அண்மையில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, பெண்கள் பூஜிக்கும் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறி இருந்தார்.
“கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன – இதன்மூலம் காங்கிரஸ் தலைவர்களின் குடும்பங்கள் சொத்துகளைக் குவித்தன – மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைத்தால் பெண்களின் தாலிச் செயின்கள் மீதும் கண் வைப்பார்கள்’’ என மோடி பேசி இருந்தார்.
இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மகளும் தற்போதைய காங்கிரஸ் பொதுச்செயலாளருமான் பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ’’கடந்த சில நாட்களாக உங்கள் வசம் உள்ள தங்கம் மற்றும் மாங்கல்யத்தை காங்கிரஸ் கட்சி பறிக்கும் என சொல்லப்பட்டு வருகிறது – தேசம் விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது – காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. யாரேனும் உங்களது தங்கத்தை அல்லது மாங்கல்யத்தை பறித்தார்களா?’’ என அவர் வினா எழுப்பினார்.
“யுத்தத்தின் போது தேசத்துக்காக தனது தங்கத்தை கொடுத்தவர் எனது பாட்டி இந்திரா காந்தி – நாட்டுக்காக மாங்கல்யத்தை தியாகம் செய்தவர் எனது அம்மா” என பிரியங்கா ஆவேசமாக தெரிவித்தார்.
“பெண்களின் போராட்டத்தைப் பாஜகவினரால் புரிந்து கொள்ள முடியாது – அது புரிந்திருந்தால் பிரதமர் மோடி அப்படி பேசியிருக்க மாட்டார்” என்றும் பிரியங்கா குறிப்பிட்டார்.
– பி.எம்.எம்.