அண்மையில் நிறவேறுபாடு குறித்த சர்ச்சை போய்க்கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடி, “குடியரசுத் தலைவர் தேர்தலின்போது தற்போதைய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் கருப்பு நிறம் காரணமாகவே அவரை காங்கிரஸ் கட்சி தோற்கடிக்க முயன்றது என்று இப்போது புரிந்துகொள்ள முடிகிறது” என்று தெரிவித்திருந்தார்.
பிரதமரின் இந்தக் கருத்து குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்ஹா என இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் திரவுபதி முர்முவை ஆதரித்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரித்தன.
வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பது அவரின் தோல் நிறத்தின் அடிப்படையில் இல்லை. அதேபோல் தோலின் நிறத்தின் அடிப்படையில் எந்த வேட்பாளரையும் எதிர்ப்பது இல்லை. ஒரு வேட்பாளரை ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பது என்பது அரசியல் முடிவாகும்.
தேர்தல் விவாதத்தில் தோலின் நிறத்தினை பிரதமர் மோடி கொண்டுவந்தது ஏன்? பிரதமரின் கருத்து முற்றிலும் பொருத்தமற்றது. அப்பட்டமான இனவெறி” என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.