சில நடிகர், நடிகைகளைப் பார்த்தால் ‘ஒரேமாதிரியாக நடிக்கிறார்களே’ என்று தோன்றும். அதேநேரத்தில், அவர்களில் சிலர் வழக்கமான பாணியில் இருந்து விலகி வேறுவிதமான பாத்திரங்களை ஏற்று நடிக்கையில் ‘பழைய மாதிரியே இருந்திருக்கலாமோ’ என்ற எண்ணமும் ஏற்பட்டதுண்டு.
அந்த அபாயத்தை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு, தனியாக ‘ரூட்’ பிடித்து முன்னேறுபவர்கள் மிகச் சிலரே. அவர்களில் நானும் ஒருவன் என்று அழுத்தமாகச் சொல்லும்விதமாக ‘ரோமியோ’வில் முழுக்க முழுக்க ஒரு ரொமான்ஸ் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
ஆக்ஷன் கதைகளில் எளிதாகப் பொருந்திப்போகும் அவருக்கு, இந்த ’ரோமியோ’ அவதாரம் எந்த அளவுக்குக் கைகொடுத்திருக்கிறது?
திருமண வாழ்வில் விரிசல்..!
காதலர்களுக்குள் எதிர்பார்ப்புகள் சார்ந்த ஊடல், லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில் உள்ள பிரச்சனைகள், திருமணத்திற்குப் பிறகான காதல் என்று சமீபகாலமாகப் பல விதங்களில் காதலைப் பரிசளித்து வருகிறது தமிழ் சினிமா.
அந்த வரிசையில், கணவரைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் பிரிய எண்ணுகிற ஒரு பெண்ணை மையப்படுத்தி அமைந்துள்ளது ‘ரோமியோ’ கதை.
மலேசியாவில் ஒரு ஹோட்டலில் பணியாற்றி வருகிறார் அரவிந்த் (விஜய் ஆண்டனி).
இளம் பருவத்தில் வீட்டுக்கடனை அடைப்பதற்காக வேலைக்குச் சென்றவர், 35 வயதில் ஊர் திரும்புகிறார்.
வந்த இடத்தில், பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்கித் திருமணத்திற்குச் சம்மதிக்கிறார். ஆனால், அது காதல் திருமணமாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்.
ஒருநாள், உறவினர் (தலைவாசல் விஜய்) ஒருவர் வீட்டில் நிகழும் துக்க நிகழ்வில் அரவிந்தும் அவரது பெற்றோரும் கலந்துகொள்கின்றனர். அங்கு, அவரது மகள் லீலாவைப் (மிருணாளினி ரவி) பார்க்கின்றனர்.
லீலாவைப் பார்த்த முதல் நொடியில் காதலில் விழுகிறார் அரவிந்த். அவரது பெற்றோரும் அதனைக் கவனிக்கின்றனர்.
அந்த நேரத்தில், லீலாவின் தாய்க்கு உடல்நலம் சரியில்லாமல் போகிறது. அவரை மருத்துவமனையில் சேர்க்கின்றனர் உறவினர்கள். அவரது இதய சிகிச்சைக்காக உடனடியாக 4 லட்ச ரூபாய் கட்ட வேண்டுமென்ற நிலை ஏற்பட, அரவிந்தின் பெற்றோர் அக்குடும்பத்திற்கு உதவுகின்றனர். சில நாட்கள் கழித்து, லீலாவைத் தங்களுக்குப் பிடித்திருப்பதாக அவரது தந்தையிடம் தெரிவிக்கின்றனர்.
அதனைக் கேட்கும் அவர், உடனடியாகத் திருமணத்தை நடத்திவிடலாம் என்கிறார். அரவிந்தின் குடும்பத்தின் மீதான நன்மதிப்பு மட்டுமல்லாமல், அதன் பின்னே வேறொரு காரணமும் உண்டு.
லீலாவுக்குத் தான் ஒரு புகழ்பெற்ற நடிகையாகத் திகழ வேண்டுமென்று விருப்பம். அதனை ஏற்க மறுக்கிறார் அவரது தந்தை. மீண்டும் மகளுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வரக்கூடாது என்று அவர் விரும்புகிறார்.
அரவிந்த் உடனான திருமணத்தில் விருப்பமில்லாத லீலா, நண்பர்களின் பேச்சைக் கேட்டு அவரைத் திருமணம் செய்து கொள்கிறார். பெற்றோரின் தொந்தரவு இல்லாமல் தனது நாயகி கனவை அடைய அதுவே வழி என்று எண்ணுகிறார்.
சென்னை சென்று வாழலாம் என்று சொன்ன லீலா, அங்கு தனது சுயரூபத்தை வெளிப்படுத்துகிறார். தனக்கு விவாகரத்து வேண்டும் என்கிறார். அதனைக் கேட்டு அதிர்கிறார் அரவிந்த். லீலாவுக்குத் தன் மீது காதல் இல்லை என்பதை உணர்ந்தபிறகும் கூட, அவரை ஒருதலையாகக் காதலிக்கத் தயாராகிறார்.
நாயகியாக முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருக்கும் அவரைச் சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்.
தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு ’விக்ரம்’ என்ற பெயரில் ஒரு ரசிகனாக மொபைலில் லீலா உடன் உரையாடுகிறார் அரவிந்த்.
அது லீலாவிடம் முற்றிலுமாக மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், லீலாவின் நண்பனை இயக்குனராகக் கொண்டு ஒரு படத்தைத் தயாரிக்கத் தயாராகிறார் அரவிந்த். அந்த படத்தில் லீலா நாயகியாகவும், தான் நாயகனாகவும் நடிக்க வேண்டுமென்று நிபந்தனை விதிக்கிறார்.
அதன்பிறகு என்னவானது? அரவிந்த் – லீலா நடித்த படம் முழுமையாகத் தயாரானதா? விக்ரம் எனும் முகம் தெரியாத நபர் உடனான லீலாவின் தொடர்பு என்னவானது? எதையும் எதிர்பாராத அரவிந்தின் காதலை லீலா புரிந்துகொண்டாரா என்று சொல்கிறது ‘ரோமியோ’வின் மீதி.
திருமணத்திற்குப் பிறகான விரிசலைச் சந்திக்கும் ஒரு ஜோடியின் வாழ்வைச் சொல்கிறது இத்திரைப்படம். ’ஓ மை கடவுளே’ உட்படப் பல படங்கள் இதே தொனியில் ஏற்கனவே வெளியாகியுள்ளன.
நடிப்பில் முன்னேற்றம்!
எப்போதும் இறுக்கமான முகமும் விறைப்பான உடல்மொழியுமாக ஆக்ஷன் பாத்திரங்களில் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இதில், நாற்பதைத் தொடுகிற ஒரு மனிதராக, வாழ்வில் முதல் காதலுக்கு ஏங்குபவராக நடித்திருக்கிறார்.
அவரது முதிர்ச்சியான தோற்றத்தை மறக்கடிக்கிறது சில காட்சிகளில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு. நிச்சயமாக, அது அவரது ரசிகர்களுக்குப் புதிதாக இருக்கும்.
நாயகியாக வரும் மிருணாளினி ரவி, தொடக்கத்தில் பெரிய சைஸ் பார்பி பொம்மை போன்றிருக்கிறார். அடுத்தடுத்த காட்சிகளில் அக்கருத்தை உடைத்தெறிகிறார்.
விஜய் ஆண்டனியின் பெற்றோராக இளவரசு – சுதாவும், மிருணாளினியின் பெற்றோராக தலைவாசல் விஜய் – ஸ்ரீஜா ரவியும் நடித்துள்ளனர். முகம் மனதில் பதியும் அளவுக்கு அவர்கள் வந்து போயிருக்கின்றனர்.
கிட்டத்தட்ட ‘காதல் டாக்டர்’ போன்று இதில் வந்து போயிருக்கிறார் யோகிபாபு. ரசிகர்களைச் சிரிக்க வைக்கும் நோக்கில் லேசாகச் சில ‘பஞ்ச்’களை உதிர்த்திருக்கிறார். விடிவி கணேஷ் பாத்திரமும் அப்படியே.
இவர்களைத் தாண்டி மிருணாளினி உடன் திரியும் இளம் இயக்குனர், ஸ்டைலிஸ்ட் மற்றும் ஒளிப்பதிவாளராக நடித்துள்ள ஆர்ஜே ஷரா ஆகியோரும் நம் கவனத்தை ஈர்க்கின்றனர்.
நாயகனின் சிறு வயது பிளாஷ்பேக்கை சொல்லும் காட்சி உட்பட மிகச்சில காட்சிகளில் மட்டுமே பெருமளவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற காட்சிகள் எல்லாம் குறும்பட, யூடியூப் சீரிஸ் பாணியில் உள்ளன.
ஆனால், ஒரு சினிமா அனுபவத்தைத் தரும் வகையிலேயே அவற்றைப் படம்பிடித்திருக்கிறது பரூக் ஜே பாஷாவின் ஒளிப்பதிவு. ’டைம் லேப்ஸ்’ ஷாட்கள் சில இடங்களில் திருப்தியளிக்கின்றன; சில இடங்களில் அதனைத் தரவில்லை.
விஜய் ஆண்டனி இப்படத்தின் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். கதை சீராக நகர்வதை உறுதிப்படுத்தியிருக்கிறது அவரது உழைப்பு.
நாயகனின் சிறு வயது பிளாஷ்பேக்கை காட்சியைத் தொடக்கத்தில் லேசாகக் கோடிட்டுக் காட்டிவிட வேண்டுமென்ற எண்ணம் யாருடையது என்று தெரியவில்லை. ஆனால், அதற்குத் திரையில் பலன் கிடைத்திருக்கிறது.
இசையமைப்பாளர் பரத் தனசேகர், உணர்ச்சிகரமான கட்டங்களில் மிகப்பொருத்தமான பின்னணி இசையைத் தந்திருக்கிறார். ‘வெத்தலை வெத்தலை’ போன்ற பாடல்கள் நிச்சயம் அவரை ரசிகர்கள் கொண்டாடும்படிச் செய்யும்.
சினிமாத்தனமான தருணங்களைத் திரையில் காட்ட உதவியிருக்கிறது கமலநாதனின் கலை வடிவமைப்பு. பிரேம்களில் பல வண்ணங்கள் இடம்பெற்றாலும் கண்களை உறுத்தாத வகையில் திரையில் சீர்மையைப் பேணிய வகையில் கவர்கிறது கௌஷிக்கின் நிறக்கலவை.
ஆடை வடிவமைப்பு, ஒப்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களைக் கையாண்டவர்களும், இப்படத்தில் யதார்த்தத்திற்கு இடமில்லை என்பதைப் புரிந்து பணியாற்றியிருக்கின்றனர்.
வினாயக் வைத்தியநாதன் இதனை எழுதி இயக்கியிருக்கிறார்.
விருப்பமில்லாமல் திருமணத்திற்குச் சம்மதிக்கும் ஒரு பெண் என்ற ஒருவரிக் கதையை வைத்துக்கொண்டு காட்சிகளை அடுக்கியிருக்கிறார்.
அந்தப் பெண்ணை அவரது கணவன் எந்தவித எதிர்பார்ப்புமின்றிக் காதலிக்கிறான் என்ற கற்பனையே இத்திரைப்படத்தினை இன்றைய தலைமுறை ரசிப்பதற்கான யுஎஸ்பி.
ஷாரூக் கான் படத் தாக்கம்!
சில ஆண்டுகளுக்கு முன் ஷாரூக் கான், அனுஷ்கா சர்மா நடித்த ‘ரப் னே பனா தி ஜோடி’ படத்தை நிறையவே நினைவூட்டுகிறது ‘ரோமியோ’. அதிலும் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே அதிக வயது வித்தியாசம் இருப்பதாகக் காட்டப்பட்டிருக்கும்.
தந்தையின் விருப்பத்தால் திருமணத்திற்குச் சம்மதிக்கும் நாயகி, அவரது புறக்கணிப்பைத் தாங்க முடியாமல் புழுங்கும் நாயகன் என்பது உட்படப் பல விஷயங்களில் இரண்டுக்கும் ஒற்றுமை உண்டு.
அந்த படத்தில், தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு இன்னொரு நபர் போன்று நாயகியிடம் பழகுவார் நாயகன்.
இன்றைய இணைய தலைமுறை அதில் இருக்கும் லாஜிக் குறைபாட்டைக் கடித்துக் குதறிவிடும் என்பதால், இருவரும் மொபைலில் உரையாடுவதாகக் காட்டுகிறது ‘ரோமியோ’. அதுவே வித்தியாசம்.
நாயகியிடம் தவறாக நடக்க முயன்ற ஒரு தயாரிப்பாளரை வில்லனாகக் காட்டுகிறது இத்திரைப்படம். அவரால் அனுப்பப்பட்ட அடியாட்களோடு நாயகன் மோதுவதாக ஒரு சண்டைக்காட்சியும் கூட உண்டு. அதன்பிறகும் திரைக்கதை தொடர்கிறது.
சரி, நாயகனின் சிறு வயது பிளாஷ்பேக் காட்சிக்குப் பிறகாவது படம் முடிவடையும் என்று பார்த்தால் இயக்குனர் விட்டபாடில்லை.
போலவே, திரைப்படத்தில் அவர்கள் நடிப்பதாக வரும் காட்சிகள் பெரியளவுக்குச் சிரிப்பை உருவாக்கவில்லை.
அதேநேரத்தில் ஆர்ஜே ஷரா மற்றும் அவரது நண்பர்கள் அடிக்கும் லூட்டிகள் முன்பாதியில் நம்மைச் சிரிக்க வைக்கின்றன.
‘லவ் பார்’ நடத்திவரும் யோகிபாபுவிடம் விஜய் ஆண்டனி யோசனை கேட்கும் காட்சிகள் ‘தனித்து’ தெரிகின்றன. அந்த யோசனைகள் ‘வொர்க் அவுட்’ ஆனதா என்பதை வசனங்களில் இன்னும் தெளிவாகச் சொல்லியிருந்திருக்கலாம்.
திரையில் விறுவிறுப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு இத்திரைக்கதை தருவது ஏமாற்றம் மட்டுமே. அந்த அளவுக்குப் படம் மெல்ல நகர்கிறது.
ஜோடியாகச் சேர்ந்து படம் பார்ப்பவர்களுக்கு ‘ரோமியோ’ நிச்சயம் ஆசுவாசம் தரும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், காதல் மாறாமல் இருந்தால் மட்டுமே இல்லற வாழ்க்கை இனிக்கும் என்பவர்களும் இதனை ரசிப்பார்கள். மற்றவர்களுக்கு இந்த ரோமியோ கொஞ்சம் ‘மொக்கை’யாகத்தான் தெரியும்!
– உதய் பாடகலிங்கம்