நாடோடி மன்னன் வெற்றிக்கு ஆர்.எம்.வீ-யின் பங்களிப்பு!

‘நாடோடி மன்னன்’ படம் ஒருவழியாக முடிந்தது. தணிக்கைக் குழுவிற்குப் படத்தைப் போட்டுக் காட்ட வேண்டும்.

அப்போதிருந்த தணிக்கைக்குழு அதிகாரி ஜி.டி.சாஸ்திரி கண்டிப்புக்குப் பெயர் போனவர். விதிமுறைகளைக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காதவர்.

அவர் எவ்வளவு கண்டிப்பானவர், அவரைக் கண்டால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் எப்படிப் பயப்படுவார்கள் என்பதற்கு, பின்னாளில் சத்யா மூவிஸ் என்ற தன்னுடைய சொந்தப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் எடுத்த முதல் படமான ‘தெய்வத் தாய்’ படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியை ஆர்.எம்.வீரப்பன் இங்கே நினைவு கூர்கிறார்.

“நான் தயாரித்த முதல் படமான ‘தெய்வத்தாய்’ படத்தில் கவிஞர் வாலி எழுதிய ‘வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ’ என்ற பாடலில் ‘அத்திபழக் கன்னத்தில் முத்தமிடவா?’ என்று ஒரு வரி வரும்.

அதைப் படமாக்குவதற்கு எனக்குப் பயம். பின்னால் சென்ஸாரின் போது சாஸ்திரி ஏதாவது வெட்டுவாரா என்ற பயம்.

எனவே படமாக்குவதற்கு முன்பாகவே அந்தப் பாடலை எழுதிக் கொண்டு அவரிடம் போய்க்காட்டினேன்.

“இதை ஏன் என்னிடம் காட்டுகிறீர்கள்?” என்று கேட்டார் சாஸ்திரி.

“இல்லை.. இது என் முதல் படத்துக்காக எழுதப்பட்ட பாடல். ஏதாவது அப்ஜெக்ஷன் இருக்குமான்னு இப்பவே கேட்டுடலாம்னு…”

“உங்களுக்கு என்ன சந்தேகம்?”

“ஒரு இடத்தில் கன்னத்தில் முத்தமிடவா என்று வருகிறது. அதான்…”

“அதில் என்ன?”

“இல்லை.. முத்தமிடவா என்ற வார்த்தை இருக்கலாமா என்ற சந்தேகம்”

“எப்போது உங்களுக்கே அந்தச் சந்தேகம் வந்துவிட்டதோ, அப்புறமென்ன, அந்த வார்த்தையை எடுத்துவிட வேண்டியது தானே?” என்றார் சாஸ்திரி.

அது தான் சாஸ்திரி!

அப்படிப்பட்ட கண்டிப்புக்கார அதிகாரியான சாஸ்திரிக்கு, ‘நாடோடி மன்னன்’ பற்றிப் பல புகார்களை பலர் முன்னதாகவே எழுதியிருந்தார்கள்.

ஒவ்வொரு கட்டத்திலும் தணிக்கை விதிகளை மனதில் கொண்டு ஆர்.எம்.வீ அணுகியதால், சென்ஸார் போர்டு அதிகாரி சாஸ்திரி படத்தைப் பார்த்ததும் வெளியே வந்து சொன்ன இரண்டு வார்த்தைகள்:

“நோ கமெண்ட்ஸ்”.

பொதுவாக அப்படி ஒரு சென்ஸார் ஆபீஸர் சொன்னால் அதற்குப் பொருள்: “நோ கட்ஸ்”

  • ‘ஆர்.எம்.வீ ஒரு தொண்டர்’ – ராணி மைந்தன் எழுதி ராஜராஜன் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலில் இருந்து ஒரு பகுதி. 
R.M.V. - Oru Thondar bookRanimaindhanஆர்.எம்.வீ ஒரு தொண்டர்ஆர்.எம்.வீரப்பன்கவிஞர் வாலிராணி மைந்தன்
Comments (0)
Add Comment