அசத்தும் ‘ஸ்ரீகாந்த்’ பட ட்ரெய்லர்!

ஒரு திரைப்படத்தைக் காணச் செய்வதற்கான ஆவலைத் தூண்டும் வகையில் அதன் ட்ரெய்லர் அமைய வேண்டும். அதற்கேற்ப, அந்த படம் குறித்த ரத்தினச் சுருக்கமான சித்திரத்தை அது நமக்குள் ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில், முழுக்கதையும் வெளிப்பட்டுவிடக் கூடாது. கூடவே, இன்னும் நிறைய விஷயங்கள் இத்திரைக்கதையில் உண்டு எனும் நம்பிக்கையையும் ஊட்ட வேண்டும்.

சமீபத்தில் அப்படியொரு எண்ணத்தை ஏற்படுத்திய ட்ரெய்லர்களில் ஒன்று ‘ஸ்ரீகாந்த்’. ராஜ்குமார் ராவ், ஆலியா, சரத் கேல்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில் நம்மூர் ஜோதிகாவும் ஒரு முக்கியமான பாத்திரமாக இடம்பிடித்துள்ளார். துஷார் ஹிராநந்தனி இதனை இயக்கியுள்ளார்.

ஸ்ரீகாந்த் பொல்லா என்ற மனிதரின் வாழ்வைத் தழுவிய உண்மைக் கதை என்பதே இப்படத்தின் சிறப்பு.

யார் இந்த ஸ்ரீகாந்த்?

ஆந்திரப் பிரதேசத்தின் மச்சிலிப்பட்டினம் அருகே சீதாராமபுரம் எனும் ஊரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் பொல்லா. இவரது பெற்றோர் விவசாயிகளாக வாழ்ந்தவர்கள்.

சிறு வயதிலேயே படிப்பில் சிறந்து விளங்கிய ஸ்ரீகாந்த், பத்தாம் வகுப்புக்குப் பிறகு ‘அறிவியல்’ பிரிவைத் தேர்ந்தெடுத்தார்.

ஆனால், பள்ளி நிர்வாகம் அப்பிரிவில் சேர ஸ்ரீகாந்தை அனுமதிக்கவில்லை. காரணம், அவர் கண்பார்வைத் திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி என்பதே.

அதனை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை நாடினார். அதன்பிறகு, ஒருவழியாக அனுமதி கிடைத்து, பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார்.

பன்னிரண்டாம் வகுப்பில் அவர் 98 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஐஐடி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி அறிவியல் கல்விக்கூடங்களில் மேல்படிப்புக்காக விண்ணப்பித்தார்.

ஆனால், பார்வைத் திறன் கொண்ட மாற்றுத்திறனாளியைப் பொறியியல் படிக்க அனுமதிக்க முடியாது என்று அவை அவரது விண்ணப்பத்தை நிராகரித்தன.

மீண்டும் ஒரு புறக்கணிப்பு. இம்முறை தனது கவனத்தை அமெரிக்காவில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்கள் பக்கம் திருப்பினார் ஸ்ரீகாந்த்.

மாசசூசெட்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் அவருக்கு இடம் கிடைத்தது. அங்கு கல்வி பயின்ற முதல் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஸ்ரீகாந்த் தான்.

அதன்பிறகு, அமெரிக்காவிலுள்ள பல கார்பரேட் நிறுவனங்கள் அவருக்கு வேலைவாய்ப்பை வழங்க முன்வந்தன. ஆனால், இந்தியா திரும்பவே அவர் விரும்பினார்.

இங்கு தன்னைப் போன்ற பல மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்க முடிவு செய்தார்.

2012ஆம் ஆண்டு தொழிலதிபர் ரத்தன் டாடாவின் நிதியுதவியோடு ‘பொல்லாண்ட் இண்டஸ்ட்ரீஸ்’ எனும் பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார் ஸ்ரீகாந்த்.

பாக்குமரம் சார்ந்த தயாரிப்புகள் அதில் உற்பத்தி செய்யப்பட்டன. அது மட்டுமல்லாமல் கழிவுப்பொருட்களை மறுசுழற்சிக்கு உட்படுத்திப் பயனுள்ள பொருட்களாக மாற்றும் பணியும் அங்கு மேற்கொள்ளப்பட்டது. 2018ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மதிப்பு 150 கோடி ரூபாய் ஆனது.

இது தவிர மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ப்ரெய்லி அச்சகத்தையும், ஒரு அறக்கட்டளையையும் ஸ்ரீகாந்த் நடத்தி வருகிறார்.

மனம் கவரும் ராஜ்குமார்!

இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் பொல்லா ஆக நடிகர் ராஜ்குமார் ராவ் தோன்றியிருக்கிறார். ட்ரெய்லரில் முதல் பிரேம் தொடங்கி முடிவு வரை, விதவிதமான பாவனைகளால் அவர் நம் மனம் கவர்கிறார்.

பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஆக நம்மூரில் சிவாஜி கணேசன், மேஜர் சுந்தர்ராஜன், கமல்ஹாசன், விக்ரம் என்று பல நாயகர்கள் நடித்துள்ளனர்.

அப்படங்களில் இருந்து மிகவும் வேறுபட்டிருந்தது ‘வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்’ படத்தில் இடம்பெற்ற கலாபவன் மணியின் நடிப்பு. அந்த வரிசையில் இன்னொரு அடியை எடுத்து வைத்தாற் போன்று அமைந்துள்ளது ‘ஸ்ரீகாந்த்’ படத்தில் ராஜ்குமாரின் இருப்பு.

லவ் செக்ஸ் அவுர் தோஹா, சைத்தான், கேங்க்ஸ் ஆஃப் வாஸிப்பூர் 2, கை போ சே, குயின், ட்ராப்டு, பைரேலி கி ஃபார்பி, நியூட்டன், ஸ்திரீ, ஜட்ஜ்மெண்டல் ஹை க்யா, லூடோ, ஹிட்: தி பர்ஸ்ட் கேஸ் என்று கலைப்படங்கள், கமர்ஷியல் படங்கள் என்ற பாரபட்சம் இன்றி விதவிதமான கதைகளில் தன்னைப் பொருத்திக் கொண்டவர் ராஜ்குமார்.

அவரது இன்னொரு பரிமாணத்தை ‘ஸ்ரீகாந்த்’தில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது இதன் ட்ரெய்லர்.

ஆனந்த் – மிலிந்த் இசையில் ‘கயாமத் சே கயாமத் தக்’ படத்தில் இடம்பெற்ற ‘பாபா கஹ்தே ஹெய்ன்’ பாடலின் இசை பின்னணியில் ஒலிக்கிறது.

அதற்கு முன்னதாக ஒலிக்கும் இஷான் சாஃப்ராவின் பின்னணி இசை இந்த ட்ரெய்லரை நாம் ரசிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.

இந்த படத்தை துஷார் ஹிராநந்தனி இயக்கியுள்ளார். 2004ஆம் ஆண்டில் வெளியான ‘மஸ்தி’ தொடங்கி ஏபிசிடி, ஹவுஸ்ஃபுல் 2, ஏக் வில்லன், ஹாஃப் கேர்ள்ப்ரெண்ட் உட்படப் பல வெற்றிப் படங்களுக்கு எழுத்தாக்கம் செய்தவர் இவர்.

ஆனால், தான் முதன்முறையாக இயக்கிய ‘சாந்த் கி ஆங்க்’ படத்திற்கு இவர் கதை திரைக்கதை வசனம் எழுதவில்லை.

2023இல் இவரது இயக்கத்தில் வெளியான ‘ஸ்கேம் 2003’ வெப்சீரிஸ் பத்திரத்தாள் மோசடியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதனாலேயே அது ரசிகர்களால் தேடப்படும் படைப்பாகவும் மாறியது.

தற்போது, மீண்டும் ‘ஸ்ரீகாந்த்’ வழியாக அவர் களமிறங்கியிருக்கிறார். நிச்சயமாக ஒரு தரமான படைப்பை அவர் தரப் போகிறார் எனும் நம்பிக்கையை விதைக்கிறது படத்தின் ட்ரெய்லர்.

நிச்சயம் நம்பிக்கையூட்டும்!

கடந்த ஆண்டு விது வினோத் சோப்ரா இயக்கத்தில் ‘12த் பெயில்’ வெளியானது. பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வியுற்ற மனோஜ்குமார் எனும் மனிதர், கடினமாகப் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று, பின்னர் ஐபிஎஸ் ஆனதைச் சொன்னது அப்படம்.

அதே போன்று ‘ஸ்ரீகாந்த்’ படமும் இளைய தலைமுறையினர் கல்விக்குத் தர வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்தும்; அவர்களது நம்பிக்கையைப் பன்மடங்காகப் பெருக்கும் என்று நம்பலாம்.

‘நான் இந்தியாவின் முதல் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குடியரசுத்தலைவர் ஆக விரும்புகிறேன்’ என்று நாயகன் சொல்லும் வசனமும் சரி; ட்ரெய்லரின் இறுதியில், சிக்னலில் கார் அருகே பிச்சை கேட்கும் மாற்றுத்திறனாளிகளைப் பார்த்துவிட்டு,

அருகில் இருப்பவரிடம் ‘அந்தக் காசை என்கிட்ட கொடுங்க, நான் அவங்களுக்கு வேலை கொடுக்கறேன்’ என்று நாயகன் சொல்வதும் சரி’; நல்லதொரு படத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.

வரும் மே 10ஆம் தேதியன்று ‘ஸ்ரீகாந்த்’ தியேட்டர்களில் வெளியாகிறது.

– மாபா

Comments (0)
Add Comment