதே அதன் அர்த்தம். அதனை மனதில் கொண்ட நாயகன், அவரது மனைவியே தனது பழைய காதலி என்றறிந்து கொள்ளும் ஆற்றாமை தான் இப்படத்தைச் சுவைபட நகர்த்துகிறது.

கலக்கும் ‘காஸ்ட்டிங்’!

பிருத்விராஜ் இதில் நகைச்சுவை நாயகனாக நடித்திருக்கிறார். சீரியசாக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நமக்குச் சிரிப்பை வரவழைக்கின்றன.

பசில் ஜோசப், அப்பாவித்தனமான மாப்பிள்ளையாக வந்து கலகலப்பூட்டுகிறார். சிரித்த முகத்துடன் அவர் வசனம் பேசுகையில் இருக்கையில் இருந்து குதித்தெழுந்து சிரிக்கின்றனர் ரசிகர்கள்.

நிகிலா விமல் இதில் ஒரு நாயகியாக வருகிறார். அவர் தனது தரப்பு நியாயத்தைச் சொல்லும் அளவுக்குக் காட்சிகள் இதிலுண்டு.

அனஸ்வரா ராஜன் இன்னொரு நாயகி. அழகிய மணப்பெண்ணாகத் தோன்றி நம்மை அவர் ஈர்க்கிறார்.

இன்னும் ரேகா, ஜகதீஷ், பைஜு சந்தோஷ், இர்ஷாத் என்று பெரும் நட்சத்திரப் பட்டாளம் உள்ள இப்படத்தில் யோகிபாபுவும் தலைகாட்டியிருக்கிறார். மலையாளத்தில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவே.

அஜு வர்கீஸ், அரவிந்த் ஆகாஷ் ஆகியோரும் இதில் சிறப்புத் தோற்றத்தில் வந்து போயிருக்கின்றனர்.

இந்த படத்தின் சிறப்பே ‘காஸ்ட்டிங்’ தான். பசில் ஜோசப்பின் நண்பர்களாக வருபவர்களும், பிருத்விராஜின் மாமன்களாக வருபவர்களும் இக்கதையை மேலும் சுவாரஸ்யம் ஆக்குகின்றனர்.

நீரஜ் ரவி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவரது பங்களிப்பு திரையில் வண்ணமயமான காட்சியாக்கம் நிகழக் காரணமாகியுள்ளது.

‘ஸ்பிளிட் ஸ்க்ரீன்’ காட்சிகள் உட்படப் பல நுட்பங்கள் மூலமாக, திரையில் காட்சிகளைச் செறிவுடன் காட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஜான்குட்டி.

அங்கீத் மேனன் இசையில் ’கே ஃபார் கல்யாணம்’, ‘கே ஃபார் கிருஷ்ணா’ பாடல்கள் தியேட்டரை அதிர விடுகின்றன. போலவே, திரையில் மிளிரும் ப்ளாக் ஹ்யூமரை மேலும் உயர்த்தும் நோக்கில் பின்னணி இசை அமைந்துள்ளது.

இதன் எழுத்தாக்கத்தைத் தீபு பிரதீப் கையாண்டுள்ளார். இப்படியொரு கதையை அவர் யோசித்த விதமும், அதற்குக் காட்சிகள் அமைத்த விதமுமே இதனை ‘சிறப்பானதொன்றாக’ மாற்றுகிறது.

விபின் தாஸ் இப்படத்தின் இயக்குனர். எழுத்தாக்கத்தில் இருக்கும் உயிர்த்தன்மை கொஞ்சமும் குறைந்துவிடாதபடி, இதன் திரைக்கதை ட்ரீட்மெண்டை அவர் அமைத்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது. சொல்லப்போனால், பார்வையாளர்கள் ஒரு கணம் கூட எரிச்சலில் தலை குனியாதவாறு ஒரு கடினமான கதை சொல்லலை மிக நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார்.

வித்தியாசமான அனுபவம்!

‘குருவாயூர் அம்பலநடையில்’ படத்தின் கதை புதிதல்ல; அதன் காட்சிகளும் கூட அந்த ரகமே. ஆனால், பொருத்தமான நடிகர்களோடு இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப ஒரு சீரியசான கதையைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கும் விதமே இதனை ஒரு வித்தியாசமான காட்சியனுபவமாக மாற்றுகிறது.

திரையில் இப்படம் ஓடும் நேரம் குறைவு. அதேநேரத்தில், காட்சிகளின் எண்ணிக்கை அதிகம். அதுவே செறிவுமிக்க படம் பார்த்த உணர்வை உண்டுபண்ணுகிறது.

இறுதியாக, குருவாயூர் கோயிலில் நடைபெறுவதாகக் காட்டப்படும் கிளைமேக்ஸ் காட்சி நம்மைப் பிரமிக்க வைப்பதோடு மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறது.

திரையில் பார்வையாளர்கள் சங்கடப்படும் வகையில் சில கதைகள் இருப்பதுண்டு. அவற்றையும் சுவைபடச் சொல்ல முடியும் என்றுணர்த்திய வகையில் முக்கியத்துவம் பெறுகிறது இந்த ‘குருவாயூர் அம்பலநடையில்’.

– உதய் பாடகலிங்கம்

Guruvayoor AmbalanadayilGuruvayoor Ambalanadayil reviewPrithvirajஅகில்அனஸ்வரா ராஜன்குருவாயூர் அம்பலநடையில்பசில்பிருத்விராஜ்விமர்சனம்ஜோசப்
Comments (0)
Add Comment