தேர்தல் அரசியல் பின்னணியில் தமிழில் வெகு சில படங்களே வந்திருக்கின்றன. அவற்றில் மிக நேர்த்தியானவை என்று ஒரு சிலவற்றை மட்டுமே சுட்டிக்காட்ட முடியும். காரணம், அவற்றில் நிறைந்திருக்கும் பிரசார நெடியும் எதிர் விமர்சனங்களும் தான்.
அவ்வாறில்லாமல் 360 டிகிரியில் ஒரு கதையை அணுகித் திரைக்கதையாக்கும் வித்தை ஒரு சில இயக்குனர்களுக்கே கைவரும். அவர்களில் தானும் ஒருவராகிவிட வேண்டுமென்று முயற்சித்திருக்கிறார் ‘சேத்துமான்’ தந்த இயக்குனர் தமிழ். விஜயகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, ஜார்ஜ் மரியான், திலீபன், பாவல் நவகீதன் உள்ளிட்டோர் நடிப்பில், கோவிந்த் வசந்தா இசையில் ‘எலக்சன்’ படத்தைத் தந்திருக்கிறார்.
சரி, படம் எப்படியிருக்கிறது?
உள்ளாட்சித் தேர்தல்!
வேலூர் வட்டாரத்தில் நிகழ்வதாக, ‘எலக்சன்’ கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லசிவம் (ஜார்ஜ் மரியான்). அவரது மகன் நடராசன் (விஜயகுமார்). நல்லசிவத்தின் நண்பர் தணிகாசலத்தின் மகள் செல்வியைக் (ரிச்சா ஜோஷி) காதலிக்கிறார் நடராசன்.
தோளோடு தோள் சேர்ந்து திரியும் நல்லசிவமும் தணிகாசலமும் ஆளும் தமிழ்நாடு மக்கள் கழகம் கட்சியைச் சார்ந்தவர்கள்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட, நண்பர் தணிகாசலத்திற்கு வாய்ப்பு கேட்கிறார் நல்லசிவம். ஆனால், அவருக்குத் தலைமையின் அனுமதி கிடைக்கவில்லை. அதையடுத்து, அவர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.
கட்சியை விடுத்து வேறு பக்கம் திரும்ப விரும்பாமல், தலைமை அறிவித்த கூட்டணிக் கட்சி வேட்பாளர் தியாகுவின் வெற்றிக்குப் பாடுபடுகிறார் நல்லசிவம். உழைக்கும் மக்கள் கட்சியைச் சேர்ந்த அவரை வெற்றி பெறச் செய்கிறார். அது நல்லசிவத்திற்கும் தணிகாசலத்திற்கும் இடையே விரிசலை உருவாக்குகிறது.
செல்வி – நடராசன் காதல் தெரிய வந்தபிறகு, அது பன்மடங்காகிறது. காரணம், இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதே.
நடராசனின் எதிர்ப்பை மீறி செல்விக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையை மணமுடிக்கிறார் தணிகாசலம். கட்டப்பஞ்சாயத்து செய்யும் காதர் பாய் அதற்குத் துணை நிற்கிறார். தணிகாசலத்தின் மகன் சுதாகரும் (திலீபன்), அந்த நேரத்தில் அமைதியாக இருக்கிறார்.
சுதாகரும் நடராசனின் சகோதரி கணவர் கனியும் (பாவல் நவகீதன்) சிறு வயது முதலே நண்பர்கள். குடும்பத்து பகை அவர்களது நட்பில் எந்தப் பிரிவையும் ஏற்படுத்தவில்லை.
சில ஆண்டுகள் கழித்து, ஒரு ஆலையில் பணியாற்றி வருகிறார் நடராசன். பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் ஹேமாவைத் (ப்ரீத்தி அஸ்ரானி) திருமணம் செய்துகொள்கிறார்.
அந்த நேரத்தில் மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. இம்முறை தியாகுவின் மகன் மூர்த்தி சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். உழைக்கும் மக்கள் கட்சியில் இருக்கும் கனியும் சுதாகரும் அதனை எதிர்க்கின்றனர்.
அவர்களிடத்தில் நடராசனைத் தேர்தலில் நிறுத்துவதாகச் சவால் விடுகிறார் கனி. சுதாகரும் அதனை ஆதரிப்பதாகச் சொல்கிறார்.
ஆனால், நல்லசிவம் அதற்குச் சம்மதிப்பதில்லை. தனது கட்சி நிறுத்தும் வேட்பாளரான டீக்கடை கணேசனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார்.
தேர்தலுக்காகத் தன் கையிலிருக்கும் பணம் மட்டுமல்லாமல் கடன் வாங்கிச் செலவு செய்கிறார் நடராசன். வாக்கு எண்ணிக்கையின்போது கணேசன் வென்றதாக அறிவிக்கப்படுகிறது.
அன்றிரவு நடக்கும் கலவரத்தில், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சேவியர் எனும் வேட்பாளரும் அவ்வூரிலுள்ள மக்களும் மூர்த்தியின் ஆட்களால் தாக்கப்படுகின்றனர்.
அதேநேரத்தில் வெளியூர் செல்லும் நடராசன், ஹேமா மற்றும் குடும்ப நண்பர் காதர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அதில் காதர் கொல்லப்படுகிறார். நடராசன் மனைவியின் வயிற்றில் வளரும் கரு கலைந்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.
பல இழப்புகளைச் சந்தித்து நடராசன் குடும்பம் அல்லோகலப்படுகிறது.
ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. இம்முறை நல்லூர் தொகுதி மகளிருக்காக ஒதுக்கப்படுகிறது. அந்தத் தேர்தலில் ஹேமாவை நிறுத்த வேண்டும் என்கிறார் கனி. அதனைச் செய்யுமாறு அவரைத் தூண்டிய சுதாகர், திடீரென்று தனது மனைவியை வேட்பாளர் ஆக்குகிறார்.
தனது மருமகளை வேட்பாளர் ஆக்கும் வேண்டுகோளுடன், கட்சியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளரைச் சந்திக்கிறார் நல்லசிவம். அவரோ, ‘உங்களால் பணம் செலவு செய்ய முடியுமா’ என்கிறார். அதனைக் கேட்டுவிட்டு, அவர் வெறுமையுடன் நடராசனை அழைத்துக்கொண்டு வெளியே வருகிறார்.
அதன்பிறகு, அந்த உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதா? வெற்றி பெற்றது யார்? நடராசனின் குடும்பம் என்னவானது என்று சொல்கிறது ‘எலக்சன்’ படத்தின் மீதி.
திரையில் இரண்டு மணி நேரம் படம் ஓடினாலும், இதில் கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் அதிகமாக இடம்பெற்றுள்ளன. அதுவே செறிவானதொரு உள்ளடக்கம் இருக்கும் தோற்றத்தை உண்டுபண்ணுகிறது.
செறிவான படத்தொகுப்பு!
சராசரி மனிதர்களைப் பிரதிபலிக்கும் தோற்றத்துடன், திரையில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவது மிகக்கடினம். ஆனால், ‘உறியடி’யைத் தொடர்ந்து அவர் அதேபோன்ற கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதிலும் அவரது ஆக்ஷனை காட்டும் காட்சிகள் தியேட்டரில் வரவேற்பைப் பெறுகின்றன.
ப்ரீத்தி அஸ்ரானி ‘அயோத்தி’யில் தென்பட்டதற்கு மாறாக, ஒரு கிராமத்து பெண்ணாக இதில் வந்து போயிருக்கிறார். அது கொஞ்சம் கூடத் துருத்தலாக இல்லை என்பது தான் ஆச்சர்யம்.
போலவே, இன்னொரு நாயகியாகச் சில நிமிடங்கள் மட்டும் வந்து போயிருக்கிறார் ரிச்சா ஜோஷி. அவர் அழகாகத் திரையில் தெரிகிறார்.
இதில் ஜார்ஜ் மரியான் – நாச்சியாள் சுகந்தி இருவரும் நாயகனின் பெற்றோராக நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர்த்து திலீபன், பாவல் நவகீதன் என்று சுமார் பத்து பதினைந்து பேராவது இதில் தங்கள் முகம் காட்டியிருப்பார்கள். அனைவரது பாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
தமிழ், விஜயகுமார் உடன் இணைந்து அழகிய பெரியவன் இதற்கு வசனம் எழுதியிருக்கிறார். ‘தாலி இல்லாம நீ வெளியே வருவியா, கட்சிக்காரனுக்குக் கரை வேட்டியும் துண்டும் அது மாதிரிதான்’ என்பது போன்ற வசனங்கள் எளிதில் ரசிகர்களை ஈர்க்கும் ரகம்.
‘மன்னவன் வந்தானே’ பாடல் சட்டென்று நம்மை ஈர்க்கிறது. ‘தீரா என்னாசை’ பாடல் இனிமையாக இருந்தாலும், திரைக்கதையின் தொடக்கத்திலேயே வருவதால் ரசிக்க முடிவதில்லை. அப்பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் தனது பங்களிப்பைச் சிறப்பாகத் தந்திருக்கிறார் கோவிந்த் வசந்தா.
‘நல்லூரு மண்ணின் மைந்தன்’ பாடல் மூலமாக நம்மை வசீகரிக்கிறார் இசையமைப்பாளர் கே.மகேந்திரன். ஜெயராஜுவின் ஒளிப்பதிவு ஆக்ஷன் காட்சிகளில் அதகளப்படுத்தியிருக்கிறது. இதர காட்சிகளில் ஒரு ‘லைவ்’வான வாழ்வைப் பார்த்த அனுபவத்தை ஊட்டுகிறது.
சி.எஸ்.பிரேம்குமாரின் படத்தொகுப்பு இப்படத்தின் பெரும்பலம். மிகச்செறிவாகக் காட்சிகளை அடுக்கி, நிறைவானதொரு படம் பார்த்த திருப்தியை அவர் உருவாக்குகிறார்.
ஏழுமலை ஆதிகேசவனின் கலை வடிவமைப்பு, கஸ்தூரி இரானியின் ஆடை வடிவமைப்பு, ஸ்டன்னர் சாமின் சண்டைக்காட்சி கோர்ப்பு என்று தொழில்நுட்ப அம்சங்கள் ஒவ்வொன்றும் இதில் நேர்த்தியாக அமைந்துள்ளன.
அதேநேரத்தில், விஜயகுமாரின் முந்தைய படங்கள் போல இதிலும் ஆக்ஷன் காட்சிகளில் ரத்தம் சொட்டுவது ஒரு குறையாகவே தென்படுகிறது. என்னதான் கதை நிகழும் களத்தைக் காட்டப் பயன்படுத்தப்பட்டாலும், அவை இளம் நெஞ்சங்களில் பகைத்தீயை மூட்டவே பயன்படும் என்பதை மறந்துவிடக் கூடாது.
இயக்குனரின் சாமர்த்தியம்!
கதாபாத்திரங்கள் அதிகம் இருந்தாலும், அவை சிறப்புற வடிவமைக்கப்பட்டிருந்தாலும், கதை என்னவோ மூன்று உள்ளாட்சித் தேர்தல்களை மையப்படுத்தியே சுழல்கிறது.
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் உடனான மோதல், சாதிரீதியிலான வாக்கு சேகரிப்பு, வாக்கு எண்ணிக்கையின்போது நடைபெறும் குளறுபடிகள் போன்றவை விலாவாரியாகச் சொல்லப்படுகின்றன. ஆனாலும், கதையில் புதுமை என்று எதையும் சொல்ல முடிவதில்லை. அது ஒரு பெருங்குறை.
இயக்குனர் தமிழ் இதன் திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார்.
தேர்தலில் மூர்த்தியை நிறுத்துவதாக, நடராசனிடம் தியாகு சொல்லும் ஒரு காட்சி உண்டு. ‘தலைவன் ஆவதற்கு ஒரு தாராதரம் வேண்டாமா’ என்று தியாகு சொல்ல, ‘இந்த தேர்தல்ல தொண்டன் மகன் ஜெயிக்கிறானா, தலைவர் மகன் ஜெயிக்கிறானான்னு பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டு, ஓரமாகக் கழற்றிப்போட்ட செருப்பை அணிந்து கொண்டு லுங்கியை நடராசன் மடித்துக் கட்டுவதாக, அக்காட்சியில் காட்டியிருப்பார்.
ஓடும் ரயிலின் பின்னணியில் நடராசனும் செல்வியும் காதலில் உருகுவதாக ஒரு ஷாட் இதில் வந்து போகும். அதன்பிறகே, சாதியைக் காரணம் காட்டி காதல் பிரிவை அவர்கள் எதிர்கொள்ளும் காட்சி வந்து போயிருக்கும்.
போலவே, இன்னொரு காட்சியில் பைக்கில் செல்லும் நல்லசிவத்தின் கழுத்தில் இருந்து அவரது கட்சித் துண்டு கீழே விழும். அதனை எடுக்க வேண்டுமென்று சொல்பவர், வண்டியை மகன் நிறுத்தியதும் ‘வேண்டாம்’ என்று சொல்லுவார்.
சுதாகரோடு நடராசன் மோதும் காட்சியொன்றில், நடராசன் மனைவி கூக்குரலெழுப்புவார். அதற்கு சுதாகரின் ஆளொருவர் எதிர்ப்பு தெரிவிப்பார். போலவே, சுதாகர் மனைவி குரலெழுப்ப முயல்கையில், அவரே அடக்கி ‘வீட்டுக்குள் போ’ என்பார்.
இக்காட்சிகளில்தான் எத்தனை எத்தனை சொல்லாடல்களை மௌனமாக நிகழ்த்தியிருக்கிறார் இயக்குனர் தமிழ். இதுபோன்ற காட்சிகளே அவரது சாமர்த்தியத்தையும் நுணுக்கமான சித்தரிப்புத்திறனையும் காட்டும்.
அதேநேரத்தில், இயக்குனர் தான் சொல்ல வந்ததைப் பிரச்சாரம் செய்யும் தொனியிலான காட்சிகளும் கூட இப்படத்தில் இருக்கின்றன. அவை இதன் பலவீனங்களாகக் காட்சியளிக்கின்றன.
புதுமையற்ற கதை என்றபோதும், தனது காட்சியாக்கம் மூலம் இரண்டரை மணி நேரத்தை விறுவிறுப்பானதாக மாற்றியிருக்கிறது தமிழ் & டீம். வழக்கமான கமர்ஷியல் படங்களுக்கு மாற்றான ஒன்றைத் தேடுபவர்களுக்கு இப்படம் ரொம்பவும் பிடித்துப் போகலாம்!
– உதய் பாடகலிங்கம்
#எலக்சன்_விமர்சனம் #விஜயகுமார் #ப்ரீத்தி_அஸ்ரானி #ஜார்ஜ்_மரியான் #திலீபன் #பாவல்_நவகீதன் #இயக்குனர்_தமிழ் #Election_movie_review #vijayakumar #preethi_asrani #george_mariyaan #paaval_navageethan #director_tamil