ஏப்ரல் 19 – உலக கல்லீரல் தினம்
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக உள்ளதா? செரிமானம் ஒழுங்காக நடைபெறுகிறதா? வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் இருக்கின்றனவா? கழிவுநீக்கம், வைட்டமின் சேமிப்பு போன்ற செயல்பாடுகளில் ஏதேனும் பிரச்சனையா?
இது போன்ற கேள்விகளுக்குப் பதிலாக, ‘உங்கள் கல்லீரல் செயல்பாடு எப்படி இருக்கிறது’ என்று கேட்பது பொருத்தமானதாக இருக்கும்.
ஏனென்றால், ’துரித உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர வேறொன்றும் அறிந்ததில்லை’ என்று சொல்லும் இளைய தலைமுறையின் உடல்நலத்தைக் காப்பதில் கல்லீரல் செயல்பாடு மிக முக்கியமானதாக உள்ளது.
எத்தனை பாதிப்புக்குள்ளானாலும், அதில் இருந்து எளிதாக மீளும் ஆற்றல் அதற்கு உண்டு. ஆனால், அந்த நிலையைத் தக்கவைக்கக் கல்லீரல் நலத்தின் மீது கவனம் வைப்பது அவசியம்.
கல்லீரல் முக்கியத்துவம்!
ஒருவரது உடல் எடையில் 2 சதவிகிதத்தை எடுத்துக் கொள்ளத்தக்கது கல்லீரல். பித்த உற்பத்தி மற்றும் வெளியேற்றத்திற்கு இது காரணமாக விளங்குகிறது.
கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகளின் வளர்சிதை மாற்றத்தைச் செயல்படுத்துகிறது. பிலிரூபின், கொலஸ்ட்ரால், ஹார்மோன்கள், மருந்துக் காரணிகளை உடலில் இருந்து வெளியேற்றுகிறது.
நம் உடலில் இரும்பு மற்றும் தாமிரச் சத்துகளைச் சேமிக்க உதவுகிறது. இனப்பெருக்கத்திற்குக் காரணமான புரத கடத்திகள், உடலுறவுக்குத் தேவையான ஹார்மோன் மாற்றங்களின் செயல்பாட்டில் முக்கியப் பங்காற்றுகிறது.
வயிறு மற்றும் குடல் பகுதியில் செரிமானத்திற்குப் பிறகு உறிஞ்சப்படும் சத்துகளில் உடலுக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுப்பதில் கல்லீரல் பங்கு மிக முக்கியமானது. அவற்றின் மீது பித்த நீரைச் சுரந்து, கொழுப்பு உள்ளிட்டவற்றை ஆற்றலாக மாற்றும் பணியைச் செய்கிறது.
பர்கர், பீட்சா, கிரில் சிக்கன் என்று அதிகக் கொழுப்புமிக்க உணவுப்பொருட்களைச் சாப்பிட்ட மயக்கத்தில் நாம் திரியாமல், சுறுசுறுப்புடன் திகழக் கல்லீரலின் இந்த செயல்பாடே காரணம்.
இன்னும் உடலில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வது, ரத்தத்தின் அடர்த்தியைச் சரியான அளவில் இருக்கச் செய்வது, வைட்டமின்களை உற்பத்தி செய்வது, தசை நடுக்கம் வராமல் காப்பது உட்பட 500க்கும் மேற்பட்ட பணிகளை மேற்கொள்கிறது.
ரத்தத்தில் இருக்கும் நச்சுப்பொருட்களை அகற்றுவதோடு மருந்து காரணிகள், மது உள்ளிட்டவற்றின் தாக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது.
உடற்பயிற்சியால் ஒருவரது உடல் வலுவடைய, கல்லீரல் செயல்பாடு மிக முக்கியம். ஆதலால், உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக விளங்குகிறது கல்லீரல் நலம். அதில் பிரச்சனைகள் ஏற்படும்போது நோய் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகின்றன.
நோய் பாதிப்புகள்!
உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைவதன் காரணமாக, பிரைமரி ஸ்லரைசிங் கோலஞ்சைடிஸ் எனும் நோய் ஏற்படுகிறது. இதனால் கல்லீரல் வீங்கிப் பாதிப்புக்குள்ளாகிறது; பித்தநாளங்கள் சேதமாகின்றன. கல்லீரல் மற்றும் பித்தநாளப் புற்றுநோய்க்கும் இது வழிவகுக்கிறது.
சுற்றுச்சூழல் காரணிகள், ஹெபடிடிஸ் வைரஸ் தாக்குதல்கள், மது போதையால் ஏற்படும் பாதிப்புகள், கொழுப்பு அதிகம் சேகரம் ஆவதால் உருவாகும் ஃபேட்டி லிவர் உட்படப் பல பாதிப்புகள் கல்லீரலில் ஏற்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுக்கச் சுமார் 20 லட்சம் பேர் கல்லீரல் சார்ந்த நோய்களால் மரணமடைகின்றனர். சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோய் அவற்றில் முக்கியம் இடம் வகிக்கின்றன.
உலகம் முழுக்கச் சுமார் 200 கோடி பேர் மது போதையில் திளைப்பதாகக் கொண்டால், அவர்களில் 7.5 முதல் 10 கோடி பேர் வரை மது போதை சார்ந்த கல்லீரல் நோய்களால் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.
உடல் பருமன் மற்றும் அதிக எடை பாதிப்புகளுக்கு ஆளானவர்கள் என்று 200 கோடி பேரும், நீரிழிவு பாதிப்புக்குள்ளான 40 கோடி பேரும் சேர்ந்து கல்லீரல் நோய் தாக்கும் சாத்தியம் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.
மரபுரீதியாகப் பாதிப்புகளுக்கு ஆளானோர், மருத்துவரின் பரிந்துரையின்றி தானாக மருந்து உட்கொள்வோரையும் இந்தக் கணக்கில் சேர்த்தால், கல்லீரல் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
பசியின்மை, குமட்டல், வாந்தி, அடிவயிற்று வலி, காய்ச்சல், மஞ்சள்காமாலை போன்றவை கல்லீரல் தாக்குதலுக்கான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.
ஆஸ்பர்டேட் ட்ரான்ஸ்மினஸ், அலனைன் ட்ரான்ஸ்மினஸ், பிலிரூபின், ஆல்கலைன் பாஸ்படேஸ், காமா – குளுடமைல்ட்ரன்ஸ்பெப்டிடாஸ் போன்று கூறுகள் கல்லீரல் எந்த அளவுக்கு உள்ளன என்று சோதனை செய்வதன் மூலமாக இந்தப் பிரச்சனைகளை அடையாளம் காண்கின்றனர் மருத்துவர்கள்.
தவிர்ப்பது எப்படி?
மதுவைத் தவிர்ப்பது, மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, உடற்பயிற்சி மற்றும் சரியான உணவுப்பழக்கத்தின் வழியே உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது, சீரான இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது, அபாயகரமான தீங்கிழைக்கும் வழக்கங்களைத் தவிர்ப்பது, நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களோடு தொடர்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதன் மூலமாக, முடிந்தவரை கல்லீரல் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.
முற்றிலுமாகச் செயலிழந்த கல்லீரலை அகற்றி, உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை மூலம் ஒருவரை உயிர் பிழைக்க வைக்கிற முயற்சிகளும் தற்போது நடந்து வருகின்றன. ஆனாலும், கல்லீரலை நோய் பாதிக்காமல் காப்பதே உடல்நலம் பேணும் சிறந்த வழியாகும்.
உலகம் முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதியன்று ‘உலக கல்லீரல் தினம்’ கொண்டாடப்படுகிறது. கல்லீரல் ஆய்வுக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பு 1966ஆம் ஆண்டு இதே தினத்தின் தொடங்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், 2010 முதல் இது கொண்டாடப்படுகிறது.
கல்லீரலின் முக்கியத்துவம், அதனைக் காக்கும் வழிகள், நோய் தாக்குதலுக்கு ஆளானால் மீள்வதற்கான சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வை ஊட்டுவதே இதன் நோக்கம்.
’விழிப்புடன் செயல்படுங்கள், கல்லீரல் பரிசோதனைகளை மேற்க்கொள்ளுங்கள், கொழுப்பு சார் கல்லீரல் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்பது 2024 ஆம் ஆண்டுக்கான ‘உலக கல்லீரல் தின’க் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது.
துரித உணவு என்ற பெயரில் உடலுக்கு ஓவ்வாத உணவுப்பழக்கத்திற்கு ஆளாவதில் இருந்தும், மது உள்ளிட்ட போதைப்பொருட்களால் உடல் ஆரோக்கியத்தைப் பாழாக்குவதில் இருந்தும் ஒருவரைத் தடுப்பதன் மூலமாகக் கல்லீரல் நலத்தைக் காக்கலாம்.
சுருக்கமாகச் சொன்னால், நாற்பதாண்டுகளுக்கு முன்னால் முந்தைய தலைமுறை கொண்டிருந்த நற்பழக்கங்களைக் கண்டறிந்து பின்பற்றினால் இது போன்ற உடலுறுப்பு பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும்.
அவற்றை நாம் உணர்ந்து செயலாற்றுவதற்கான எளிய வழியாக, இந்த ‘உலக கல்லீரல் தின’த்தை அனுசரிக்கலாம்!
– மாபா