எண்பதுகளில் மலையாளத் திரையுலகின் மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் சீனிவாசன். நடிகராக மட்டுமல்லாமல் திரைக்கதை ஆசிரியராகவும் இயக்குனராகவும் மிளிர்ந்தவர்.
தொண்ணூறுகளில் சென்னையில் இருந்து கொச்சிக்கும் திருவனந்தபுரத்திற்கும் பல மலையாளத் திரைக்கலைஞர்கள் இடம்பெயர்ந்தபோதும், தனது குடும்பத்தினருடன் அவர் சென்னையிலேயே தங்கிவிட்டார்.
அவரது மகன் வினீத் சீனிவாசன் சென்னையிலுள்ள பொறியியல் கல்லூரியொன்றில் படித்தவர். அதன் சாயல் தெரியும் வகையில், வினீத் இயக்கிய ‘ஹ்ருதயம்’ பெருவெற்றியைப் பெற்றது.
தற்போது அவர் இயக்கியுள்ள ‘வருஷங்களுக்கு சேஷம்’, சினிமா கனவுகளோடு கேரளாவில் இருந்து சென்னைக்கு வரும் இரண்டு நண்பர்களைக் காட்டுகிறது. இதன் ட்ரெய்லர் நல்லதொரு எதிர்பார்ப்பை உண்டுபண்ணியது.
‘வருஷங்களுக்கு சேஷம்’ திரைப்படத்தை முழுதாகக் கண்டபிறகு, அந்த எதிர்பார்ப்பு என்னவாகிறது?
இரண்டு நண்பர்களின் கதை!
படிப்பில் ஆர்வம் இல்லாமல் நாடகங்களே கதி என்று இருக்கிறார் வேணு (தியான் சீனிவாசன்). ஷேக்ஸ்பியர் சேகரன் என்ற நாடக ஆசிரியரிடம் உதவியாளராகச் சேர்கிறார்.
நாடகத்திற்கு இசையமைப்பதற்காக, முரளி விஸ்வாம்பரன் (பிரனவ் மோகன்லால்) எனும் நபரைச் சந்திக்கச் செல்கிறார்.
மது போதையில் திளைக்கும் முரளி, மின்னல் வேகத்தில் காரை ஓட்டி வந்து, அந்த நாடகத்திற்கு இசையமைக்கிறார். அந்த நொடி வரை, வேணுவுக்கு முரளி மீது நல்ல மதிப்பீடு இல்லை. ஆனால், அவரது இசையைக் கேட்டதும் வேணு மெய் மறக்கிறார்.
இரண்டாண்டுகள் கழித்து, மீண்டும் முரளியைத் தனது கல்லூரியில் சந்திக்கிறார் வேணு.
அவரைப் பார்க்க வரும் சாக்கில், ஆனி (கல்யாணி பிரியதர்ஷன்) எனும் பெண்ணோடு பழகத் தொடங்குகிறார் முரளி. மெதுவாக அது காதல் எனும் நிலையை அடைகிறது.
ஆனால், ஆனி அவரது காதலை ஏற்க மறுக்கிறார். தான் வாழும் சூழல் அதற்கு அனுமதிக்காது என்று முரளியிடம் சொல்கிறார். அது அவரை வேதனைப்படுத்துகிறது.
அதன்பிறகு, முரளியைப் பல இடங்களில் தேடுகிறார் வேணு. ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.
சில மாதங்கள் கழித்து, “சினிமாவில் சாதிக்க நாம் சென்னைக்குச் செல்லலாமா” என்று முரளி எழுதிய கடிதம் வேணுவுக்குக் கிடைக்கிறது. அடுத்த நொடியே, கல்லூரிப் படிப்பை அப்படியே விட்டுவிட்டு இருவரும் ரயில் ஏறுகின்றனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் சுவாமி லாட்ஜ் எனுமிடத்தில் இருவரும் அறை எடுத்து தங்குகின்றனர். அங்கு நடிகர், இயக்குனர், கதாசிரியர் ஆகும் கனவோடு பலரும் தங்கியிருக்கின்றனர்.
ஒரு படப்பிடிப்புத் தளத்தில் கலை இயக்குனர் குழுவில் வேலைக்குச் சேர்கிறார் வேணு. அப்போது, நடிகை ராதிகாவின் அறிமுகம் வாய்க்கிறது.
இயக்குனர் ஆகும் கனவோடு பல கதைகளை எழுதுகிறார் வேணு. அதே நேரத்தில், வயலின் வாசிப்பாளராக ஒரு இசையமைப்பாளரிடம் சேர்கிறார் முரளி.
ஒருநாள் கேசவதாஸ் (அஜு வர்கீஸ்) எனும் தயாரிப்பாளரிடம் வேணுவை அறிமுகப்படுத்துகிறார் முரளி. வேணு சொல்லும் கதை அவருக்குப் பிடித்துப் போகிறது. முதல் படத்திற்கான வேலைகள் ஆரம்பமாகின்றன.
நண்பனின் படத்தில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் பெயர் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார் முரளி. ஆனால், தனது படத்தில் அவரது இசையே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் வேணு.
இரண்டையும் பூர்த்தி செய்யும்விதமாக, தான் இசையமைத்த ட்யூன்களை பிரபல இசையமைப்பாளர் இந்திர தனுஷிடம் தருகிறார் முரளி. அதனால், அவரது பெயரில் வேணு இசையமைத்த பாடல்கள் வெளியாகின்றன.
அந்தப் படம் முடிவடைவதற்கு முன்பே, ராதிகா (நீதா பிள்ளை) எனும் நடிகையைத் திருமணம் செய்துகொள்கிறார் வேணு. முரளியோ மது போதையில் தன்னை மறக்கிறார். அது, அவரை விட்டுத் திரையுலகம் விலகக் காரணமாகிறது.
அதனைச் சகித்துக் கொள்ளும் முரளியால், நண்பன் வேணுவும் தன்னைக் குடிகாரனாக நினைக்கிறார் என்பதை மட்டும் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
“அந்த படத்திற்கு இசையமைத்தது நான் தான்” என்று வேணுவிடம் மட்டும் உண்மை சொல்லுமாறு இந்திரதனுஷிடம் கெஞ்சுகிறார் முரளி. அவரோ மறுத்துவிடுகிறார்.
உண்மையைச் சொல்வதற்காக, வேணுவைத் தேடிச் செல்கிறார். அவரோ, முரளியை அவமானப்படுத்தி அனுப்புகிறார்.
அதன்பிறகு, மீண்டும் காணாமல் போகிறார் முரளி.
கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் முரளி – வேணு சந்திப்பு நிகழ்கிறது. அந்த நேரத்தில், இருவரும் ஒரு படத்தை இயக்கவும், இசையமைக்கவும் வாய்ப்பினைப் பெறுகின்றனர். ஆனால், அதன் உருவாக்கத்திலும் பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன.
அவற்றைத் தாண்டி, அவர்களது காம்பினேஷனில் முதல் படம் வெளியானதா என்று சொல்கிறது ‘வருஷங்களுக்கு சேஷம்’ படத்தின் மீதி.
காணாமல் போன முரளியைத் தேடி இயக்குனர் வேணு பயணிப்பதில் இருந்து, இதன் திரைக்கதை தொடங்குகிறது. அதனால், இரண்டு நண்பர்களைப் பற்றிய கதை இது என்பது நமக்குத் தொடக்கத்திலேயே தெரிந்துவிடுகிறது.
ஏற்ற இறக்கங்களுடன் திரைக்கதை!
ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் வெளியாகும் சிறுகதை, நாவலுக்கான எழுத்து நடை ஒரு சுயசரிதையில் கலந்தால் எப்படியிருக்குமோ, அவ்வாறு இருக்கிறது ‘வருஷங்களுக்கு சேஷம்’ திரைக்கதை.
முரளியைத் தேடும் வேணுவின் பயணத்தைப் போன்றே, இத்திரைக்கதையிலும் நிறைய ஏற்ற இறக்கங்கள் உள்ளன. சில லாஜிக் குறைபாடுகள் இருக்கின்றன.
அவற்றைத் தாண்டி, ஒரு ‘பீல்குட்’ படத்திற்கான அனுபவத்தை ரசிகர்கள் பெற வேண்டுமென்று முனைந்திருக்கிறார் இயக்குனர் வினீத் சீனிவாசன்.
கூடவே, வெங்கட்பிரபு போன்ற இயக்குனர்கள் சினிமாவில் இருக்கும் க்ளிஷேக்களை கிண்டலடிப்பது போன்ற பாணியையும் கைக்கொண்டிருக்கிறார்.
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தமிழ் சினிமாவில் மிளிர்ந்த பல நட்சத்திரங்களின் ஆரம்பகாலத்தை லேசாகத் தொட்டுச் செல்கிறது திரைக்கதை. ஆனால், அது எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்.
அவ்வளவு ஏன், சமகாலத்தில் மலையாளத் திரையுலகில் இருந்துவரும் சில ஜாம்பவான்களையும் கூட சீண்டிப் பார்க்கின்றன அவரது எழுத்தாக்கம். அதனை ஒரு படைப்பாளிக்கு உரிய சுதந்திரமாகவே சக கலைஞர்கள் கருதினால் நமக்கு மகிழ்ச்சிதான்.
முதல் பாதி முழுக்க சீரியசாகவும், இரண்டாம் பாதி முழுக்க நகைச்சுவையாகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் வினீத். அதற்குத் தக்க பலன் திரையில் கிடைத்திருக்கிறது.
முரளியாக வரும் பிரனவ், வேணுவாக வரும் தியானைச் சுற்றியே முன்பாதியை அமைத்திருக்கிறார் இயக்குனர் வினீத்.
பின்பாதியில் இருவரது நட்புக்கு முன்னுரிமை தந்தாலும், நம் மனதைக் கவர்வதென்னவோ நிவின் பாலி தான். இதில் ‘நிதின் மோலி’ எனும் பாத்திரத்தில் அவர் தோன்றியிருக்கிறார்.
மலையாளத் திரையுலகுக்கு உள்ளேயும் வெளியேயும் நிவின் குறித்து கூறப்படும் விமர்சனங்களைக் காட்டும் வகையிலும், அவற்றுக்கு எதிரான கருத்துகளைச் சொல்லும் வகையிலும் அக்காட்சிகள் அமைந்திருக்கின்றன.
‘பிரியாணி கொஞ்சம் அதிகமா சாப்பிட்டு குண்டாகிட்டா பாடி ஷேமிங் பண்ணுவீங்களா நாய்களா’ என்று நிவின் பாலி பேசும் வசனத்திற்கு தியேட்டரே அதிர்கிறது.
இரண்டு மது புட்டிகளைச் சுவைத்தவாறே அறிமுகமாகும் பிரனவ், நமக்கு மோகன்லாலை நினைவூட்டுகிறார்.
சிவாஜி மகன் என்ற அடையாளம் பிரபுவுக்கு எத்தகைய அழுத்தத்தைக் கொடுத்ததோ, கிட்டத்தட்ட அது போன்றதொரு நிலைமையே பிரனவ்வுக்கும் வாய்த்துள்ளது.
தந்தை, சகோதரர் போன்று நடிகர், இயக்குனராகப் பணியாற்றியபோதும், தியான் சீனிவாசனுக்குப் பெரியளவில் ‘பிரேக்’ தந்திருக்கும் படம் என்று இதனைக் குறிப்பிடலாம்.
அந்த வகையில், வினீத் அவருக்குத் தந்திருக்கும் பரிசு இது.
கல்யாணி இதில் நான்கைந்து காட்சிகளில் இடம்பெற்றிருந்தால் அதிகம். ஆனால், அவரது இருப்பு நம்மைப் பெரியளவில் இம்சிக்கவில்லை.
தியான் ஜோடியாக வரும் நீதா பிள்ளையும் கூட, அந்த அளவுக்கே திரையில் தென்படுகிறார். அஜு வர்கீஸுக்கு இதில் தந்தை, மகன் என்று இரு வேடங்கள். இரண்டிலும் அவர் காட்டியிருக்கும் ‘வெரைட்டி’ நமக்கு போரடிக்கவில்லை.
ஒய்.ஜி.மகேந்திரன் இதில் சுவாமி லாட்ஜ் உரிமையாளராக வந்து, பழைய ஜோக்குகளை அள்ளிவிடுகிறார்.
ஆசிஃப் அலி, நீரஜ் மாதவ் போன்ற நாயகர்கள் ‘கௌரவமாக’ இரண்டொரு காட்சிகளில் தலைகாட்டியிருக்கின்றனர் என்றால், அது சாதாரண விஷயம் என்பது போன்று பசில் ஜோசப் இதில் வெறுமனே ஒரு பாத்திரமாக வந்து போயிருக்கிறார்.
தீபக் பரம்போல் போன்று ஒரு காட்சிகளில் சிலர் தோன்றியிருக்கின்றனர். அவர்கள் வேறு மலையாளப் படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றவர்கள் என்றறியும்போது மனம் படபடக்கிறது.
தமிழ் திரையுலகிலும் இது மாதிரியான மனமாற்றங்கள் நிகழாதா என்று ஏங்க வைக்கிறது.
இந்த படத்தில் இசையமைப்பாளர் இந்திர தனுஷ் ஆக வரும் காளிஸ் ராமானந்துக்கு இரண்டு, மூன்று காட்சிகளே கிடைத்திருக்கின்றன.
ஆனால், மனிதர் கிடைத்த இடைவெளியில் சிக்சர் அடித்திருக்கிறார். அவரது பாத்திரம் கற்பனையா, உண்மையா எனும் விவாதம் சர்ச்சையைக் கிளப்பலாம்.
அதே போல காமராஜ் என்ற நட்சத்திர நாயகராக இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் தோன்றியிருக்கிறார். திரையில் அவரது அறிமுகப் படம் இது.
எண்பதுகளில் முன்னிலை வகித்த தமிழ் நடிகராகத் திரைக்கதையில் ஷான் காட்டப்பட்டிருப்பதும் கூடச் சர்ச்சையை ஏற்படுத்தும் ஒரு விஷயமே..!
காட்சிகளின் தன்மையைக் கருத்தில் கொண்டதோடு, கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில் சிறப்பான காட்சியாக்கத்தை வெளிப்படுத்தும் நோக்கோடு அமைந்துள்ளது விஸ்வஜித்தின் ஒளிப்பதிவு.
கோடம்பாக்கத்து படப்பிடிப்புகளைக் காட்டும் காட்சிகள் செயற்கையாகத் தெரிந்தாலும், அவற்றில் அவரது கேமிரா நகர்வுகள் அற்புதமாக வெளிப்பட்டுள்ளன.
நிமிஷ் தனூரின் தயாரிப்பு வடிவமைப்பு, அதற்கு ஏற்ற சூழலை உருவாக்கியிருக்கிறது.
சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பிருந்த இரண்டு படைப்பாளிகளின் வாழ்வைச் சொல்கிறது ‘வருஷங்களுக்கு சேஷம்’.
அதற்கேற்ற சூழலைத் திரையில் காட்டியிருப்பதோடு, அப்போதிருந்த இசை, கேமிரா நகர்வு, படத்தொகுப்பு உத்திகளைப் பயன்படுத்தி முதல் பாதியை அமைத்த வகையில் நம்மை வசீகரிக்கிறார் இயக்குனர் வினீத் சீனிவாசன்.
பின்பாதியைத் தற்போதைய திரைப்படங்கள், வாழ்க்கைச் சூழலோடு பொருந்துமாறு காட்டியிருக்கிறார்.
மிக முக்கியமாக, இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத்திடம் இருந்து திரைக்கதைக்குத் தேவையான உழைப்பைப் பெற்றிருப்பது அவரைச் சிலாகிப்பதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது.
‘கிளாசிக்’ ஆல்பம்!
இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத், இப்படத்தில் காட்சிகளோடு ஒன்றும் வகையிலான மெல்லிசையைப் பின்னணியாகத் தந்திருக்கிறார். பாடல்களைப் பொறுத்தவரை, இது இந்த ஆண்டின் ‘கிளாசிக்’ ஆல்பமாக அமைந்துள்ளது.
‘மது பகரு தாரகை’ துள்ளலைத் தருகிறது என்றால் ’ஜீவித காதைகளே’, ’சங்கமம்’ ’ஞானாலுன்ன’ பாடல்கள் மெலடி மெட்டுகளாக வசீகரிக்கின்றன.
‘ஞாபகம் வருகுதே’ பாடல் முதல்முறை கேட்கும்போது மனதில் ஒட்டாவிட்டாலும், திரைக்கதையில் தொடர்ச்சியாக வந்துபோகும்போது பிடித்தமானதாக மாறுகிறது. அந்த பாடலை எழுதிப் பாடியிருப்பவர் அம்ரித்தின் தாய் பாம்பே ஜெயஸ்ரீ.
2கே கிட்ஸ்களை கவரும் வகையில் ‘பியாரா மேரா’ பாடல் இதிலுள்ளது.
தியான் ஏற்றிருக்கும் பாத்திரம் தமிழ் இயக்குனரா, மலையாள இயக்குனரா என்ற கேள்விக்குத் திரைக்கதையில் வினீத் தெளிவுபடுத்தவில்லை. இதில் சில நடிகர், நடிகைகளின் இருப்பு சரியாக அமையவில்லை.
‘படைப்பாளி என்றால் போதைக்கு அடிமையாகத்தான் வேண்டுமா’ என்று பிரனவ் பாத்திரத்தை முன்வைத்து நம்மால் கேள்வி கேட்க முடியும்.
முன்பாதியும் பின்பாதியும் ஒரேமாதிரி ‘ட்ரீட்மெண்டை’ கைக்கொள்ளவில்லை என்று இத்திரைக்கதையைப் புறக்கணிக்க முடியும்.
அனைத்தையும் தாண்டி தியான், பிரனவ் பாத்திரங்களின் நட்பை முன்னிலைப்படுத்தி தொடங்கும் திரைக்கதை, அதனை முதன்மைப்படுத்தியே முடிவடைகிறது.
அதனை ரசிப்பதில், முடிந்தவரை நாம் அயர்ச்சியை எதிர்கொள்ளக் கூடாது என்பதில் கவனம் காட்டியிருக்கிறார் இயக்குனர் வினீத் சீனிவாசன்.
அதையும் மீறி, படத்தின் நீளமும் முன்பாதிக் காட்சிகளும் நம்மைச் சோர்வடையச் செய்யலாம். ஆனாலும், ஒரு ‘கிளாசிக்’ படம் பார்த்த திருப்தியை ‘வருஷங்களுக்கு சேஷம்’ தருவதை மறுக்க முடியாது.
– உதய் பாடகலிங்கம்