யாருக்காகவோ பலிகடாவாகி இருக்கும் நிர்மலாதேவி!

தமிழக ஊடகங்களுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தீனிகள் கிடைத்திருக்கின்றன. அந்த குறிப்பிட்ட தீனி எவ்வளவு ருசிகரமானது என்பதைப் பொறுத்து அது பற்றிய செய்திகள் தொடர்ந்து அடிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

குறிப்பிட்ட கால கட்டத்திற்குப் பிறகு அந்த செய்தி மறக்கடிக்கப்பட்டு விடும். இது தான் ஊடகங்களின் வாடிக்கையான இயல்பு.

இந்த இயல்புக்கு தப்பியவரல்ல, தற்போது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்றுள்ள பேராசிரியை நிர்மலாதேவி.

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்ன, அதன் பின்புலம் என்ன?

கல்வி வழங்குவதில் மிகபெரிய உயரமாகத் திகழும் பல்கலைக் கழகத்தில் உள்ள யாரோ ஒரு சில அதிகாரப் பின்புலம் கொண்ட நபர்களுக்காக, பல்கலைக் கழத்திலும் கல்லூரியிலும் படிக்கும் மாணவிகளை பாலியல் ரீதியாக ஒரு கட்டாயத்திற்கு உட்படுத்தியது தான் அவர் சுமத்தப்பட்டுள்ள வழக்கு.

யாருக்காக அவர் இம்மாதிரியான பணிகளில் ஈடுபட்டார் என்ற தகவலும் அந்த சமயத்தில் அடிபட்டது. மிக உயர்ந்த பொறுப்புகளில் உள்ளவர்களின் பெயர்கள் கூட அடிபட்டன.

அந்தக் குற்றச்சாட்டுக்களை சம்பந்தப்பட்ட நபர்கள் மறுத்தாலும் கூட, அவை பற்றி விரிவான விசாரணை தொடரவில்லை. அல்லது தொடர முடியவில்லை.

இந்த நிலையில், நீண்டகாலமாக பல்வேறு அளவில் இழுத்தடிக்கப்பட்ட நிர்மலாதேவி வழக்கு இப்போது முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் இதனுடைய பின்புலமாக இருந்தவர்கள் யார் என்பது பற்றிய விவரங்கள் பொது வெளியில் வைக்கப்படுமா என்பது மிக முக்கியமான கேள்வி.

அதாவது, பேராசிரியை நிர்மலாதேவி கூண்டுக்குள் மாட்டப்பட்டிருக்கிற எலிப்பொறி மட்டும் தான். அவர் யாருக்காக இம்மாதிரியான பணிகளைச் செய்தார் என்பதும் அவை ஏன் இம்மாதிரியான சமயங்களில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன என்பதும் அடுத்தடுத்து நடைபெற உள்ள இறுதிக்கட்ட விசாரணையில் தெரியவரலாம்.

இப்போதைக்கு பலிகடா ஆகியிருக்கிறார் நிர்மலாதேவி என்பது தான் உண்மை.

Comments (0)
Add Comment