பாலகுமாரனுடனான முரண்பட்ட முதல் சந்திப்பு!

கவிஞர் கவிதாபாரதி

நானும் ஒரு வாசகனாக பாலகுமாரனை வியந்து படித்துக் கடந்து வந்தவன்தான்.. அதன்பிறகு அவரைச் சந்திக்க நேர்ந்த கணம் துர்பாக்கியமானது.

“வறுமையில் உழலும் கிராமத்து இளைஞர்கள் சென்னை வந்து சினிமாவில் உதவி இயக்குநராகிவிடுகிறார்கள். ஊரில் நெல்லு சோத்தையே பார்க்காதவர்களுக்கு மூணு வேளை வயிறார சோறு கிடைத்ததும் டிஸ்கஷனில் உறங்கிவிடுகிறார்கள். அவர்களுக்கு மூளை வேலை செய்வதில்லை.

மேலும் அத்தை மகளை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டுவந்து அவர்களையும் கஷ்டப்படுத்துகிறார்கள்..” என்றெல்லாம் அவர் ஒரு பத்திரிகையில் எழுதிவிட, அது உதவி இயக்குநர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.

ஏறக்குறைய நானூறு பேர் ஊர்வலமாகப் போய் வாரன் ரோட்டிலிருந்த அவர் வீட்டை முற்றுகையிட்டோம்.. இன்று இயக்குராகிவிட்ட பலரும் அதிலிருந்தனர்.

இயக்குநர் சேரன், கண்ணெதிரே தோன்றினாள் இயக்குநர் ரவிச்சந்திரன், நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் இன்னொரு நண்பருடன் நானுமாக ஐந்து பேர் போராட்டக் குழுவின் பிரதிநிதிகளாக அவர் வீட்டுக்குள் சென்றோம்.

மற்ற நால்வரும் அவருக்கு அறிமுகமானவர்கள் என்பதால் அவரோடு நாகரீகமாக வருத்தத்தைத் தெரிவித்தார்கள். நான் கொஞ்சம் கடுமையான சொற்களில் எங்கள் கோபத்தை வெளிப்படுத்தினேன்.

இப்போது நினைக்கும்போது தவிர்த்திருக்க வேண்டிய சொற்கள்தாம். ஆனால் அந்த நேரத்தில் ஒரு பெருந்திரள் கோபத்துக்குப் பொருத்தமான சொற்கள். எனினும் அவர் அந்த விஷயத்தை மிக லாவகமாகக் கையாண்டு சுமுகமாக முடித்துவைத்தார்.

பின்னொருநாள் அவரோடு இணக்கமான சந்திப்பை விரும்பினேன், வாய்ப்புக் கிட்டவில்லை. நட்போடு கைகுலுக்குகிறேன் பாலகுமாரன்.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment