உலக சுகாதார அமைப்பின் சார்பாக 2006-ம் ஆண்டு முதல் மே 17-ம் தேதி உலக உயர் ரத்த அழுத்த தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்த தினம் ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது.
உலக உயர் ரத்த அழுத்த தினத்தையொட்டி சிறுநீரக சிகிச்சை நிபுணரும் பேராசிரியருமான டாக்டர். செளந்தரராஜன் ரத்த அழுத்தம் குறித்தும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, ”சராசரி மனிதனின் ரத்த அழுத்தத்தின் அளவு 120/80. இது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சற்று அதிகமாக இருக்கும். ஒல்லியாக இருப்பவர்களுக்கு சற்று குறைவாக இருக்கும். உடல் எடையைப் பொருத்து ரத்த அழுத்தம் மாறுபடும்.
பொதுவாக 130/90 மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம். ஆனால் தற்போது 125/85 மேல் இருந்தாலே உயர் ரத்த அழுத்த அறிகுறியாகக் கருதப்படுகிறது.
ரத்த அழுத்தம் மரபு வழியாக வரலாம். சிறு வயதில் ரத்த அழுத்தம் வரக் காரணம், சிறுநீரகக் கோளாறு. நாளமுள்ள சுரப்பிகள் மூலம் ரத்த அழுத்தம் வரலாம். உடல் பருமன் அதிகமாக இருந்தாலும் ரத்த அழுத்தம் வரும். முக்கியமாக மன அழுத்தம் இருந்தால் ரத்த அழுத்தம் வரலாம்.
காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் ரத்த அழுத்த பரிசோதனைதான் மிகத்துல்லிய அளவை காட்டும்.
குறைவான விலையில் இப்போது ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் கிடைக்கின்றன. அதனால் அனைவரின் வீட்டிலும் அவசியம் ரத்த அழுத்த பரிசோதனை கருவி மற்றும் உடல் எடை பார்க்கும் இயந்திரத்தை வைத்திருக்கலாம்.
கடல் அலை போன்று காலையிலிருந்து மாலை வரை ரத்த அழுத்தம் மாறுபட்டுக் கொண்டே வரும். முக்கியமாக நம் உடலில் உள்ள உப்புச்சத்து காரணமாக ரத்த அழுத்தம் மாறுபடும்.
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் சுமார் 20 கிராம் உப்பு சேர்த்துக் கொள்கிறோம். அது தவறானதாகும். அதை குறைக்க வேண்டும்.
அதாவது பத்தில் மூவருக்கு ரத்த அழுத்தமும், 5-ல் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உடல் எடையைக் குறைப்பது மிக அவசியம். உணவில் உப்பின் அளவை குறைப்பது நல்லது. பழங்கள், காய்கறிகள், கீரைகள், நவதானியங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
காலை, மாலை இருவேளைகளிலும் யோகா, உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. மனதிற்குப் பிடித்த பாடல்கள் கேட்பது சிறந்தது. ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டால் வாழ்நாள் முழுவதும், தினந்தோறும் ரத்த அழுத்த மாத்திரை எடுத்துக் கொள்வது அவசியம்.
ரத்த அழுத்தத்தால் சிறுநீரகம், கண், இதயம், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். மேலும், தீடீர் இதய அடைப்பு மற்றும் வாத நோய், சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம். எனவே ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக் கொண்டு உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும்.
உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்புக்கும் ரத்த அழுத்தத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. பேக்கரி பொருள்கள், சிப்ஸ், பிரெட் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் ஊறுகாய் போன்ற உணவுப் பொருள்கள் ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணம்.
முடிந்த அளவு நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைத்து உடல் நலம் பேண வேண்டும். வேலைப்பளு, கோபம், எரிச்சல், மன அழுத்தம், புகைப்பழக்கம் போன்றவையும் ரத்த அழுத்த மாறுபாட்டிற்கான காரணங்கள்” எனக் கூறியுள்ளார்.
– நன்றி : ஆனந்த விகடன்