உலகப் புத்தகநாள் வாழ்த்துகள்:
இன்றைய அறிவியல் தொழில் நுட்பம் மேம்பட்ட வாசித்தல் அனுபவங்களை பெறுவதற்கான நல்வாய்ப்புகளை வழங்கி உள்ளது.
வாசித்தல் என்பது அறிவின் பெருக்கத்திறகான திறவு கோல்.
துறை சார்ந்த நூல்கள் தவிர பல்வகை நூல்கள் வண்ணப் படங்களுடன் புதிய உத்திகளோடு தினமும் விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன. மின்னணு நூல்களும் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கிறது. விலைக்கும் கிடைக்கிறது.
முரண்பட்ட சிந்தனைகளைக் கொண்டுள்ள அறிவுலகத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல்கள்
எண்ணிலடங்காது.
தகவல் தொழில்நுட்பம் வாசிப்பைக் குறைத்து வருகிறது என்ற விமர்சனத்தை முழுமையாக நிராகரிக்க இயலாது.
நிறையும் குறையும் அறிவுத் தளங்களில் நிறைந்திருப்பது தவிர்க்க இயலாது.
வாசிப்பு ஏன்?, அது எதைக் குறித்து, எதற்காக என்பது குறித்த தெளிவு மிகவும் அவசியம்.
வெறும் பொதுவான வாசித்தலாக இருந்தால் வாசிப்பின் முழு பயனையும் பெற இயலாது.
தேர்ந்தெடுத்த நூல்களை வாசிப்பதும் அதற்கான நேர ஒதுக்கீடும் அறிவின் ஆற்றலை அதிகமாக்கும்.
சிந்தனையின் தேடுதலுக்கான உந்து விசை அறிவார்ந்த நூல்கள் மட்டுமே.
கருத்துள்ள நூல்களின் சாரம்சத்தை நண்பர்களுக்கு பகிர்தல் நலம். அது பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலுக்கு இணையானது.
சிந்தனைப் பகிர்தலும் ஆரோக்கியமான தர்க்கங்களுமே மனித குலத்தின் அறிவியல் சாதனைகளுக்கும் சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களுக்கும் வித்தாக இருந்துள்ளது.
தனி மனித வாசிப்பினால் அடையும் அறிவுக் கொடையை சமூகத்திற்கு கொண்டு செல்லுதல் அறிவுப் பரவலாக்கத்திற்கு உறுதுணையாக அமையும்.
அறிவியல் என்ற இயங்குதளத்தின் அச்சாணி மூளையின் செயல்பாடே ஆகும். அந்த செயல்திறைனை அளிக்கும் அறிவே அதன் சக்தி.
அந்த சக்தியை பெறுவதற்கான மூலம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் முதன்மையானது ஆகும்.
நல்ல நூல்களை வாசிப்பதும் பகிர்வதும் பரிந்துரைப்பதும் சமூகக் கடமை.
நமது பங்கை சமூகத்திற்கு அளிப்போம், மனித நேயம் போற்றும் அறிவார்ந்த இந்தியாவை உருவாக்குவோம்.
வாசிக்கும் அனைவருக்கும் புத்தக தின நல்வாழ்த்துகள்.
– கொடரோடு பாலு