அஜீத் என்றால் எப்போதும் ஆச்சர்யம்!

அஜித்தின் அணுகுமுறையும் தனித்த பார்வையும் மிகப்பெரிய பலம்!

பாகிஸ்தானிலுள்ள சிந்தி மாகாணத்தை பூர்விகமாகக் கொண்டவர் அஜித்தின் தாய் மோகினி. தந்தை சுப்பிரமணியம் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர்.

மூத்த சகோதரரின் பெயர் அனூப் குமார். இளைய சகோதரரின் பெயர் அனில் குமார். இந்த தகவல்களே அஜித் குமாரின் பின்னணியை விவரிக்கும். ஆனால், அவர் எக்காலத்திலும் இது பற்றிய கேள்விகளுக்கு விரிவான பதிலளித்ததும் இல்லை; அதேநேரத்தில் அவற்றை மறைக்க முயற்சித்ததும் இல்லை.

தெலுங்கில் முதல் படம்!

பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குப் படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் அஜீத். அதன்பின், செல்வா இயக்கத்தில் அமராவதி திரைப்படத்தில் நடித்தார். வித்தியாசமான களம், கதை சொல்லல் முறையுடன் கூடிய சாதாரண காதல் படமது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது படமாக பவித்ரா வெளிவந்தது. ராதிகாவை மையப்படுத்திய இந்த கதையில், அஜித்துக்கு அவரது மகன் போன்ற பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சினிமாவா? ரேஸா?

பைக் ரேஸ் ஒன்றில் கலந்துகொண்டு அவர் பல மாதங்கள் காயத்துடன் படுக்கையில் இருந்த காலகட்டம் அது. பைக் ரேஸரா, நடிகரா என்ற கேள்விக்குப் பதில் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

இடையில் பாசமலர்கள் படத்தில் பதின்பருவப் பள்ளி மாணவியைக் காதலிக்கும் விடலைப் பையன் பாத்திரம் கிடைத்தது. இதில், அரவிந்த் சாமி நாயகன்.

அடுத்து, விஜய் நாயகனாக நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் அவரது நண்பன் ரோல். அவ்வப்போது கிடைத்த இது போன்ற வாய்ப்புகள் அவரைத் திரையுலகின் பக்கம் திரும்ப வைத்தது.

அடுத்த ரஜினிக்கான அஸ்திவாரம்!

வசந்த் இயக்கத்தில் வெளியான ஆசை பெருவெற்றி பெற்றபோதும், அகத்தியன் இயக்கத்தில் நடித்த வான்மதி தான் அஜித் யாரென்று திரையுலகுக்குக் காட்டியது.

திருப்பாச்சி உள்ளிட்ட சில படங்களில் அண்ணாமலை ரஜினியை விஜய் பிரதியெடுக்கும் முன்னரே லியோகப்பாசா பாடலில் தலைகாட்டியிருப்பார் அஜித்.

அடுத்த சூப்பர்ஸ்டார் நான் தான் என்று அஜித் பேட்டி கொடுப்பதற்கெல்லாம் முற்பட்ட காலம் இது.

96இல் இப்படியொரு செயலை இளம் நாயகன் ஒருவர் செய்வதென்பது யாரும் நினைத்துப் பார்க்க முடியாதது.

டபுள் ஹீரோ சப்ஜெக்டா?

கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை, உல்லாசம், பகைவன் படங்களில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருப்பார் அஜித்.

பகைவன் படத்தில் சத்யராஜ் நடிக்கும்போது உங்களுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கும் என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு, அவரது ரசிகர்கள் என்னைப் பார்த்துவிட்டு எனது ரசிகர்கள் ஆவதற்கு வாய்ப்பிருக்கிறதே என்று பதிலளித்தவர் அஜித்.

இன்னொருவருடன் நடித்தால் நமக்கு ஸ்கோப் இருக்குமா என்று யோசிப்பவர்களுக்கு மத்தியில் கிடைத்த கேப்பில் சிக்ஸர் அடித்ததற்கான சான்று இது.

கவுண்டர் பயம் கிடையாது!

கவுண்டமணி இரண்டாவது ஹீரோ ரேஞ்சுக்கு பின்னிப் பெடலெடுத்தபோது, பல முன்னணி ஹீரோக்கள் அவருடன் நடிக்கப் பயந்தனர். ஹீரோக்களைப் பார்த்து, ’இவனுக்கு இதே வேலையாப் போச்சு’ ரக கவுண்டர்களை அவர் உதிர்த்துக் கொண்டிருந்ததே இதற்குக் காரணம்.

அந்த காலகட்டத்தில் நேசம், ரெட்டை ஜடை வயசு, அவள் வருவாளா போன்ற படங்களில் அவருடன் சேர்ந்து நடித்தவர் அஜித்.

கோயம்புத்தூர் மாப்ளே, மன்னவா படங்களில் விஜய், பிரசாந்துடன் கவுண்டமணி நடித்ததற்கும் மேற்கண்ட படங்களில் அஜித்துடன் நடித்ததற்கும் நிறைய வித்தியாசங்களைக் காண முடியும். எந்தப் பின்னணியுமில்லாத அஜித்தின் வளர்ச்சி இதில் முதலாவதாக இருக்கும்.

நாயக அந்தஸ்து!

பத்தோடு பதினொன்றாக இருந்த அஜித்தைத் தனித்துக்காட்டிய படம் காதல் மன்னன். அதற்கு முன்னர் காதல் கோட்டை படத்தில் நல்ல நடிப்பை வழங்கியிருந்தாலும், ஆக்‌ஷன் ப்ளஸ் காதல் கலந்த இளம் நாயகனுக்கான அந்தஸ்து இப்படத்தில் அவருக்குக் கிடைக்க வழி செய்தார் இயக்குனர் சரண்.

நாயகி ரிச்சாவுக்கு முக்கியத்துவம் அதிகமிருந்த உயிரோடு உயிராக, இரண்டாவது ஹீரோவாக உன்னிடத்தில் எனைக் கொடுத்தேன், மனைவி குழந்தையுடன் வாழும் நடுத்தரவர்க்க மனிதனாக தொடரும் ஆகிய படங்களில் நடித்தார் அஜித்.

கிடைத்த வாய்ப்புகளில் தனக்கானதை அவர் எப்படித் தேர்ந்தெடுத்தார் என்பதற்கான உதாரணங்கள் இவை.

நழுவிய வாய்ப்புகளின் பெருவரிசை!

இந்த காலகட்டத்தில் விஜய்யுடன் அவர் நடிக்கவிருந்த நேருக்கு நேர் வாய்ப்பு சூர்யா வசம் சென்றது.

பெப்சி அமைப்புக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததற்காகத் தயாரிப்பாளர்கள் ஓ.ஹென்றி, ஏ.எம்.ரத்னம் ஆகியோரது படங்களில் நடிக்கவிருந்த வாய்ப்புகளைப் பறிகொடுத்தார் அஜித்.

பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் அஜித்தை வைத்து இனி படமெடுக்காது என்ற நிலைமை உருவான நிலையில், செண்டிமெண்ட் கலந்த குடும்பப் படமான உன்னைத் தேடி படத்தில் நடித்தார்.

அதன்பிறகு அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக மாறுவதற்கான படமாக அமைந்த வாலி வெளியானது.

வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்குமா என்ற காலகட்டத்தில் கிடைக்கும் விரசம் நிறைந்த திரைப்பட வாய்ப்புகள், எந்தவொரு நடிகரின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டுவிடும்.

பிட்டு பட ஹீரோ என்ற அடைமொழியுடன் வாழ்க்கை முழுக்கத் திரிய வேண்டியிருக்கும். இந்த அபாயத்தை அனாயாசமாகக் கடக்க வைத்தது வாலியின் திறன்மிக்க திரைக்கதை.

நாயகர்களிடம் கண்டிஷன்!

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் அரை மணி நேரம் மட்டுமே அஜித் நடித்த காட்சிகள் இடம்பெற்றன. இதனால், ராஜ்கபூர் இயக்கத்தில் நடித்த ஆனந்த பூங்காற்றே படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தலைகாட்டினார் கார்த்திக்.

இதேபோல நீ வருவாய் என படத்தில் பார்த்திபன் ஹீரோ. இதைத் தொடர்ந்து அஜித் நடித்த உன்னைக் கொடு என்னைத் தருவேன் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார் பார்த்திபன்.

கிட்டத்தட்ட இவை கையெழுத்திடப்படாத ஒப்பந்தங்கள் தான்.

ஆனால், அஜித்தின் சமகால ஹீரோக்கள் யாரும் செய்யத் துணியாத காரியம் இது என்று உறுதியாகச் சொல்லலாம்.

இடைப்பட்ட காலத்தில் நந்தா, ஜெமினி, கஜினி, சாமி, தூள் போன்ற படங்கள் அவரிடம் இருந்து நழுவி வேறு ஹீரோக்களுக்கு ஹிட் தந்தன.

மறைமுகத் தயாரிப்பு

வாலி தந்த வெற்றிக்குப்பிறகு, முகவரி படத்தைத் தயாரித்தார் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. ராசி என்ற தோல்விப்படத்தில் கைகோர்த்த நட்பு இதன்பிறகு சில ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.

நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் அஜித்தும் ஒரு பங்குதாரர் என்று தகவல்கள் வெளியாகின. சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜி வரை இவர்களது நட்பு தொடர்ந்தது.

இதேபோல ரெட்டை ஜடை வயசு தயாரித்த பழனிசாமியின் குடும்பத்தினருக்காக தீனா, அட்டகாசம் படங்களில் நடித்தார் அஜித்.

சவாலான பாத்திரங்கள்!

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பத்திரிகை பேட்டியொன்றில், தனது நடிப்பு 10க்கு 4 மதிப்பெண் பெறும் என்று கூறியிருந்தார் அஜித். தான் ஒரு பெர்பார்மரா, ஸ்டாரா என்பதில் அவருக்கு ஒருபோதும் சந்தேகம் இருந்ததில்லை என்பதற்கு ஒரு சோறு பதமாக இது போதும்.

ஆனால், அவர் தனக்கான படங்களைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவகையில் விஜயகாந்த், சத்யராஜ் பாணியை பின்பற்றினார்.

90களில் அவர்கள் செய்துகாட்டியதைத் தன் காலகட்டத்தில் அவர் கைக்கொண்டார்.

ஜி திரைப்படத்துக்குப் பிறகு நட்பில் விரிசல் ஏற்பட்ட நிலையில், வரலாறு படத்தில் நடித்தார் அஜித். பெண்மை கலந்த ஆண் என்ற பாத்திரத்தை நாயகனாக ஏற்பதற்குத் தைரியமுள்ள முன்னணி நாயகர்கள் மிகக்குறைவு. அதனை அநாயசமாகச் செய்து காட்டியவர் அஜித்.

படத்தில் நடிக்க உடனடியாக முன்வந்தபோதும், படப்பிடிப்பின்போது இந்த வேடத்தைக் காரணம் காட்டி கிண்டல் செய்வார்களோ என்ற பயமும் அஜித்திடம் இருந்ததாகச் சமீபத்தில் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். ஆனாலும், அஜித்தின் தைரியமே படத்தை ஹிட் ஆக்கியது.

பேசப் பல விஷயங்கள்

ஒரு இயக்குனரிடம் பட்ட அவமானத்தால் நடிகர் சங்கத்திடம் இருந்து ஒதுங்கியது உட்படப் பல சினிமா அனுபவங்கள் அஜித்துக்கு உண்டு.

கொடுத்த வாக்கிற்காகச் சில படங்களில் அவர் கமிட்டாகி நொந்து நூடுல்ஸ் ஆனதும் உண்டு. இவையெல்லாம் அவரைச் சார்ந்தோர் மட்டுமே அறிந்தவை.

மீண்டும் மோட்டார்பைக் ரேஸில் கலந்துகொண்டதால் ஏற்பட்ட இடைவெளியும் பல தோல்விகளை அவருக்குத் தந்தன. இது அத்தனையையும் மீறி மங்காத்தா, பில்லா உட்படப் பல வித்தியாசமான வேடங்களில் நடித்தார் அஜித்.

ரஜினியை சிறிதளவும் இமிடேட் செய்யாமல் நடித்த பில்லாவும், முழுக்க எதிர்மறை பாத்திரமான மங்காத்தாவை முன்னணி நாயகனாகத் திகழும்போதும் ஏற்பதும் எப்போதும் ஆச்சர்யத்தைத் தருவன.

அஜித்தின் நடிப்பில் பூஜை போடப்பட்டு நின்றுபோன படங்கள், சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு நின்ற படங்கள் என்று பெரிய பட்டியலே போடலாம்.

எப்போதோ சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு சில ஆண்டுகள் கழித்து என்னைத் தாலாட்ட வருவாளா படம் தியேட்டர்களில் வெளியானபோது எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று சொன்னவர் அஜித்.

இதனாலேயே சில சினிமா தயாரிப்பாளர்களின், விநியோகஸ்தர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தவர்.

மேக்கப்பில்லாமல் நடிப்பது, ஒரு வாரத் தாடியோடு இருப்பது, மீசையும் தாடியும் இரண்டொரு நாட்கள் வளர்ந்த நிலையில் நடிப்பது போன்ற வழக்கங்களைத் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியவர் அஜித்.

2000களில் தொடங்கிய இந்த வழக்கம் இப்போதுவரை பல்வேறு நாயகர்களால் பின்பற்றப்பட்டு வருவது நிச்சயம் ஆச்சர்யம் தான்.

தனது பேட்டிகள், பேச்சுகள் சர்ச்சையை மட்டுமே உருவாக்கியபோது, தன் படங்கள் மட்டுமே பேசட்டும் என்ற முடிவுக்கு வந்தார் அஜித்.

பில்லா படத்தின்போது அனைத்து ஊடக நண்பர்களையும் நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துப் பேட்டியளித்தார் அஜித். அதன்பின்னர் அது போன்றதொரு நிகழ்வு நடக்கவே இல்லை.

பூஜை முதல் படம் வெளிவந்த பின்னர் தியேட்டர் விசிட் செல்வது வரை அனைத்துமே பத்திரிகையாளரோடு தொடர்பு கொள்வதற்கான உத்தி என்று கருதும் உலகில், அதற்கு மாறான சிந்தனையைத் தொடர்ந்து பின்பற்றுகிறவர் அஜித்.

விளம்பரப் படங்களின் மூலமாக சினிமாவுக்குள் அடியெடுத்துவைத்த அஜித், தான் பயன்படுத்தாத பொருட்களை ரசிகர்களுக்குப் பரிந்துரைப்பதில்லை என்று விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்தியது மிகப்பெரிய விஷயம்.

இப்படி அஜித் பற்றிப் பேசப் பல விஷயங்கள் இருக்கின்றன. காதல், சென்டிமெண்ட், ஆக்‌ஷன் கலந்த தரமான மசாலா படங்கள் அஜித் நடிப்பில் வெளியாகாதா என்று ஏங்குவோர் உண்டு.

புதிய முயற்சிகளுக்கு அவர் வாய்ப்பளிக்கமாட்டாரா என்று நினைக்கும் இளைய தலைமுறையும் பெருகி வருகிறது.

நடிகருக்கான பொறுப்புணர்வு!

ஸ்டைலிஷ், ஸ்மார்ட், கார்ஜியஸ் வார்த்தைகளுக்கு அவர் உயிர் கொடுப்பதற்காகவே, பல புதுமுக இயக்குனர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

மிக எளிதாகச் சில படங்களில் நடித்து பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அஜித் முன் கொட்டிக் கிடக்கின்றன.

இந்த சூழலில், பெண்களுக்கான சமூக அங்கீகாரம் என்னவென்பதைச் சிறார்களும் பதின்பருவத்தினரும் தெரிந்துகொள்ளும் வழியைத் தனது படம் மூலமாக ஏற்படுத்தியிருக்கிறார் அஜித்.

நடிகனுக்குச் சமூகப் பொறுப்புணர்வு முக்கியம் என்று சமீபத்திய பேட்டியொன்றில் கூறியிருந்தார் இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா. தன்னிடம் அக்குணம் அதிகமுள்ளது என்பதைத் தொடர்ந்து வெளிப்படுத்தி நம்மை ஆச்சர்யப்படுத்தி வருகிறார் அஜித்.

அஜித்தின் ஆச்சர்யமூட்டும் செயல்பாடுகள் தொடர வேண்டும் நேர் கொண்ட பார்வைக்குப் பிறகும்..!

–   மாபா

Comments (0)
Add Comment