வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், நாம் பல காரியங்களை ஒரே நேரத்தில் செய்ய வேண்டியிருப்பதாக உணர்வோம். நாம் செய்ய வேண்டிய இந்தக் காரியங்கள் எப்போதும் முடிவற்றதாக இருக்கின்றன.
ஆனால், இவற்றையெல்லாம் செய்து முடிக்க நேரம் குறைவாக இருப்பதாக உணர்கிறோம். ஒருவழியாக, அந்தக் காரியங்களைச் செய்யத் தொடங்கும்போது, அவற்றில் சிக்கி அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் செய்வதுடன் நிறுத்திக்கொள்கிறோம். எல்லாப் பணிகளையும் ஒரே நேரத்தில் முடிக்க வேண்டும் என நினைத்துத் தொடங்குகிறோம்; ஆனால், அவற்றை முழுமையற்றதாக விட்டுவிடுகிறோம்.
நாம் இந்தக் காரியங்களைச் செய்யும்போது எளிதில் கவனச்சிதறலுக்கும் சலிப்புக்கும் ஆட்படுகிறோம். அதனால் அந்தக் காரியத்தை நிறைவேற்றுவதற்கான செய்முறையின் முக்கியத்துவத்தை மறக்கிறோம். “நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல; அதை எப்படிச் செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்” என்று சொல்வார்கள். நாம் அடைய வேண்டிய இலக்கிலேயே ஆர்வமாக இருக்கிறோம். அதனால், அந்தப் பயணத்தைக் கொண்டாட மறந்துவிடுகிறோம்.
ஒரு வேலையில் ஈடுபடும்போது, அந்த வேலையையே கொண்டாடுவதுதான் அந்த வேலைக்கான சாராம்சம். ஒரு நேரத்தில் ஓர் அடியை மட்டும் எடுத்துவைப்பது, ஒவ்வொரு அடியையும் முழுமையான கவனத்துடன் வைப்பதற்கு உதவும். இந்தக் கவனம் உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை நிகழ்த்தும். உங்களுடைய ஆற்றல் கவனத்துடன் ஒரே திசையில் செலுத்தப்படும்போது, அது நீங்கள் செய்யும் எல்லாக் காரியங்களிலும் படைப்பாற்றலுடன் வெளிப்படும். எதைப் படைப்பாற்றல் என்று சொல்லுகிறோம்?! ஆற்றலின் சுதந்திரமான பாய்ச்சலைத்தானே அப்படிச் சொல்கிறோம்?!
படைப்பாற்றலின் வலிமை
ஒரு வேலையைச் செய்வதில் உங்கள் ஆற்றல் முழுமையையும் குவிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது பெரிய சக்தியாக மாறும். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் முழுமைக்கான வாய்ப்பை உருவாக்குகிறது. இக்கணத்தை மனதார அனுபவிப்பதைத்தான் ‘முழுமை’ என்கிறோம். வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையில்லாதவற்றைக் கீழேபோட்டுவிடுவதைப் போன்ற அனுபவம் இது. வாழ்க்கைச் சின்னச் சின்ன தருணங்களாலான பெட்டி. அதை அமைதியாகவும் மெதுவாகவும் திறக்க வேண்டும். அதற்கான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
இக்கணத்தில் வாழ்வோம்
முழுமையை எப்படி அனுபவிப்பது என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், அதற்கு உங்கள் மனம் பற்றிய விழிப்பை உருவாக்க வேண்டும். தற்காலத்தில் ஒரு தருணத்தில் மட்டும் வாழ்வதற்கு கடந்த காலம், ஒரு வருங்காலம் என இரண்டையுமே கைவிட வேண்டும். இதை ஜென் துறவியின் ஒரு பிரபல மேற்கோளால் விளக்க முடியும் – “பல ஆயிரம் மைல்களுக்கான பயணம் ஓர் அடியில்தான் தொடங்குகிறது”.
இந்தத் தருணத்தில் வாழ்வதைத் தற்கண உணர்வுப் பயிற்சியால் சாத்தியப்படுத்தலாம். பலவிதமான எண்ணங்களால் சூழப்பட்டிருப்பதாகவும், மங்கலான பார்வையுடன் இருப்பதாகவும் தோன்றினாலும், உங்கள் சுவாசத்தின் இயக்கத்தைக் கவனிப்பதால் இக்கணத்துக்கு வர முடியும். ஆழமாக சில முறை சுவாசித்துக் கொள்ளுங்கள். உங்கள் கவனம் சுவாசத்தை உள்ளே இழுப்பதிலும் வெளியே விடுவதிலும் மட்டும் இருக்க வேண்டும். இந்தப் பயிற்சி உங்களை மீண்டும் இக்கணத்துக்கு அழைத்துவர உதவும். மெதுவாக, தேவையில்லாத பலவீனமான எண்ணங்களிலிருந்து நீங்கள் விடுபட்டுவிடுவீர்கள். உங்களுடைய சூழல் கவனச்சிதறலுக்குக் காரணமாக இருந்தால், இந்தச் சுவாசப் பயிற்சியைத் தொடருங்கள்.
வாழ்க்கையில் அரக்கபறக்க ஓட வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. ஒவ்வொரு காரியத்தை முடிப்பதிலும் முழுமையான கவனத்துடன் ஈடுபடுங்கள். அந்தப் பயணத்தைக் கொண்டாடுங்கள்.
– இந்திய – கனடா எழுத்தாளர் ஜாஸ் கில்
தமிழில்: என். கௌரி
நன்றி: இந்து தமிழ் திசை