பிரசாந்த், ரோஜாவை கொண்டாடச் செய்த ’செம்பருத்தி’!

‘தமிழ் திரையுலகில் இளைய தளபதியும் அல்டிமேட் ஸ்டாரும் கோலோச்சுவதற்கு முன்பாக, இங்கு டாப்ஸ்டார் கொடி கட்டிப் பறந்தார்’ என்று பிரசாந்தைக் கொண்டாடும் ரசிகர்கள் இன்றும் உண்டு. அவர்கள் நினைவில் நிற்கும்விதமாகப் பல படங்களைத் தந்திருக்கிறார் பிரசாந்த். அவற்றில் ஒன்றாகத் திகழ்வது ஆர்.கே.செல்வமணியின் ‘செம்பருத்தி’.

ரோஜாவை தமிழ் தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவதாக, பிரமாண்டமாகவும் காதல் படைப்பொன்றை தர முடியும் என்று உணர்த்துவதாக, இந்திப் பட பாணியில் தமிழிலும் திரைப்படங்கள் ஆக்கலாம் என்பதற்கான சான்றாக அந்தப் படம் அமைந்திருக்கும்.

இன்றோடு ’செம்பருத்தி’ வெளியாகி 32 ஆண்டுகள் ஆகின்றன.

வழமையான கதை!

ஏழ்மையான நாயகன் பணக்காரப் பெண்ணைக் காதலிப்பது என்று காதல் படங்களுக்கான ஒரு ‘டெம்ப்ளேட்’. அதே அளவுக்கு இல்லாவிட்டாலும், ஏழைப்பெண்ணை பணக்கார வீட்டுப் பையன் காதலிப்பதாகவும் சில கதைகள் ‘தேவதாஸ்’ காலம் தொட்டு வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையறாவைச் சேர்ந்தது ‘செம்பருத்தி’.

மகன் காதல் திருமணம் செய்துகொண்டு வெளிநாடு சென்ற பிறகு, தனிமையில் வாடுகிறார் ஒரு பெண்மணி. நீண்டகாலம் கழித்து, அவரைத் தேடி வருகிறார் பேரன்.

அந்த மூதாட்டிக்குப் பேரன் மீது பாசம் இருந்தாலும், மகன் மீதான ஆத்திரத்தால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்.

ஒருகட்டத்தில், பெற்றோரை இழந்து வாடும் பேரன் தன்னை நம்பி வந்திருக்கிறான் என்றறியும்போது அந்தப் பெண்மணியின் மனது மாறும். அதனைத் தொடர்ந்து, தனது மகள் வயிற்றுப் பேத்தியைப் பேரனுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று அந்த மூதாட்டி எண்ணுவார். அவரது மருமகன் அதில் ரொம்பவே ஆர்வம் காட்டுவார்.

பேரனுக்கோ பாட்டிக்கு உதவி செய்யும் நோக்கில் அந்த வீட்டில் தங்கியிருக்கும் ஏழைப் பெண்ணைப் பிடித்துப் போகும். அந்தப் பெண்ணும் அவரை விரும்புவார். ஆனால், அந்தக் காதலுக்கு ‘அந்தஸ்து’ இடையூறாக வந்து நிற்கும்.

அந்தத் தடையைக் கடந்து காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா, மூதாட்டி அதற்குச் சம்மதம் தெரிவித்தாரா என்பதாக அந்தப் படத்தின் முடிவு இருக்கும்.

நாயகனை அவரது உறவினர் பெண் காதலிப்பது இந்தக் கதையில் இன்னொரு கிளையாக விரியும். வழமையான இந்த முக்கோணக் காதல் கதையைப் பிரமாண்டமாகத் திரையில் காட்டியிருப்பார் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி.

இளங்காதலர்களாக..!

‘செம்பருத்தி’யில் பிரசாந்தையும் ரோஜாவையும் இளங்காதலர்களாகக் காட்டியிருந்தார் இயக்குனர்.

அதற்கேற்றாற்போல, அவர்களும் பதின்ம வயதைத் தாண்டியவர்களாக இருந்தனர்.

தொண்ணூறுகளில் இருந்த இளைய தலைமுறையை வசீகரிக்க, அவர்களது இருப்பு போதுமானதாக இருந்தது.

அவர்களைப் போன்று நாயகனும் நாயகியும் இருந்தது அந்த ஈர்ப்பை அதிகரித்தது.

இன்று ‘பிரேமலு’ போன்ற படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘ஹிட்’ அடிக்கவும், இது போன்றதொரு எதிர்பார்ப்பே காரணம்.

ரோஜாவின் தோற்றம் எப்படி ஒரு எளிமையான பின்னணியைச் சேர்ந்த பெண்ணாகத் திரையில் பாந்தமாக வெளிப்பட்டதோ, அதே அளவுக்குப் பிரசாந்தின் அத்தை மகளாக வந்த வாசவி கான் ‘கவர்ச்சி’யாகத் தோன்றியிருப்பார்.

ஆனால், அவருக்கான ஒப்பனை ‘இரண்டாம் நாயகி’ என்று சொல்லத்தக்க வகையிலேயே இருக்கும். ‘பட்டுப்பூவே’ பாடலில் பிரசாந்த் உடன் அவரது ‘கெமிஸ்ட்ரி’ நன்றாக அமைந்தும், வேறு படங்களில் அவர் நடிக்கவில்லை.

‘பூவே பூச்சூடவா’வில் நடித்த பத்மினி போல, இந்தப் படத்தில் ‘ரிச்’சான பாட்டியாக பானுமதி நடித்திருந்தார். நாசர், ராதாரவி, மன்சூர் அலிகான், வைஷ்ணவி நடித்த வேடங்களும் ரசிகர்களைக் கவரும் விதத்தில் இருந்தன.

ரவி யாதவ்வின் ஒளிப்பதிவில் பாடல்கள் அற்புதமாகக் காட்சியாக்கம் பெற்றிருந்தன. ஆனால், காட்சிகளில் அது போன்றதொரு பிரமாண்டம் தெரியவில்லை.

பாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் காட்டும்விதமாக அமைந்த வி.உதயசங்கரின் படத்தொகுப்பு அதற்கான காரணமாக இருக்கலாம். அது படக்குழுவினருக்குத் தான் தெரியும்.

‘செம்பருத்தி’யின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகத் திகழ்வது இளையராஜாவின் இசை.

இந்தப் படத்தில் பானுமதி திரையில் பாடுவதாக அமைந்த ‘செம்பருத்திப் பூவு’, மன்சூர் அலிகான் பாடுவதாக அமைந்த ‘அட வஞ்சிரம் வவ்வாலு’, ஒரு முதியவர் பாடுவதாக வரும் ‘கடலிலே தனிமையில் போனாலும்’, நாயகன் பாடுவதாக இருந்த ‘நடந்தால் இரண்டடி’., டைட்டிலில் இடம்பெற்ற ‘கடலிலே எழும்புற அலைகளைக் கேளடி’ பாடல்களோடு, மாண்டேஜ் பாடலாக அமைந்த ‘புதுநாள் இரவு’ பாடலும் ரசிகர்களைக் கவரும் வகையில் இருந்தன.

இவை தவிர்த்து ‘பட்டுப்பூவே’, ‘ஜலக்கு ஜலக்கு’, ’நிலா காயும் நேரம்’ டூயட் பாடல்கள் தந்த எழுச்சி நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்றன. இன்றும் 80’ஸ்கிட்ஸ்களில் மனதுக்குள் தாங்கள் இழந்த இளமையைப் பெறுவதற்கான வழியாக, இது போன்ற சில பாடல்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

மீண்டும் பிரசாந்த்!

‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் பள்ளிப்பருவத்து இளைஞனாகத் தோன்றினார் பிரசாந்த். கல்லூரி மாணவர், மாணவியர் மத்தியில் அவருக்குப் பெரிய பிரபல்யத்தை உருவாக்கிய படம் ‘செம்பருத்தி’.

அதன்பிறகு அவர் நடித்தவற்றில் பல படங்கள், இதே சாயலில் காதல் படங்களாக அமைந்தன. அதனாலேயே, பெரியளவில் கவனிக்கப்படாமல் போயின.

‘ஆணழகன்’, ‘கல்லூரி வாசல்’, ’மன்னவா’ போன்ற படங்கள் வித்தியாசமான பாத்திரங்களை, கதைக்களங்களை அவருக்குத் தந்தன. ஆனாலும், ஷங்கரின் ‘ஜீன்ஸ்’ தான் அவரை மீண்டும் வெற்றிப்படிகளில் ஏற்றியது.

1998-ல் அந்தப் படத்திற்குப் பிறகு வெளியான ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘காதல் கவிதை’ இரண்டும் கவனிக்கத்தக்க வெற்றியைப் பெற்றன. ‘பிரியாத வரம் வேண்டும்’, ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘ஜோடி’, ‘பூமகள் ஊர்வலம்’ உள்ளிட்ட படங்கள் நல்ல படங்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டன.

ஹரியின் ‘தமிழ்’, சுசி.கணேசனின் ‘விரும்புகிறேன்’ வரை அவர் தேர்வு செய்த கதைகளும் கவனிப்பைப் பெற்றன. 2000இல் விஜய், அஜித் இருவரது படங்கள் கொண்டிருந்த ‘கமர்ஷியல்’ அம்சங்கள் அவரது படங்களில் குறைவாக இருந்தன.

அதே நேரத்தில், முற்றிலும் வித்தியாசமான படங்களில் அவர் இடம்பெற விரும்பவில்லை. ‘கனா கண்டேன்’ போன்ற பல வாய்ப்புகளை அவர் ஏற்கத் தயாராக இல்லை.

அதனால் ஏற்பட்ட இடைவெளி, பிரசாந்தை ரசிகர்களிடம் இருந்து தனியாகப் பிரித்தது.

தற்போது விஜய் – வெங்கட்பிரபு கூட்டணியின் ‘கோட்’ படத்தில் பிரசாந்த் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார். அவர் நாயகனாக நடித்த ‘அந்தகன்’ திரைப்படம் சரியானதொரு சூழலில் வெளியாகக் காத்திருக்கிறது.

இது போன்ற நிலையில், ‘செம்பருத்தி’ வெளியாகி 32 ஆண்டுகள் ஆகிறது என்பதை நினைவுகூர்வது முக்கியத்துவம் பெறுகிறது.

யதார்த்தத்திற்குப் பொருந்தாத கதை என்றபோதும், தொண்ணூறுகளில் வெளியான இந்திப் படங்களுக்குச் சவால் விடும் வகையில் இதன் ஆக்கம் அமைந்திருந்தது.

‘கேப்டன் பிரபாகரன்’, ‘புலன் விசாரணை’ படங்களுக்குப் பிறகு, தனது தனித்துவத்தை நிரூபிக்கப் புதுமுகங்களைக் கொண்டு ஒரு காதல் படத்தைத் தந்துவிட வேண்டுமென்று விரும்பினார் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி. அவரது வேட்கைக்குத் தீனி போட்ட படமாக இருந்தது ‘செம்பருத்தி’.

ரசிகர்களையும் ஈர்த்தது. இன்றும் ‘செம்பருத்தி’ படம் பார்த்த நினைவுகளை மனதுக்குள் மீட்டிப் பார்க்கப் பலர் உள்ளனர் என்பதே அப்படம் எத்தகைய வெற்றியைப் பெற்றது என்பதற்கான சான்று!

– உதய் பாடகலிங்கம்

#செம்பருத்தி #இயக்குனர்_ஆர்_கே_செல்வமணி #பிரசாந்த் #Actor_prashanth #Chembaruthi_Movie #Roja #Mansoor_Ali_Khan #Radha_Ravi #R_K_Selvamani #ராதாரவி #மன்சூர்_அலிகான்

Actor prashanthChembaruthi MovieMansoor Ali KhanR. K. SelvamaniRadha RaviRojaஇயக்குனர் ஆர்.கே.செல்வமணிசெம்பருத்திபிரசாந்த்மன்சூர் அலிகான்ராதாரவி
Comments (0)
Add Comment