மருத்துவரின் கூற்றுப்படி தினமும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்துக்கு நல்லது. இப்போது உள்ள கால மாற்றத்தால் உடல்சார்ந்த வேலைகள் எல்லாம் குறைக்கப்பட்டு மிஷினிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
வீட்டுவேலை, அலுவலக வேலை எல்லாம் எந்திரத்தைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதன் காரணமாக உடலை வருத்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.
இதன் விளைவாக உடல் பருமன், பெயர் தெரியாத நோய்கள் முதல் மன அழுத்தமும் சேர்ந்து நம்மை அச்சுறுத்துகிறது.
நடந்து செல்லும் தூரத்துக்கு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு செல்கிறோம்.
நடந்து செல்ல அழுப்பு ஒரு பக்கம் அடுத்தவன் என்ன நினைப்பான் என்ற எண்ணம் மறுபக்கம் இப்படித்தான் நம் ஆரோக்கியத்தை பிறருக்காக தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
இதன் விளைவு..? அடிக்கடி மருத்துவமனை, உடற்பயிற்சி கூடமே கதி என இருக்கின்றோம். சரி இப்போது உடற்பயிற்சி என்பது ஆரோக்கியம் மட்டும் சார்ந்த விஷயமா? இல்லை… ஆண்களின் அழகையும் மெருகேற்றுக்கொள்ள உதவக்கூடியது.
இந்த கால இளைஞர்கள் நிறைய ஆண்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள ஆசைப்படுகின்றனர்.
உடல் பருமனைக் குறைக்க படாதபாடுபடும் ஆண்கள் ஒருபக்கம் என்றால் உடலை அழகாக வைத்துக் கொள்ள போட்டி போட்டுக்கொண்டு உடற்பயிற்சி செய்யும் ஹீரோக்கள் மறுபக்கம். ஜிம்மிலும் இன்னும் சிலர் வீட்டிலும் செய்து வருகிறார்கள்.
ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்கள் பயிற்சியாளரின் மேற்பார்வையில் இருப்பதால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் வீட்டிலேயே செய்பவர்களுக்கு முறையான தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை.
எந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பது பற்றி தெளிவு இல்லாமல் இருக்கின்றனர்.
பொதுவாக உடற்பயிற்சி என்பது வயதுக்கு மற்றும் அவர்களின் உடல் எடைக்கு ஏற்றது போல் மாறுபடும். ஒருவர் 20 வயதுகளில் செய்து வந்த உடற்பயிற்சிகளை அவரது 30வயதுக்கு மேல் முயற்சிப்பார்கள். ஆனால் இது ஆபத்தில் முடிந்து விடும்.
இப்படி முயற்சி செய்யும்போது அதன் விளைவாக முதுகுப் பகுதியில் உள்ள டிஸ்க்குகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும் என எச்சரிக்கின்றனர். முப்பது வயதுக்கு மேல் இருக்கும்போது டிஸ்க்குகள் வறண்டு போகத் தொடங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே 30 வயதை கடந்த ஆண்கள் கடுமையான ஒருசில உடற்பயிற்சிகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படி விடாப்படியாக செய்யும்போது முதுகு வலி, முழங்கால் வலி ஏன் மாரடைப்பைக் கூட ஏற்படுத்தும் என்கின்றனர்.
30 வயதை கடந்த ஆண்கள் இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யக் கூடாது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
1) சிட்-அப்ஸ்
இந்த பயிற்சி குறிப்பாக 30 வயதைக் கடந்த ஆண்களுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
சிட் அப்ஸ் பயிற்சி செய்யும்போது, கீழ் முதுகு பகுதியில் அதிகமான அழுத்தம் கொடுக்கப்படும்.
இப்படி அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்போது, அதன் பாதிப்பு முதுகுப்பகுதியில் உள்ள டிஸ்க் இறக்கப்படலாம் இதற்கு பதிலாக ப்ளான்க் பயிற்சிகளை வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்கின்றனர் பயிற்சியாளர்கள்.
2) டெட்லிஃப்ட்:
இந்த கடினமான உடற்பயிற்சி செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் இதுவரை டெட்லிஃப்ட் பயிற்சி செய்ததில்லை என்றால் அதை 30 வயதுக்கு மேல் முயற்சிக்கக்கூடாது.
தவறான நிலையில் டெட்லிஃப்ட் பயிற்சியை செய்யும் போது, அதன் விளைவாக இடுப்பு முதுகுத்தண்டில் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்பட்டு, பல தீவிர பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.
ஒருவேளை இந்தபயிற்சியானது ஏற்கனவே உங்களுக்கு பழகியது என்றால், அந்த பயிற்சியை உடற்பயிற்சியின் இறுதியில் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஏனென்றால் சோர்வடைந்த தசைகளுடன் இந்தப் பயிற்சியை செய்யும்போது, மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் என கூறுகின்றனர். எனவே இப்பயிற்சியில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
3) ரோ பயிற்சிகள்:
முதுகு தசைகளை குறிப்பாக ரோம்பாய்டுகுளை வலுப்படுத்துவதில் சிறந்த பயிற்சியாகும்.
ஆனால் இந்தப் பயிற்சிகளை செய்யும்போது வயிற்றுப் பகுதி இறுக்கமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தவறாக வளைந்து நெலிந்து செய்தால் முதுகு பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
இந்தப் பயிற்சியானது உட்கார்ந்த நிலையில் எடையைத் தூக்கிக் கொண்டு செய்யக்கூடியது.
எடையைத் தூக்கிக் கொண்டு பக்கவாட்டில் திரும்பும்போது முதுகெலும்பு மற்றும் இடுப்பு நேராக இருக்க வேண்டும்.
மேலும் இது கீழ் முதுகு பகுதியில் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. 30 வயதை கடந்து செய்யும் போது வலியை ஏற்படுத்தி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
4) ஓவர்ஹெட் பிரஸிங்:
எல்லோராலும் இந்தப் பயிற்சியை சுலபமாக செய்ய முடியாது. பயிற்சியாளர் இல்லாமல் செய்யும்போது தவறான நிலை மற்றும் முறையற்ற பயிற்சியால் மூட்டு வலி, முதுகு வலி உண்டாகும்.
- யாழினி சோமு