ஒரு நொடி – பரபரப்பூட்டும் இரண்டு வழக்குகள்!

’இந்த படம் இன்ன வகைமையைச் சார்ந்தது; அதனால், இதனை ரசிப்பவர்கள் மட்டும் தியேட்டருக்கு வந்தால் போதும்’ என்று சொல்வது எளிதான காரியமல்ல. டைட்டில் வடிவமைப்பு, ட்ரெய்லர், படத்திற்கான இதர புரோமோஷன்கள் என்று ‘இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’ வகைமையைச் சார்ந்தது என்று வெளிப்படுத்தியது எல்லாவற்றிலும் ‘ஒரு நொடி’ படக்குழு.

தமன் குமார், எம்.எஸ்.பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, ஸ்ரீ ரஞ்சனி, பழ.கருப்பையா, நிகிதா உட்படப் பலர் நடித்துள்ள இப்படத்தினை பி.மணிவர்மன் இயக்கியுள்ளார்.

தற்போது இப்படம் தியேட்டரில் வெளியாகியிருக்கிறது. சரி, படம் எப்படியிருக்கிறது?

இரண்டு வழக்குகள்!

அலங்காநல்லூரில் ஸ்டூடியோ வைத்திருக்கும் சேகரன் (எம்.எஸ்.பாஸ்கர்) காணாமல் போனதாக, அவரது மனைவி (ஸ்ரீ ரஞ்சனி) காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அப்பகுதியில் கந்துவட்டிக்காரராக இருந்து வரும் தியாகு (வேல.ராமமூர்த்தி) மீது சந்தேகம் தெரிவிக்கிறார்.

இன்ஸ்பெக்டர் பரிதி இளமாறன் (தமன்குமார்) அவ்வழக்கை விசாரிக்கிறார்; தியாகுவையும் அவரது ஆட்களையும் கைது செய்கிறார்.

சேகரன் காணாமல் போன வழக்கு குறித்து அவர் விசாரித்து வரும் நிலையில், அப்பகுதியில் ஒரு இளம்பெண் கொலை செய்யப்படுகிறார். அந்தப் பெண்ணின் பெயர் பார்வதி (நிகிதா). யார் அவரைக் கொலை செய்தார்கள் என்ற ரீதியில் போலீஸ் விசாரணை தொடர்கிறது.

பரிதி இளமாறன் தலைமையில் அங்குள்ள போலீசார் அனைவருமே, இந்த இரு வழக்குகள் தொடர்பாக மாறி மாறி விசாரணையில் ஈடுபடுகின்றனர். அதன் முடிவில் ஒரு உண்மை தெரிய வருகிறது.

அது என்ன? இந்த இரு வழக்குகளும் ஏன் ஒரே கதையில் இடம்பெற்றிருக்கின்றன? இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது படத்தின் கிளைமேக்ஸ்.

சேகரன் காணாமல் போனது எப்படி என்ற போலீசாரின் விசாரணை வேகமெடுக்கும் நிலையில், திடீரென்று இன்னொரு கிளையாக பார்வதி கொலை வழக்கு வந்து சேர்கிறது.

அதன்பிறகு, அந்த வழக்கே போலீசாருக்கு பிரதானம் என்றாகிறது.

இடையில், சேகரனையும் மனதில் வைத்திருக்கிறேன் என்று சொல்லாத குறையாக, அவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அவ்வப்போது மேற்கொள்கிறார் இன்ஸ்பெக்டர்.

அப்படியென்றால், ஒரு இன்ஸ்பெக்டரின் தினசரி வாழ்க்கையும், அதில் அவர் சந்திக்கும் வழக்குகளும் மட்டுமே இதில் திரைக்கதை ஆக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழலாம். அதற்கு இயக்குனர் பி.மணிவர்மன் பதில் சொல்லியிருக்கும் விதம் அருமை.

ஒவ்வொரு நொடியும்..!

’சட்டம் ஒரு இருட்டறை’ ரீமேக், ‘தொட்டால் தொடரும்’ படங்களில் நடித்தவர் தமன்குமார். இடையில் சிலகாலம் சன் டிவி சீரியலிலும் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான ‘அயோத்தி’யில் சசிகுமாரின் நண்பராகத் தோன்றியிருந்தார்.

இதில் படம் முழுக்க வருகிறார் தமன். ஆங்காங்கே தெனாவெட்டு, முறைப்பு காட்டினாலும், பெரும்பாலான காட்சிகளில் கஞ்சி போட்ட சட்டை போல விறைப்பு காட்டியிருக்கிறார்.

பார்வதியாக வரும் நிகிதா மட்டுமே, இதில் இடம்பெற்ற பெண் கலைஞர்களில் முதன்மையானவராக உள்ளார்.

ஒரு சராசரி நடுத்தர வயது மனிதராக வந்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் படம் முழுக்க வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அரசியல்வாதிகள் மத்தியில் செல்வாக்கு கொண்ட ஒரு கந்துவட்டிக்காரராக வேல.ராமமூர்த்தி தோன்றியிருக்கிறார்.

இன்னும் கஜராஜ், ஸ்ரீரஞ்சனி, பழ.கருப்பையா, சலூன்கடைக்காரராக வருபவர், நிகிதாவின் பின்னால் ஒருதலைக்காதலோடு சுற்றுபவர், போலீஸ்காரராக வரும் கருப்பு நம்பியார் என்று சுமார் 1 டஜனுக்கும் மேற்பட்ட பாத்திரங்கள் இதிலுள்ளன. அனைவருமே நம் மனதில் பதியும்படி நின்று நிதானமாகக் காட்சி தந்துள்ளனர்.

கண்ணீர் விட்டுக் கதறும் காட்சிகளில் தீபா சங்கர், அவரது கணவராக வருபவர், சீரியல் நடிகர் அருண் கார்த்தி ஆகியோர் நம் மனதைத் தொடுகின்றனர்.

சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை, காட்சிகளில் நிறைந்திருக்கும் விறுவிறுப்பை மேலும் அதிகப்படுத்துகிறது.

இரண்டு பாடல்கள் மெலடி மெட்டுகளாக அமைந்துள்ளன.

கே.ஜி.ரதீஷின் ஒளிப்பதிவு சில இடங்களில் ‘குறும்படம்’, ‘வீடியோ’ பாணியில் அமைந்தாலும், திரையில் விறுவிறுப்பூட்டுவதில் குறை வைக்கவில்லை.

குருசூரியாவின் படத்தொகுப்பு, ஒரே காட்சி பல முறை இடம்பெறுவதைச் சரியாகத் தொகுத்திருக்கிறது.

எஸ்.ஜே.ராமின் கலை வடிவமைப்பு ஓகே ரகம். கலரிஸ்ட் சிவசங்கர் உழைப்பும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

பி.மணிவர்மன் இப்படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இடைவேளைப்பகுதியின்போது லேசாகச் சுணங்குவதைத் தவிர, இதர காட்சிகளில் ரசிகர்கள் சோர்வை உணராதவாறு பார்த்துக் கொள்கிறது திரைக்கதை.

படம் முழுக்கப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இயக்குனர், தனது ‘ஒரு நொடி’ டைட்டிலுக்கான காரணத்தைத் திரைக்கதையின் ஓரிடத்தில் புகுத்தியிருக்கிறார். ஒவ்வொரு நொடியையும் விறுவிறுப்பு நிறைந்ததாக மாற்ற முயற்சித்திருக்கிறார்.

எளிமையான படம்!

‘ஒரு நொடி’ ஒரு எளிமையான, யதார்த்தமான, காவல் துறை விசாரணையை விவரிக்கும் ஒரு திரைப்படம். அந்த திசையை விட்டு வேறு பக்கமே இயக்குனர் தனது கவனத்தைத் திருப்பவில்லை.

அதனால், படம் முழுக்கவே வழக்கு தொடர்பான தகவல்களே சொல்லப்படுகின்றன. இடையே, நாயகனின் திருமணம் தொடர்பாக அவரது பெற்றோர் பேசுவது போன்று ஒரு காட்சி அமைந்துள்ளது. அதைத் தாண்டி வேறெதுவும் இல்லை.

தெலுங்கில் வெளியான ‘ஹிட்’, தமிழில் வெளியான ‘வி1’ பாணியில் முழுக்க போலீஸ் விசாரணையை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது இப்படம். கடந்த ஆண்டு வெளியான ‘போர்தொழில்’ படமானது வில்லனை சைக்கோ ஆக்கி, அவரைத் தேடுவதைப் பரபரப்புடன் காண்பித்திருக்கும்.

அந்த வகையில், ‘ஒரு நொடி’ திரைப்படம் நிவின் பாலியின் ‘ஆக்‌ஷன் ஹீரோ’ படத்தை லேசாக நினைவூட்டுகிறது.

இரு வேறு வழக்குகள், ஒரே காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடக்கின்றன என்பதே இக்கதையின் அடிப்படை. அதனை வைத்துக்கொண்டு, பார்வையாளர்கள் மனதில் பல கேள்விகளை எழுப்பி, அவை சப்பென்று முடியும்விதமாக அக்காட்சிகளை முடித்திருக்கிறார்.

கிளைமேக்ஸில், நாம் எதிர்பாராத, சில தீவிர த்ரில்லர் ரசிகர்கள் எதிர்பார்த்த (?!) ஒரு திருப்பத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குனர் பி.மணிவர்மன்.

மிகச்சில இடங்களில் சில கதாபாத்திரங்கள் வசனம் பேசும் விதம் செயற்கையாக அமைந்துள்ளன.

தொடக்க காட்சி ஒன்றில், சிரித்தவாறே ஒரு வழக்கறிஞர் பாத்திரம் சவால் விடும். அது போன்ற குறைகளைத் தவிர்த்திருக்கலாம்.

மற்றபடி, குறைந்த பட்ஜெட்டில் நிறைவான அனுபவத்தைத் தருவதாக உள்ளது ‘ஒரு நொடி’.

படம் முடிந்ததும், நிச்சயமாக நம் மனதில் லாஜிக் சார்ந்து பல கேள்விகள் எழும். ஆனால், அப்போது நாம் தியேட்டரை விட்டு வெளியே வந்திருப்போம். அதுவே ‘ஒரு நொடி’ படத்தின் வெற்றி. வாழ்த்துகள்!

– உதய் பாடகலிங்கம்

விமர்சனம்
Comments (0)
Add Comment