நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் விநோத அரசியல் சூழல் நிலவுகிறது. கேரளாவுக்கு வெளியே கை கோர்த்து நடக்கும் ’காம்ரேட்’களும் காங்கிரஸ் கட்சியினரும் இங்கே ஒருவருக்கொருவர் முஷ்டி உயர்த்தி நிற்கிறார்கள்.
இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி அரசு உருவான முதல் மாநிலம் கேரளா. நாடு சுதந்திரம் அடைந்த 10 ஆண்டுகளில் இங்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டது. அந்தக் கட்சியின் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு, 1957 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆனார்.
கம்யூனிஸ்ட் கோட்டை
பின்னாட்களில் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தாலும், இன்றைக்கும் கேரள மாநிலம் சிவப்புக் கட்சியின் கோட்டையாகவே உள்ளது.
காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பிரஜா சோசலிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த மாநிலத்தின் முதலமைச்சர்களாக இருந்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் அதிக காலம் கேரளாவை ஆட்சி செய்துள்ளனர். இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் இருக்கிறது.
கேரளாவில் சிறிதும், பெரிதுமாக சுமார் 50 கட்சிகள் உள்ளன. இருப்பினும் மார்க்சிஸ்ட், காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 5 கட்சிகளே செல்வாக்கோடு உள்ளன.
கேரள காங்கிரஸ், கேரள காங்கிரஸ் (மாணி), மதச்சார்பற்ற ஜனதா தளம், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் ஆங்காங்கே ஓட்டுகள் உண்டு.
இரு கூட்டணிகள் ஆதிக்கம்
இரண்டு மிகப் பெரிய கூட்டணிகளை மையமாக வைத்தே கேரள அரசியல் சுழல்கிறது. ஒன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி. மற்றொன்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி.
1980-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 10 சட்டப்பேரவைத் தேர்தல்களில், 6 தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 4 தேர்தல்களில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று அரியணை ஏறியுள்ளது.
இப்போது கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயன் முதலமைச்சர். மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியில் இப்போது, அந்தக் கட்சியுடன் இந்திய கம்யூனிஸ்ட், கேரள காங்கிரஸ் (மாணி), மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ஆர்.ஜே.டி., கேரள காங்கிரஸ் (பி), இந்திய தேசிய லீக், மதச்சார்பற்ற காங்கிரஸ், ஜனஅதிபத்ய கேரள காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ், கேரளா காங்கிரஸ் (ஜேக்கப்), கேரள ஜனநாயகக் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, புரட்சிகர மார்க்ஸிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
இந்த இரண்டு கூட்டணிகள் இல்லாமல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் மூன்றாவது அணியாக களத்தில் உள்ளது.
’நீ பாதி.. நான் பாதி..’
கேரள மாநிலத்தில் மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
ஒவ்வொரு தேர்தலிலும், இரண்டு பிரதான கூட்டணிகளும் ஆளுக்குப் பாதி என்ற ரீதியில் வெற்றியை பங்கு போட்டுக்கொள்வார்கள்.
2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அதன் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கேரள காங்கிரஸ் (மாணி) ஒரு தொகுதியிலும், புரட்சிகர சோசலிஸ்ட் ஒரு தொகுதியில் வென்றன.
அதாவது, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.
அவர்கள் ஆதரவு பெற்ற சுயேச்சைகள் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றனர். அதாவது இடதுசாரி கூட்டணி 20 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக, ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
வாரி சுருட்டிய காங்கிரஸ்
ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், நிலைமை தலைகீழாக மாறியது.
இந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, 2 தொகுதிகளில் வென்றது.
இந்தக் கூட்டணியைச் சேர்ந்த கேரள காங்கிரஸ் (மாணி) ஒரு தொகுதியிலும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
அந்த வகையில், மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் இந்தக் கூட்டணி 19 தொகுதிகளைக் கைப்பற்றியது.
இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்டும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. பாஜக 13 சதவீத வாக்குகளைப் பெற்ற போதிலும், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் கூட்டணியின் பிரமாண்ட வெற்றிக்கு ஒரு காரணம் இருந்தது.
வழக்கமாக அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி, கடந்தத் தேர்தலில் இங்குள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.
வயநாட்டில் அடித்த ராகுல் அலை, ஒட்டு மொத்த மாநிலத்திலும் காங்கிரசை கரை சேர்த்தது. இடதுசாரிகளை மூழ்கடித்தது.
வெற்றி யாருக்கு?
2024 மக்களவைத் தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் (மாணி) ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
ஐக்கிய முன்னணி சார்பில் காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும், கேரள காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அதன் கூட்டணி கட்சியான, பாரத் தர்ம ஜன சேனா 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
வரும் 26-ம் தேதி கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலிலும் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார்.
பல்வேறு கருத்துக்கணிப்புகள், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணி தான் அதிக இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கின்றன.
இந்த கணிப்புகள் பலிக்குமா என்பதை தெரிந்துகொள்ள, ஜுன் மாதம் 4-ம் தேதி வரை காத்திருப்போம்.
– பி.எம்.எம்.