ஸ்ரீகாந்த் – தன்னம்பிக்கை படங்களின் வரிசையில் சேரும்!

‘இந்தியாவின் முதலாவது பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குடியரசுத் தலைவர் ஆக விரும்புகிறேன்’.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் ஒரு மாற்றுத்திறனாளி சிறுவன் பேசுவதாக ‘ஸ்ரீகாந்த்’ பட ட்ரெய்லரில் இவ்வசனம் அமைந்திருந்தது. அதுவே, அத்திரைப்படத்தின் உள்ளடக்கம் சிறப்பானதாக இருக்குமென்ற எதிர்பார்ப்பை விதைத்தது.

‘பொல்லாண்ட் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தை நடத்திவரும் ஸ்ரீகாந்த் பொல்லா என்ற மாற்றுத்திறனாளியின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘ஸ்ரீகாந்த்’ படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் துஷார் ஹிராநந்தானி.

ராஜ்குமார் ராவ், ஜோதிகா, ஆலயா, சரத் கேல்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

சரி, இந்த படம் எப்படிப்பட்ட காட்சியனுபவத்தை நமக்குத் தருகிறது?

வியப்பூட்டும் வாழ்க்கை!

ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம் அருகேயுள்ள சீதாராமபுரம் எனும் கிராமத்தில் பிறந்தவர் ஸ்ரீகாந்த். பிறக்கும்போதே பார்வைத்திறன் குறைபாடு உடையவர் என்பதை அவரது உறவினர்கள் கண்டறிகின்றனர்.

அதனால், குழந்தையை உயிரோடு புதைக்கும் எண்ணத்தில் ஆழ்கிறார் அவரது தந்தை. ஆனால், தாயின் கதறல் ஸ்ரீகாந்தின் உயிரைக் காப்பாற்றுகிறது.

பள்ளிப்பருவத்தில் மிகக்கடினமான கேள்விகளுக்கும் எளிதாகப் பதிலளிப்பவராக விளங்குகிறார் ஸ்ரீகாந்த் (ராஜ்குமார் ராவ்). அதன்பிறகு, ஹைதராபாதில் உள்ள சிறப்புப் பள்ளியொன்றில் கல்வியைத் தொடர்கிறார்.

அங்கு நடக்கும் ஒரு விழாவின்போது, அப்பள்ளி தாளாளர் முன்னிலையில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் முறைகேடுகளைக் கூறுகிறார். அதனால், அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்.

ஆனால், அப்பள்ளியில் பணியாற்றிய தேவிகா (ஜோதிகா) எனும் ஆசிரியை ஸ்ரீகாந்துக்கு அரணாக விளங்குகிறார். அவரது அபாரக் கல்வியாற்றல் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் படிக்குமாறு ஊக்குவிக்கிறார்.

பதினோராம் வகுப்பில் அறிவியல் பிரிவில் சேர ஸ்ரீகாந்த் ஆசைப்படுகிறார். ஆனால், பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளால் அறிவியல் கற்க முடியாது என்கிறது பள்ளி நிர்வாகம்.

எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் இதுதான் நிலைமை என்றறியும் ஸ்ரீகாந்த், நீதிமன்றத்தை நாடுகிறார். வழக்கின் முடிவில், ஸ்ரீகாந்தைப் பள்ளியில் சேர்க்க உத்தரவிடுகிறார் நீதிபதி.

பிறகு, கல்லூரிப் படிப்பிலும் அதே போன்றதொரு தடங்கலை எதிர்கொள்கிறார் ஸ்ரீகாந்த். ஐஐடியில் படிக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.

அதேநேரத்தில், அமெரிக்காவின் எம்.ஐ.டியில் கல்வி ஊக்கத்தொகையோடு படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

ஆனால் விமானநிலையத்தில் ஸ்ரீகாந்துக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. பார்வைத்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளியோடு ஒரு காப்பாளர் கண்டிப்பாக வர வேண்டும் என்கிறார் அங்கிருக்கும் ஒரு அதிகாரி.

பயண அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தான் பயணிக்கவிருக்கும் விமானத்தின் உட்பகுதி, இருக்கை அமைப்பு குறித்து ஏற்கனவே தெரிந்துகொண்ட தகவல்களின் அடிப்படையில் அந்த விமானநிலையத்தையே விமானமாக உருவகிக்கிறார் ஸ்ரீகாந்த்.

பலரது முன்னிலையில், எந்த தடங்கலும் இல்லாமல் தன்னால் விமானத்தில் பயணிக்க முடியும் என்று செய்முறையாக நிகழ்த்திக் காட்டுகிறார். பிறகென்ன, ஸ்ரீகாந்துக்கு அனுமதி வழங்குகிறார் சம்பந்தப்பட்ட அதிகாரி.

பார்வைத்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் பங்குபெறும் வாய்ப்பைத் தனது கல்லூரிப் படிப்புக்காகத் தியாகம் செய்கிறார் ஸ்ரீகாந்த்.

அதனை ஈடுகட்டும் வகையில், அமெரிக்காவில் பேஸ்பால் அணியில் சேர்கிறார். அதிலும் வெற்றிக்கொடி நாட்டுகிறார்.

கல்லூரிப் படிப்புக்குப் பின்னர், ஸ்ரீகாந்துக்குப் பல அமெரிக்க நிறுவனங்கள் வேலை தர முன்வருகின்றன.

ஆனால், ஆசிரியை தேவிகாவும் தோழி சுவாதியும் (ஆலயா) ஸ்ரீகாந்தின் மனதை மாற்றுகின்றனர். ‘நீ பலருக்கு முன்மாதிரியாகத் திகழ இந்தியாவில் பெரிதாகச் சாதிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்துகின்றனர்.

அதையடுத்து, இந்தியா திரும்பும் ஸ்ரீகாந்த் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் கழிவுகளில் இருந்து காகிதம் தயாரிக்கும் ஆலையொன்றை அமைக்கிறார். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கே வேலைவாய்ப்பினை வழங்குகிறார்.

தொழிலதிபர் ரவி மந்தா (சரத் கேல்கர்) அதற்கான பொருளாதார உதவிகளைச் செய்கிறார்.

இடையிடையே ஸ்ரீகாந்த் மனதில் தலைதூக்கும் ‘நான்’ என்கிற தலைக்கனத்தால் அந்நிறுவனத்தில் சில பிரச்சனைகள் வருகின்றன.

அதனைக் கடந்து வாழ்வில் எத்தகையை நிலையை ஸ்ரீகாந்த் எட்டினார் என்று சொல்கிறது இப்படத்தின் இரண்டாம் பாதி.

இந்த திரைப்படத்தைப் பார்க்கும் ஒருவர், நிச்சயமாக ஸ்ரீகாந்தின் உண்மைக்கதையைத் தேடிப் பிடித்து அறிந்து கொள்வார். அந்தளவுக்கு வியப்பூட்டும் வாழ்க்கையொன்றை இப்படம் காட்டுகிறது.

கமர்ஷியல் ஹிட்!

ராஜ்குமார் இப்படத்தில் ஸ்ரீகாந்த் ஆக நடித்திருக்கிறார். ஒன்பதாம் வகுப்பு மாணவராக அவர் வரும் காட்சிகள் மட்டுமே கொஞ்சம் அசவுகர்யமாக உணர வைக்கின்றன. மற்றபடி, படம் முழுக்கப் பல காட்சிகளில் ‘சிக்சர்’ அடித்திருக்கிறார் மனிதர்.

நாயகியாக வரும் ஆலயாவுக்குக் காட்சிகள் குறைவு. ஒரு நவநாகரிகமான இளம்பெண் எனும் அளவில், படத்தில் அவரது தோற்றம் நம்மைச் சுண்டியிருக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஜோதிகா இதில் ஆசிரியை தேவிகாவாக நடித்துள்ளார். அப்பாத்திரத்தின் குடும்பப் பின்னணி இப்படத்தில் விலாவாரியாகச் சொல்லப்படவில்லை. அக்குறையை மறக்கடிக்கும் அளவுக்குச் சிறப்பான நடிப்பை அவர் தந்திருக்கிறார்.

போலவே, சரத் கேல்கரும் இரண்டாம் பாதி முழுக்கத் தனது சிறப்பான நடிப்பால் நம்மை வசீகரிக்கிறார்.

தன்னுள் இருக்கும் ஈகோவின் உச்சத்தில் ஸ்ரீகாந்த் பேசும் காட்சியில், ரவியாக அவர் ‘ரியாக்ட்’ செய்திருக்கும் விதம் அருமை.

இவர்கள் தவிர்த்து சுமார் இரண்டு டஜன் பேராவது இப்படத்தில் நடித்திருப்பார்கள். அப்துல் கலாமாக நடித்த ஜமீல் கானும் அவர்களில் ஒருவர்.

அனைவரது நடிப்பும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது; அவர்கள் முகங்களை நினைவுகொள்ளும் வகையிலே காட்சியாக்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவிலுள்ள ஒரு குக்கிராமம், ஹைதராபாத் எனும் பெருநகரம், எம்.ஐ.டி. வளாகம் என்று பல்வேறு இடங்களுக்கு இடம்பெயரும் திரைக்கதைக்கு ஏற்ப, பொருத்தமான ஒளியமைப்புடன் காட்சிகளைப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரதாம் மேத்தா.

படத்தொகுப்பாளர்கள் தேபஸ்மிதா மித்ரா – சஞ்சய் சங்க்லா இருவரும் திரையில் விறுவிறுப்பு குறையாதவாறு முன்பாதியைக் கோர்த்துள்ளனர்.

இரண்டாம் பாதியில் ஸ்ரீகாந்த் எனும் மனிதரின் மனதிலுள்ள ஈகோவும் கோபமுமே பிரதானம் என்பதால், அதற்கேற்பக் காட்சிகள் நிதானமாக நகர்வதாக அமைத்திருப்பது நல்ல விஷயம். சிலர் அதனை ஒரு பலவீனமாகவும் உணரலாம்.

தன்வி லீனா பாட்டீலின் தயாரிப்பு வடிவமைப்பு, தேஜாஸ் அம்ருத்கர், ஜேம்ஸ் நீல்சன் – மிஸ்ராவின் கலை வடிவமைப்பு, ரோஹித் சதுர்வேதியின் ஆடை வடிவமைப்பு மற்றும் ஒப்பனைக் கலைஞர்களின் பங்களிப்பானது யதார்த்தத்தோடு சினிமாவுக்கான ஜிகினாத்தனம் சிறியளவில் கலந்த ஒரு உலகை நாம் காண வழி வகுத்துள்ளது.

ஆனந்த் – மிலிந்த் இசையமைத்த ‘பாப்பா கஹ்தே ஹைய்ன்’ பாடல் இதில் இடம்பெற்றுள்ளது. அப்பாடல் வருமிடங்கள் நம்மை உற்சாகத்தில் ஆழ்த்துகின்றன.

தனிஷ்க் பக்சி, சசேத் – பரம்பரா, வேத் சர்மா, ஆதித்ய தேவ் ஆகியோர் இப்படத்தின் இதர பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்.

சில கமர்ஷியல் படங்களில் உத்வேகம் ப்ளஸ் உற்சாகத்தோடு கூடிய பின்னணியை இசையை அனுபவிக்க முடியும். அது ஹீரோயிசம் ஆக திரையில் வெளிப்படும்.

அதற்கிணையான உணர்வெழுச்சியை, ‘ஸ்ரீகாந்த்’ படத்தில் ஏற்படுத்தியிருக்கிறார் பின்னணி இசை அமைத்திருக்கும் இஷான் சாப்ரா.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை சுமித் புரோகித் – ஜக்தீப் சித்து அமைத்துள்ளனர். ‘என்னால ஓட முடியாது; சண்டை போடத்தான் முடியும்’ என்பது போன்ற வசனங்கள் திரைக்கதையின் தொடக்கத்திலேயே ஒலிக்கின்றன.

அவையே இப்படத்தின் திரைக்கதை எப்படிப்பட்டதாக இருக்குமென்பதை உணர்த்திவிடுகின்றன.

நிச்சயமாக, ‘ஸ்ரீகாந்த்’ திரைப்படம் ஒரு கமர்ஷியல் ஹிட் ஆக அமையும். அதற்கேற்ற பல அம்சங்கள் இதிலுண்டு. இயக்குனர் துஷார் ஹிராநந்தானி அதனை நோக்கமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

இழுவையான இரண்டாம் பாதி!

முதல் பாதி முழுக்க ஸ்ரீகாந்த் எனும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மனிதரின் அபாரமான சிந்தனைத்திறனை நமக்குக் காட்டுகிறது. சாதாரண மனிதர்களால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அக்காட்சிகள் உள்ளன.

ஆனால், அதே மனிதரின் மனதில் நிகழும் ரசாயன மாற்றங்களைப் பேசுகிறது பின்பாதி.

தன்னை அவமானப்படுத்தியவர்களுக்குப் பதிலடி தர வேண்டுமென்ற மன வேட்கையைச் சொல்கிறது. தன்னம்பிக்கையின் எல்லையை மீறித் தலைக்கனத்தைத் தொடும் புள்ளியைச் சுட்டிக் காட்டுகிறது.

ஸ்ரீகாந்த் ஒரு அரசியல் கட்சியொன்றில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட முடிவெடுக்கும் காட்சிகள் அதற்கான உதாரணம்.

அந்த முடிவு தேவையற்றது என்பதனை அப்பாத்திரம் அறிவதும், தன்னிலையை உணர்வதையும் திரைக்கதையில் தெளிவாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அதுவே, இழுவையான இரண்டாம் பாதி எனும் விமர்சனத்தைத் தூள் தூளாக்குகிறது.

முதல் பாதி ‘மாஸ்’ ஆகவும், இரண்டாம் பாதி ‘கிளாஸ்’ ஆகவும் உள்ளது என்று சில படங்களுக்கு விமர்சனம் எழுதப்படுவதுண்டு. ‘ஸ்ரீகாந்த்’ படத்தை அவ்வரிசையில் சேர்த்திருக்கிறார் இயக்குனர் துஷார் ஹிராநந்தானி.

தன்னம்பிக்கையூட்டும் திரைப்படங்கள் வரிசையில், உலகளவில் தனக்கானதொரு இடத்தையும் பெறுகிறது இத்திரைப்படம்.

குழந்தைகளை நல்லதொரு படத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று எண்ணும் பெற்றோருக்கு ‘ஸ்ரீகாந்த்’ நல்லதொரு சாய்ஸ். இதைவிட, இப்படத்தைக் கொண்டாட வேறு என்ன வேண்டும்?!

– உதய் பாடகலிங்கம்

JyothikaRajkumar RaoSrikanth movie ReviewSrikanth Reviewஆலியாராஜ்குமார்_ராவ்ஜோதிகாஸ்ரீகாந்த்ஸ்ரீகாந்த் விமர்சனம்
Comments (0)
Add Comment