தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!

வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு ஆரம்பம்

மக்களவைத் தேர்தலை 7 கட்டங்களாக நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. முதல் கட்டமாக தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த 15 நாட்களாக அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்துக்கு 48 மணிநேரத்துக்கு முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், நேற்று மாலை 6 மணியுடன் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.

’60 வருட பொதுவாழ்க்கை’

சென்னை பெசன்ட் நகரில் நடந்த இறுதிக்கட்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

திமுக வேட்பாளர்கள் தயாநிதி மாறன் (மத்திய சென்னை) தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை) ஆகியோரை ஆதரித்து அவர், ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர், ‘’நான் பொது வாழ்க்கைக்கு வந்து 60 வருடங்களுக்கு மேலாகிவிட்டது- எவ்வளவோ சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்துத்தான் இந்த இடத்தில் நிற்கிறேன்” என குறிப்பிட்டார்.

’’மோடியும், பாஜவும் என்ன சொல்கிறார்கள்? நீங்கள் இதை சாப்பிடக்கூடாது – அதை சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள் – நாங்கள் பாஜவிடம் சொல்வது, மக்கள் என்ன சாப்பிட்டாலும், நீங்கள் தயவு செய்து அந்தச் சோற்றில் மண்ணை அள்ளி மட்டும் போடாதீர்கள் என்பதே’’ என்று அவர் தெரிவித்தார்.

’’தன்னுடைய பத்தாண்டுகால ஆட்சி வெறும் ’டிரெய்லர்’ தான் என்று ’பஞ்ச் டயலாக்’ வேறு பேசுகிறார்- பிரதமர் மோடி அவர்களே… உங்களுடைய ’டிரெய்லரே’ இப்படி கர்ண கொடூரமாக இருக்கிறதே…

உங்கள் படம் ஓடும் என்று நினைக்கிறீர்களா? கண்டிப்பாகப் படம் ’ரிலீஸ்’ ஆகப்போவதே இல்லை – மோடிக்கு மூன்றாவது முறை வாய்ப்பு என்பது, இந்த நாட்டு மக்கள், தங்களின் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதற்கு சமம்’ என்று மு.க.ஸ்டாலின், தனது பிரச்சாரத்தில் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஈபிஎஸ் ‘ரோடு ஷோ’

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை சேலத்தில் ‘ரோடு ஷோ’ நடத்தி நிறைவு செய்தார்.

சேலம் அதிமுக வேட்பாளர் பி.விக்னேஷை ஆதரித்து, சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டாவில் தொடங்கி, சேலம் டவுன் வரை சுமார் 3 கிமீ, தொலைவுக்கு அவர் ‘ரோடு ஷோ’ சென்றார்.

பழனிசாமிக்கு, அதிமுகவினர் திரண்டு, மேளதாளங்கள் முழங்க, வழிநெடுகிலும் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வேனில் இருந்தபடி பேசிய எடப்பாடி பழனிசாமி, “மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத ஆட்சியை நடத்துகின்றன – மத்திய அரசு, மக்களை மதம், சாதியை வைத்து பிரித்துப் பார்க்கிறது – மக்களை சாதி, மதத்தை வைத்து பிரித்துப் பார்ப்பதை அதிமுக ஒருபோதும் ஏற்காது – நாடாளுமன்றத்தில், தமிழகத்தின் பிரச்சினைகளை எடுத்துக்கூற, தனித்து நிற்க வேண்டும் – எனவே, சுதந்திரமாக செயல்பட்டு தமிழக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க அதிமுக தனித்து நிற்கிறது” என்று தெரிவித்தார்.

7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பம்

‘’தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பம் ஆகிறது” என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

‘மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும் – மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்த வாக்காளர்களுக்கு ’டோக்கன்’ தரப்படும் – அவர்கள் வரிசையில் நின்று வாக்களித்து விட்டு செல்லலாம்’ என அவர் மேலும் கூறினார்.

சினிமா காட்சிகள் ரத்து

தேர்தலை முன்னிட்டு தமிழக சினிமா தியேட்டர்களில் நாளை அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

‘மக்களவைத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் நாளை (19-ம் தேதி) தியேட்டர்களில் நான்கு காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன – காலை, மதியம், மாலை, மற்றும் இரவு காட்சிகள் நடைபெறாது’ என அவர் கூறினார்.

களத்தில் 8 மத்திய அமைச்சர்கள்

தமிழகம் தவிர ராஜஸ்தானில் 12 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 6 தொகுதிகள், அசாம், மகாராஷ்டிரா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் 8 மத்திய அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.

அவர்களில், மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி முக்கியமானவர். இவர், மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். நிதின் கட்காரி, நாக்பூர் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு இரண்டு முறை ஜெயித்தவர்.

அவர், ‘ஹாட்ரிக்’ வெற்றியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.

– பி.எம்.எம்.

bjpcmstalindmkmodiNitin Gadkariசத்யபிரத சாகுதிமுகநிதின் கட்காரிபாஜகமு.க.ஸ்டாலின்மோடி
Comments (0)
Add Comment