புகழ்பெற்ற காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் அர்பிட் குப்பா உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு காட்டுயிர்ப் பூங்காவில் வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அது சில்லென்று பனிபடர்ந்த அதிகாலை நேரம்.
அர்பிட் குப்பாவின் வாகனத்தைப்பின் தொடர்ந்து பெண் யானை ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த பெண் யானை, பிரேக் அடித்ததைப் போல நின்று, முகம் குப்புறத் தலைகீழாகச் சாய்ந்தது.
யானை, சிரசாசனம் எதுவும் செய்யப் போகிறதோ என்று அர்பிட் குப்பா வியந்து போன நேரம், அந்த யானை முகத்தைத் தரையில் பதித்து கிட்டத்தட்ட தலைகீழாக நின்றது. யானையின் பின்னங்கால்களில் ஒன்று தரையை விட்டு உயர்ந்தது. அர்பிட் குப்பாவுக்கு எதுவும் புரியவில்லை.
பிறகு அவர் காட்டுயிர் ஆர்வலர் ஒருவரிடம் அதுபற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார். யானையின் முகம், குறிப்பாக பெண் யானையின் முகம், அதீத மென் உணர்வு மிக்கது. கரடுமுரடான எதிலும் முகத்தை தேய்ப்பதை யானை விரும்பாது.
இரவில் கொசுக்கடி, பூச்சிக்கடிகளால் அவதிபடும் யானை, அதிகாலை வேளையில் புல்லும், தூசியும், பனித்துளிகளும் நிறைந்த பகுதிகளில் இப்படி முகத்தைக் கவிழ்த்து, தரையில் பதித்து அதன்மூலம் அரிப்பையும், வலியையும் போக்கிக் கொள்ளும்.
அதேப்போல பனியையும் சேற்றையும் பக்குவமாகக் குழைத்து முகத்தில், பூசிக் கொள்ளும் யானைகளும் உள்ளன. இதன்மூலம் ஒட்டுண்ணிகளின் தொல்லையையும் யானை நீக்கிக்கொள்ளும்.
ஒருவகையில், அதிகாலையில் இப்படி தரையில் முகத்தைப் பதிப்பது பெண் யானைகள் செய்து கொள்ளும் ஒருவகை ஃபேசியல். செலவில்லாத ஃபேசியல். இயற்கை எவ்வளவு விந்தைகளை வைத்திருக்கிறது பாருங்கள்.
– நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு