மலையகத் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும்!

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்களின் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும்.

இந்திய அரசு ஒப்பந்தம் போட்டு குடியுரிமை கொடுத்து முழுமையாக மறுவாழ்வு கொடுப்போம் என உறுதியளித்து கூட்டி வரப்பட்ட இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இலங்கையிலுள்ள மலையகத் தமிழர்களுக்கு முறையாக மறுவாழ்வு கிடைக்காததால் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா தெலுங்கானா மற்றும் அந்தமான் தீவுகளில் சுமார் 25 லட்சம் தமிழர்கள் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக போராடி வருகின்றனர்.

இவர்களின் பிரச்சினைகளை உரிமைகளை தீர்க்க இந்திய நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் தேவை. இதை தேர்தல். ஆணையத்திடமும் அரசியல் கட்சிகளிடமும் வலியுறுத்துகிறோம்.

இந்த தேர்தலில் இம்மக்களின் பிரச்சனைகளை முழுமையாக பேசப்பட வேண்டும்.

தாயகம் திரும்பிய தமிழர்கள்

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தியாகவும், மண்ணின் மைந்தர்களாகவும், தாயகம் திரும்பிய தமிழர்கள் உள்ளனர். இவர்கள் தோட்ட தொழிலாளர்களாகவும், ஏழை விவசாயிகளாகவும் உள்ளனர்.

இம்மக்களுடைய உழைப்பே இந்த மண்ணை செல்வம் கொழிக்கும் பூமியாக மாற்றியிருக்கிறது.

இந்த மக்களின் அடிப்படை வசதிகளும், உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இவர்களில் பெரும்பாலான மக்கள் நிலமற்ற ஏழைத் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் பிரச்சனைகளைத் தீர்க்க கீழ்க்கண்ட கோரிக்கையை முன்வைக்கிறோம்.

1) நிலமற்ற தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு தலா 3 ஏக்கர் நிலம் கொடுக்கப்படுவதோடு இவற்றில் வேளாண்மை செய்ய கடன் வசதியும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

மலைப்பகுதி மாவட்டத்தில் பட்டா கொடுக்க தடையாக இருக்கும், தடையாணை 1168 ரத்து செய்யப்பட வேண்டும். இங்குள்ள நிலமற்றோருக்கும் நிலம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

2) தாயகம் திரும்பியவர்களுக்கு ஏற்கனவே இருந்த இட ஒதுக்கீடு மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். ஶ்ரீரிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தப்படி உறுதியளிக்கப்பட்ட அனைத்து மறுவாழ்வு உதவிகளும் இம்மக்களுக்கு முறையாக கிடைக்கவில்லை.

இது பற்றி மத்திய மாநில அரசுகள் உயர் மட்ட குழுவை அமைத்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். மறுவாழ்வு உதவி கிடைக்காதவர்களுக்கு மீண்டும் இவ்வுதவிகள் முறையாக செய்யப்பட்ட வேண்டும்.

டேன்டீ மக்களுக்கு நிரந்தர தீர்வு

3) மலையக தோட்ட தொழிலாளர்களின் ஊதிரமும் வியர்வையும் சிந்தி உருவாக்கியதே டேன்டீ. பல ஆயிரம் கோடிகளை அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஈட்டி கொடுத்துள்ளனர். நிர்வாக சீர்கேட்டால் டேன்டீ நஷ்டம் அடைந்துள்ளது.

இதை மறைத்து தவறான தகவல்களை அரசுக்கு கொடுத்து கடந்த ஆட்சியில் 265 ஹெக்டர் தேயிலை தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு காடாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் இதேபோல் தற்போதைய அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு ஆணை எண்.173 மூலம் 2152 ஹெக்டர் அழகான (மட்டமான பகுதிகளையும்) தேயிலைத் தோட்டங்களை காடாக மாற்றி முயற்சி எடுத்துள்ளது.

இதில் வால்பாறை டேன்டீ மற்றும் நடுவட்டம் தோட்டங்கள் முழுவதும் மூடப்படுவதாக கூறி பெறும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு.

இந்த உத்தரவு முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும். அரசாணை-173 -ல் குறிப்பிடப்படுவது உண்மைக்கும் அறிவியலுக்கும் புறம்பானது. விளைச்சல் இல்லாத செங்குத்தான பகுதி வன விலங்குகள் மோதல் நிறைந்த பகுதி என்று சொல்வது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

வன விலங்குகள் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காடுகளுக்குள் உணவு இல்லாததால் அது அனைத்து பகுதிக்கும் வருகின்றது.

டேன்டியில் களை எடுப்பது , உரம் போடுவது, மருந்து தெளிப்பது,கவாத்து வெட்டுவது என எந்த பணியும் செய்து இல்லை.

இந்த நிலையில் விளைச்சல் எப்படி வரும் ? டேன்டி தேயிலை செடிகளுக்கு அடியில் புதர் செடிக்குள் கொடிய விஷப்பாம்பு, பூரான், தேள், அட்டை போன்றவற்றிற்கு பலியாகி உயிரை பணையம் வைத்து வேலை செய்கின்றனர் தொழிலாளர்கள்.

1. நிரந்தர தீர்வாக தாயகம் திரும்பிய இந்திய வம்சாவழி தமிழர்கள் உழைத்து உருவாக்கிய டேன்டி நிலத்தை டேன்டியில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் தலா மூன்று ஏக்கர் வீதம் பிரித்து கொடுத்து வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதம் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

இதனால், பரம்பரையாக தோட்ட தொழிலாளியாகவே கஷ்டப்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் நில உரிமை பெற்று தலை நிமிர்ந்து நிம்மதியாக வாழ்வார்கள். நிலத்தை பிரித்து கொடுப்பதற்கு ஏற்றவாறு உரிய சட்ட திருத்தங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் களப்பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

– இப்படிக்கு
V.ராமகிருஷ்ணன், (மாவட்டத் தலைவர்)
M.S.செல்வராஜ் (மாநில ஒருங்கிணைப்பாளர்)

malaiyaga tamilargalதொழிலாளர்நில உரிமைமலையகத் தமிழர்கள்
Comments (0)
Add Comment