ரசவாதி – டைட்டிலுக்கு அர்த்தம் சேர்த்திருக்கலாம்!

வெற்றிகரமான திரைப்பட இயக்குனர் என்றால் தொடர்ச்சியாகப் படங்களை இயக்கியிருக்க வேண்டும்; இல்லை, தனித்துவமான படைப்புகள் சிலவற்றைத் தந்தாலே போதும்; இப்படி இரு வேறு அளவுகோல்கள் ரசிகர்கள் மத்தியில் உள்ளன. அந்த வகையில், இரண்டாவது வரிசையில் இடம்பெறத்தக்க வகையில் மௌனகுரு, மகாமுனி என்ற இரண்டு திரைப்படங்களைத் தந்தவர் இயக்குனர் சாந்தகுமார். அவரது இயக்கத்தில் மூன்றாவதாக வெளியாகியுள்ளது ‘ரசவாதி’.

அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா, ஜி.எம்.சுந்தர், சுஜித்சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் எஸ் இசையமைத்துள்ளார்.

சரி, ‘ரசவாதி’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?

தெரியாத பக்கம்!

கொடைக்கானல் மலையில் போகர் வைத்தியசாலையை நடத்தி வருகிறார் சித்த வைத்தியர் சதாசிவ பாண்டியன் (அர்ஜுன் தாஸ்). தன்னைத் தேடி வருபவர்களுக்கு எளிமையான, மிகச்சரியான சிகிச்சையை அளிப்பது அவரது பாணி.

கொடைக்கானலில் உள்ள ரிசார்ட் ஒன்றின் மேலாளராகப் பணியில் சேர்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த சூர்யா (தான்யா ரவிச்சந்திரன்). அவர் அவ்வூருக்கு வந்த முதல் நாளே சதாசிவத்தைப் பார்க்கிறார்.

முதல் பார்வையிலேயே, அவருக்குச் சதாசிவத்தைப் பிடித்துப் போகிறது. நாளடைவில் இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்குகின்றனர்.

கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஆய்வாளராக வந்து சேர்கிறார் பரசுராஜ் (சுஜித்சங்கர்). பத்தாண்டுகளுக்கு முன்னர் கடலூரில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகையில் ஆய்வாளராக இருந்தவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, அதனைத் தற்கொலை வழக்காகப் பதிவு செய்யும் அளவுக்குக் குயுக்திகளைக் கொண்டவர்.

தன்னைச் சுற்றியிருப்பவர்களை இம்சிக்கும் இயல்பு கொண்ட அவர், தீவிர மனநலப் பிரச்சனையொன்றை நெடுங்காலமாக எதிர்கொண்டு வருகிறார்.

ஒருநாள் கூலிப்படையைச் சேர்ந்த சிலரோடு சதாசிவம் சண்டையிடுகிறார். அந்த நபர்கள் ஒரு பெண் மருத்துவரின் கணவரைக் கொலை செய்ய வந்தவர்கள். அந்த மோதல் தொடர்பான விசாரணையின்போது சதாசிவத்தை முதன்முறையாகப் பார்க்கிறார் பரசுராஜ்.

பார்த்தவுடனேயே, அவர் முகத்தில் ஆத்திரம் பற்றி எரிகிறது. ஆனால், சதாசிவம் அவரோடு சாதாரணமாக உரையாடுகிறார்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு சதாசிவம், சூர்யா எங்கு சென்றாலும்,  அவர்களைப் பின்தொடர்கிறார் பரசுராஜ். அவர்களது அன்புப் பிணைப்பைப் பிரிக்க முயற்சிக்கிறார்.

அது ஏன்? சதாசிவம் மீது பரசுராஜுக்கு என்ன ஆத்திரம்? இருவரது வாழ்விலும் வெளியே தெரியாத பக்கங்கள் எப்படிப்பட்டவை என்று சொல்கிறது ‘ரசவாதி’ படத்தின் மீதி.

எளிமையான படம்!

அர்ஜுன் தாஸுக்கு இதில் ஒற்றைக்காலைச் சரித்துச் சரித்து நடக்கும் ஒரு மாற்றுத்திறனாளி பாத்திரம். அதனை முழுமையாக ரசிகர்கள் உணரும் வகையில், ஒவ்வொரு ஷாட்டிலும் தனது நடையில் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால், கடைசியாக வரும் சண்டைக்காட்சியில் மட்டும் அதனை கோட்டை விட்டிருக்கிறார்.

தான்யா ரவிச்சந்திரன் முப்பது வயதைத் தொட்டுவிட்டார் என்பதைக் காட்டிக் கொடுக்கிறது அவரது முகத்தில் பொங்கும் பூரிப்பு. அதையும் மீறித் தன் அழகாலும் நடிப்புத்திறமையாலும் அப்பாத்திரத்திற்கு உயிரூட்ட முயன்றிருக்கிறார். ஆனாலும் அப்பாத்திரம் ஒரு பொம்மை போன்றே நம் கண்ணுக்குத் தென்படுகிறது.  

ரேஷ்மா வெங்கடேஷ் இதில் இன்னொரு நாயகி. நடனமாடும் பாங்கு, முக பாவனை, தேர்ந்த நடிப்பு மூலம் அவர் நல்லதொரு புதுவரவு எனும் நம்பிக்கையை ஊட்டுகிறார்.

ஜி.எம்.சுந்தர், சுஜாதா சிவகுமார், ரிஷிகாந்த் உட்படப் பலர் இதில் வந்து போகின்றனர். அவர்களில் மனநல மருத்துவராக வரும் விஜே ரம்யா சுப்பிரமணியன் இடம்பெறும் காட்சிகள் தியேட்டரில் சிரிப்பலையை உண்டுபண்ணுகின்றன.

அதற்குக் காரணம், வில்லனாக வரும் சுஜித் சங்கர். ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தில் பகத் பாசிலைப் புரட்டியெடுக்கும் வில்லனாக இரண்டொரு காட்சிகள் மட்டுமே இடம்பெற்றவர், இப்படத்தில் பிரதான இடத்தைப் பெற்றிருக்கிறார்.

குழந்தைப் பருவத்தில் வாடி வெம்பிப்போன ஒரு மனிதனாகத் திரையில் தோன்றியதோடு, அப்பாத்திரத்தை நியாயப்படுத்தும் விதமாக வெளிப்படுகிறது அவரது நடிப்பு. அது அருவெருக்கத்தக்க வகையில் இல்லாமல், ரசிக்கும் வகையில் அமைந்திருப்பது சிறப்பு.

தமன் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. இருக்கையை விட்டு எழுந்திருக்கும் மனநிலையையும் உருவாக்கவில்லை.

அதேநேரத்தில், அடுத்த காட்சியில் என்ன ஆச்சர்யம் காத்திருக்கிறது எனும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் விதமாக உள்ளது தமனின் பின்னணி இசை.

’மௌனகுரு’, ‘மகாமுனி’ படங்களில் ஒவ்வொரு பிரேமிலும் பிரமாண்டம் தெரியும். பட்ஜெட் அல்லாமல் காட்சிப்பூர்வமான பிரமாண்டம் அது. ‘ரசவாதி’யில் அப்படியொரு அம்சம் இல்லை.

அதேநேரத்தில், காட்சியின் தன்மைக்கு ஏற்ப நேர்த்தியான ஆக்கத்தைத் தந்திருக்கின்றனர் ஒளிப்பதிவாளர்கள் சரவணன் இளவரசு மற்றும் சிவா ஜிஆர்என்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாட்களை இணைத்து நல்லதொரு திரையனுபவத்தைப் பெறச் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் வி.ஜே.சாபு ஜோசப்.

திரைக்கதையில் பெரிதாகத் திருப்பங்களைப் புகுத்தாமல் ஒரு எளிமையான கதை திரையில் விரிய வழி வகுத்திருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார்.

அவரது முந்தைய படங்களும் கூட மிக எளிமையான கதைக்கரு சார்ந்தவை தான். ஆனால், இரண்டிலும் திருப்பங்கள் அதிகம் இருக்கும். அப்படியொரு அனுபவத்தை எதிர்பார்த்து ’ரசவாதி’யைக் காண வருபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

ரம்யா – சுஜித் காட்சிகள்!

நாயகனுக்குச் சொல்லப்படாத இன்னொரு பக்கம் உண்டு என்ற ‘பாட்ஷா’ டைப் கதையைத்தான் ‘ரசவாதி’யில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார்.

கொடைக்கானல் பின்னணி, இயற்கை எழில் கொஞ்சும் லொகேஷன், கவனிக்கத்தக்க கதாபாத்திர வார்ப்பு, முரண்கள் விளையத்தக்க கதைப்போக்கு என்று எல்லாவற்றையும் பார்த்து பார்த்து திரைக்கதையில் இழைத்திருக்கிறார்.

அனைத்தையும் மீறி ஒரு குறைந்த பட்ஜெட் படத்தைப் பார்க்கும் உணர்வைத் தருகிறது ‘ரசவாதி. படத்தின் மிகப்பெரிய பலவீனம் அதுவே.

என்னதான் அர்ஜுன் தாஸ், தான்யா, சுஜித் பாத்திரங்களை நுட்பமாக வடித்திருந்தாலும், அவை ஒட்டுமொத்தமாக ரசிகர்களிடத்தில் தாக்கத்தை உருவாக்கவில்லை.

குறிப்பாக, தான்யாவின் கோவைப் பின்னணியையும் பெங்களூரு வாழ் அனுபவங்களையும் போகிற போக்கில் சொல்லியிருப்பது மனதில் ஒட்டவில்லை.

ரம்யா – அர்ஜுன் தாஸ் இடையே மோதலை அதிகப்படுத்தும் வகையிலான காட்சி வரப்போகிறது எனும் எதிர்பார்ப்பை முன்பாதியில் தந்திருக்கிறார் இயக்குனர். ஆனால், பின்பாதியில் அப்படியொரு காட்சி வரவே இல்லை.

’ரசவாதி’ திரைக்கதையில் மிகப்பெரிய திருப்பம் என்றால், பரசுராஜ் குறித்து சதாசிவம் முழுமையாக அறிவதுதான். அவ்விடமும் கூட  கிளைமேக்ஸில் தான் வருகிறது.

ஆனால், அதனை முந்தைய காட்சிகளில் இருந்து நம்மால் எளிதில் ஊகித்துவிட முடிகிறது. அது போன்ற பலவீனங்களைத் தாண்டி அர்ஜுன் தாஸ் – தான்யாவுக்கான மாண்டேஜ் இசைத்துணுக்கு, சுஜித் சங்கரின் மனநலப் பிரச்சனை போன்றவை நம்மை ஈர்க்கும்விதமாக உள்ளன.

குறிப்பாக ரம்யாவை சுஜித் வேலை வாங்கும் காட்சிகள் தியேட்டரில் கைத்தட்டலை அள்ளுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் ‘ஜுனியர் விகடன்’ இதழில் வெளியான ரவுடிகள் குறித்த தொடர் ஒன்றில் வடசென்னை ரவுடி ஒருவர் தன்னிடம் பஞ்சாயத்துக்கு வரும் வட இந்தியர்களின் குடும்பத்துப் பெண்களை அப்படி வேலை வாங்கியதாகப் படித்த நினைவு. அந்த ரெஃபரன்ஸை மிகச்சரியாகத் திரையில் பயன்படுத்தியிருக்கிறார் சாந்தகுமார்.

’ரசவாதி’ படத்தில் ஆறுதல் தரும் விஷயம், அதன் ஆகச்சிறந்த எளிமையான காட்சியாக்கம். இத்திரைக்கதையில் அருவெருப்பூட்டும் அம்சங்களையும் வன்முறையையும் காமக்கிளர்ச்சியையும் நிச்சயம் அதிகப்படுத்தியிருக்க முடியும். ஆனால், இயக்குனர் அதைச் செய்யவில்லை. போலவே, இன்னும் நேர்த்தியாகவும் ரத்தினச்சுருக்கமாகவும் இப்படைப்பை வார்த்திருக்க முடியும். அதுவும் நிகழவில்லை.

அவ்விரண்டு முனைகளுக்கும் இடையே ‘ஓகே’ எனும் ரகத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது ‘ரசவாதி’. முக்கியமாக, அர்ஜுன் தாஸ் பாத்திரத்தால் சக மனிதர்கள் வாழ்வில் நிகழும் மாற்றங்களை இன்னும் கூட விரிவாகக் காட்டியிருந்தால், டைட்டிலுக்கு அர்த்தம் கிடைத்திருக்கும். அதைச் செய்யாத காரணத்தால், பாதரசத் திரள் போல நம் மனதில் ஒட்டாமல் உருண்டோடுகிறது இத்திரைப்படம். 

– உதய் பாடகலிங்கம்

#Arjun_das #rasavathi_movie_review #அர்ஜூன்_தாஸ் #ரசவாதி #இயக்குனர்_சாந்தகுமார் #தான்யா_ரவிச்சந்திரன் #ரேஷ்மா #ஜி_எம்_சுந்தர் #சுஜித்சங்கர் #தமன் #director_santha_kumar #thanya_ravichandren #reshma #gm_sundar #sujith_shankar #thaman

Arjun dasdirector santha kumarrasavathi movie reviewreshmathamanthanya ravichandrenஅர்ஜூன் தாஸ்இயக்குனர் சாந்தகுமார்சுஜித்சங்கர்தமன்தான்யா ரவிச்சந்திரன்ரசவாதிரேஷ்மாஜி.எம்.சுந்தர்
Comments (0)
Add Comment