நூல் அறிமுகம்:
தோழர் கல்பனா எழுதி, ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பித்த நூல் “பெய்யெனப் பெய்யா மழை”. கல்பனா அவர்கள் இப்போது மலசர் பழங்குடிகள் பற்றிய முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.
சமூகப் பிரச்சனைகளைக் களத்தில் இருந்து ஆய்வு செய்கிறார். இலக்கிய இதழ்களிலும் ஆய்விதழ்களிலும் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டு வருகிறார்.
உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றில் உள்ள பாலினப் பாகுபாட்டை காத்திரமாக கேள்வி கேட்கும் பெண்ணிய நூல். இந்தப் பாகுபாட்டை களைந்து சமத்துவம் நோக்கி வர வேண்டும் என்று விழைகிறது இந்நூல்.
வரலாற்று பார்வையில் மானிடவியல் நோக்கில் பெண்கள் எவ்வாறு அடிமையானார்கள் என்று ஆசிரியர் விளக்குகிறார்.
ஆதி காலத்தில் மனிதன் வேட்டையாடி இருந்தபோது தாய்வழி சமூகமாக இருந்தது. பெண்கள் தலைமை ஏற்று மனிதக் குழுவை வழிநடத்தி வந்தனர்.
வேட்டையிலிருந்து விவசாயத்திற்கு மாறும்போது தந்தை வழி சமூகமானது. அதன் பிறகு தான் பெண்கள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆணாதிக்க மனநிலையும், சாதியும் பெண்களை அடிமையாக நடத்தியது.
உணவு, உடை மற்றும் இருப்பிட மரபுகள் பாலினப் பாகுபாடு கட்டமைப்புக்கு அடிப்படை காரணிகளாக இருந்து வருகின்றன.
இவற்றில், உணவு மரபுகள் பெண்களை பலவீனம் ஆக்குபவையாகவும், உடையணி மரபுகள் பெண்களின் தன்னம்பிக்கையை சீர்குலைப்பவையாகவும் இருக்கின்றன. இருப்பிட மரபுகள் பெண்களை அடிமைகளாக மாற்றும் நிறுவனங்களாக உள்ளன.
உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஆண்களை விட பெண்களே அதிக அளவு பாதிப்புக்கும் உயிரிழப்புகளுக்கும் உள்ளாகின்றனர்.
பெண்கள் உடை அணிந்து கொள்வது ஆண்களின் பார்வையில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக அல்ல என்பதை சமூகம் உணர வேண்டும்.
எந்த உடை அணிவது என்பது பெண்களின் தேர்வாக இருக்க வேண்டும். ஆணாதிக்க பாரம்பரியத்திலிருந்து பொருளாதார சுதந்திரம் அடைகின்ற பெண்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் ஏதுவான உடை தேர்வையும் வாழ்வியலாக்கி கொள்வது முக்கியமானதாகும்.
சட்டம் பெண்களுக்கு உரிமை கொடுத்தாலும் பெரும்பாலும் ஆண்கள் இடத்தே நிலங்கள் உரிமை கொண்டாடப்படுகின்றன. பெண்கள் உரிமை பெற்றுக் கொள்ளும்போது இந்த சமூகம் சமத்துவத்தை நோக்கி செல்லத் தொடங்கும்.
இந்த தொகுப்பில் மொத்தம் 20 கட்டுரைகள் உள்ளன. வரதட்சணை, பெண் வெறுப்பு, கருப்பை அதிகாரம், ஆணவக் கொலைகள் போன்ற பல தலைப்புகளில் முக்கியமான கட்டுரைகள் உள்ளன. ஆண்களை ஒரு ஆத்ம பரிசோதனைக்கு உட்படுத்தும் ஒரு நூல்.
பெண் விடுதலை இல்லாமல் மானுட விடுதலை சாத்தியமில்லை. பாலினப் பாகுபாடன்றி சமத்துவ சமூகத்தைக் கட்டி அமைக்கும் முயற்சிக்கு இந்தப் புத்தகம் மேலும் வலு சேர்க்கும். அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.
புத்தகம் : பெய்யெனப் பெய்யா மழை
ஆசிரியர் : கல்பனா
பதிப்பகம்: Her Stories
பக்கம்: 144
விலை: ரூ.200/-