புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நிழலாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன்.
எம்.ஜி.ஆர், ஜானகி அம்மாள், ஜெயலலிதா ஆகிய மூன்று முதலமைச்சர்களின், அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்.
சில மாதங்களாக வயது மூப்பு பிரச்சினையால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஆர்.எம்.வீரப்பன் நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 98.
திரைத்துறை, தமிழ்த்துறை, அரசியல், ஆன்மிகம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர். கட்சிக்காரர்களால் ‘அருளாளர்‘, ‘ஆர்.எம்.வீ’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.
எம்.ஜி.ஆர் அறிமுகம்
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை எனும் சிற்றூரில் பிறந்த அவர், 3 வயதிலேயே தந்தையை இழந்தார்.
13 வயது வரை சகோதரியின் வீட்டில் வளர்ந்தவர், அப்போதே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
சென்னை வந்த வீரப்பனுக்கு எம்.ஜி.ஆரின் அறிமுகம் ஏற்பட்டது. அதன்பின், அவருக்கு ஏறுமுகம் தான்.
எம்.ஜி.ஆர்., 1950-களில் எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தை ஆரம்பித்திருந்தார். அதே காலகட்டத்தில் ’எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ’ எனும் திரைப்பட நிறுவனத்தையும் புரட்சித்தலைவர் தொடங்கி இருந்தார்.
அந்த இரு நிறுவனங்களையும் நிர்வாகம் செய்யும் பொறுப்பு ஆர்.எம்.வீரப்பனுக்கு வழங்கப்பட்டது. 1958-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.
சத்யா மூவீஸ்
எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய தளகர்த்தராக இருந்த வீரப்பன், 1963-ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் தாயார் சத்யா பெயரில் ‘சத்யா மூவீஸ்’ எனும் சினிமா பட நிறுவனத்தை தொடங்கினார்.
முதன்முதலாக, எம்.ஜி.ஆரை வைத்து ‘தெய்வத்தாய்’ எனும் படத்தைத் தயாரித்தார்.
அந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் கே.பாலசந்தர். அவருக்கு சினிமாவில் நுழைவு வாயிலாக இந்த படமே அமைந்தது.
இதன் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆரை வைத்து ’நான் ஆணையிட்டால்’, ‘காவல்காரன்’, ’ரிக்ஷாக்காரன்’, ‘இதயக்கனி’ ஆகிய படங்களை தயாரித்தார், ஆர்.எம்.வீ.
‘ரிக்ஷாக்காரன்’ படத்தில் நடித்த எம்.ஜி.ஆருக்கு முதன்முதலாக தேசிய விருது கிடைத்தது. அப்போது அந்த விருதுடன் ‘பாரத்’ என்ற பட்டமும் வழங்கும் வழக்கம் இருந்தது.
எனவே விருது பெற்ற எம்.ஜி.ஆர். அப்போது ‘பாரத் எம்.ஜி.ஆர்’ என அழைக்கப்பட்டுள்ளார். நாளாவட்டத்தில் அந்த பட்டத்தை நீக்கி விட்டது, மத்திய அரசு.
ரஜினி – கமல்
எம்.ஜி.ஆர். முதலமைச்சரானதும், சினிமாக்களில் நடிப்பதை நிறுத்திவிட்டதால், பிற நடிகர்களை வைத்து சத்யா மூவிஸ் சார்பில் வீரப்பன் படங்கள் தயாரித்தார். கமல்ஹாசனை வைத்து ‘காக்கிச்சட்டை’, ‘காதல்பரிசு’ ஆகிய படங்களை எடுத்துள்ளார்.
ரஜினியை கதாநாயகனாக வைத்து ‘ராணுவ வீரன்’, ‘மூன்று முகம்’, ‘தங்கமகன்’, ’ஊர்க்காவலன்’, ’பணக்காரன்’, ‘பாட்ஷா’ ஆகிய படங்களை சத்யா மூவீஸ் தயாரித்துள்ளது.
ஏவிஎம், ஜெமினி, விஜயா-வாகினி, தேவர் பிலிம்ஸ் போன்ற பெரிய பட நிறுவனங்களுக்கு நிகராக சத்யா மூவீசை, தரமான சினிமா நிறுவனமாக திகழ வைத்த ஆர்.எம்.வீரப்பன், ஒரு கட்டத்தில் படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டார்.
எம்.ஜி.ஆரின் மனசாட்சி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எம்ஜிஆரின் நிழலாகவும், மனசாட்சியாகவும் கருதப்பட்டு, ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர், ஆர்.எம்.வீரப்பன். திராவிட இயக்கம் இருக்கும் வரை அவரது புகழும் நிலைத்திருக்கும்‘ என தெரிவித்துள்ளார்.
’பேரறிஞர் அண்ணா சொன்ன, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடித்து வாழ்ந்தவர் ஆர்.எம்.வீரப்பன்’ என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
- பாப்பாங்குளம் பாரதி
#ஆர்.எம்.வீரப்பன் #எம்.ஜி.ஆர் #ஜானகி #ஜெயலலிதா #கே.பாலசந்தர் #ஆர்.எம்.வீ #சத்யா மூவிஸ் #ரஜினிகாந்த் #கமல் #R.M. Veerappan #MGR #rmv #janaki #jayalalitha #rajini #kamal