‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீத கோவிந்தம்’ படங்கள் மூலமாகப் பெருமளவு ரசிகர்களைத் தன்வசப்படுத்தியவர் விஜய் தேவரகொண்டா. ஆனால், அதன்பின் வந்த ‘லைகர்’, ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’, ‘டியர் காம்ரேட்’ போன்ற படங்கள் அதே அளவுக்கு வசீகரிக்கவில்லை.
இந்த நிலையிலேயே சமந்தா உடன் அவர் நடித்த ‘குஷி’ கலவையான விமர்சனங்களைப் பெற்று பாக்ஸ் ஆபீஸில் ஓரிடத்தைப் பிடித்தது.
அதே சூட்டில் தற்போது ‘தி பேமிலி ஸ்டார்’ படத்தில் தோன்றியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. மிருணாள் தாகூர் அவரது ஜோடியாக நடித்துள்ளார். பரசுராம் இதன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
இந்தப் படம் பெயருக்கு ஏற்றாற்போல, குடும்பங்கள் கொண்டாடுவதற்கு ஏற்ற வகையில் உள்ளதா?
காதலில் உருவாகும் ஊடல்!
நடுத்தரக் குடும்பத்து கஷ்ட நஷ்டங்களோடு வாழ்ந்து வருகிறார் கோவர்தன் (விஜய் தேவரகொண்டா). இரண்டு அண்ணன்கள், அண்ணிகள், குழந்தைகள் வீட்டில் இருக்கின்றனர் எனும் எண்ணமே, அக்குடும்பத்திற்காக உழைக்க வேண்டுமென்ற வேட்கையை அவரிடத்தில் உருவாக்குகிறது.
அதனால், ‘இது வாலிப வயது’ என்ற டயலாக் நினைவுக்கு வராத வகையிலேயே அவரது செயல்பாடுகள் இருக்கின்றன.
ஒரு நிறுவனத்தில் ஆர்க்கிடெக்ட் ஆக வேலை செய்யும் கோவர்தனுக்குத் தன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வதே முழுநேரப் பணி. அவரை விரும்பித் தேடி வரும் பெண்கள் கூட, அந்த தகவல் தெரிந்ததும் விலகி ஓடி விடுகின்றனர்.
அவரது அலுவலகத்திலேயே அப்படியொரு பெண் (திவ்யான்ஷா கௌசிக்) இருக்கிறார். அதனால், எந்தப் பெண்ணையும் அவர் ஏறெடுத்துப் பார்க்கவில்லை.
ஆனால், இந்து (மிருணாள் தாகூர்) அவர் வீட்டுக்குக் குடிவரும்போது கோவர்தனின் இரும்பு மனது உருகத் தொடங்குகிறது. தனது குடும்பத்தினர் மீது அவர் காட்டும் அன்பு நெகிழ வைக்கிறது.
அது மட்டுமல்லாமல் ‘என்னங்க’ என்று அவர் அழைக்கும் ஒவ்வொரு நொடியும் கோவர்தன் மனது சுக்குநூறாகிறது. அவர் மீதுள்ள காதலை உறுதிப்படுத்தியவுடன், அதனைக் கொண்டாட வேண்டும் என்று கூட முடிவு செய்கிறார்.
அந்த நிலையில், கோவர்தன் கையில் ஒரு புத்தகம் கிடைக்கிறது. அது, இந்து எழுதிய ஆய்வேடு. மானுடவியல் மாணவியான அவர், தனது குடும்பத்தினரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காகவே வீட்டுக்குக் குடிவந்தார் என்பதும், அனைவரோடும் நெருங்கிப் பழகினார் என்பதும் பிடிபடுகிறது. அதனை அறிந்தவுடன், கோவர்தன் கொதித்தெழுகிறார். அவர் மீதிருக்கும் காதலைத் தூக்கி வீசுகிறார்.
‘நடுத்தரக் குடும்பத்து மதிப்பீடுகள் என்று நீ கருதியவற்றை சில நாட்களில் மாற்றிக் காட்டுகிறேன்’ என்று இந்துவிடம் சொல்கிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று கேட்கக் கூட, அவர் தயாராக இல்லை.
அதையடுத்து, ஒரு பெரிய கார்பரேட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். முன்பணமாகப் பெரும் தொகையைப் பெற்று தனக்காகவும் குடும்பத்திற்காகவும் செலவழிக்கிறார்.
ஒரு நன்னாளில் அந்த நிறுவனத்தில் பணியில் சேரச் செல்கிறார். அப்போதுதான், அந்த நிறுவனத்தின் சி இ ஓ ஆக இருப்பது இந்து என்று அறிகிறார்.
அதன்பின் என்னவானது? இந்து – கோவர்தன் காதல் கல்யாண கட்டத்தை எட்டியதா என்று சொல்கிறது ‘தி பேமிலி ஸ்டார்’ படத்தின் மீதி.
இந்தக் கதையில் இந்துவுக்கும் கோவர்தனுக்கும் இடையே ஏற்படும் ஊடல்கள் தான் திரைக்கதையில் திருப்பங்களுக்குக் காரணமாகிறது. அது நம்மை ஈர்க்கிறதா என்பது அவரவர் விருப்பங்களைப் பொறுத்து மாறுபடும்.
ஏன் இவ்வளவு ஹீரோயிசம்?
நாயகன் விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர், ரசிகைகளிடம் இருக்கும் அபிமானத்தை உணர்ந்து எழுத்தாக்கத்தையும் காட்சியாக்கத்தையும் கையாண்டிருக்கிறார் இயக்குனர் பரசுராம்.
குடும்பத்திற்காக உழைப்பவரும் நாயகன் தான் எனும் பாத்திர வார்ப்பு அருமையான ஒன்று. அதற்காகப் பல நல்ல மதிப்பீடுகளைக் காட்டிவிட்டு, கிளைமேக்ஸில் அதே நாயகன் ரத்தம் வரும் அளவுக்கு அடியாட்களைத் துவைத்தெடுப்பதாகக் காட்டியிருப்பது முற்றிலும் முரணானது.
துருத்தலாகத் தெரியும் ஹீரொயிசம் தான் ஒட்டுமொத்தமாகத் திரைக்கதையை ஆட்டம் காண வைக்கிறது.
மிருணாள் தாகூருக்கு இதில் கோடீஸ்வரரின் மகள் பாத்திரம். அது வெளியே தெரியாமல் ‘மிடில் கிளாஸ் தேவதை’யாகக் காட்சியளிப்பார்.
அவர் நடித்த ‘சீதா ராமம்’ படம் இயக்குனருக்கு ரொம்பப் பிடிக்கும் போல. அதனால், அதே பாத்திர வார்ப்பை அப்படியே பெயர்த்தெடுத்து இதில் புகுத்தியிருக்கிறார்.
படத்தில் விஜய் – மிருணாள் இடையிலான ‘கெமிஸ்ட்ரி’ சரியாக வெளிப்படவில்லை. அதனைக் கொஞ்சம் சரி செய்திருக்கலாம். அது மட்டுமல்லாமல், மிருணாள் முகத்தில் தென்படும் சுருக்கங்கள் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்துகிறது.
விஜய்யின் பாட்டியாக ரோகிணி ஹட்டாங்காடி, மூத்த அண்ணனாக ரவி பிரகாஷ், அண்ணியாக வாசுகி, அபிநயா மற்றும் ரவிபாபு, அஜய் கோஷ், அச்யுத் குமார், ஜெகபதி பாபு உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
மிருணாளின் உதவியாளராக வரும் வெண்ணிலா கிஷோர் லேசாகக் கிச்சுகிச்சு மூட்டுகிறார்.
ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனன் கைவண்ணத்தில் ஒவ்வொரு பிரேமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் தரத்தில் உள்ளன.
தயாரிப்பு வடிவமைப்பாளர் அதற்கேற்ற வகையில் பின்னணியை அமைத்துள்ளார். கொஞ்சம் யதார்த்தம், நிறையவே பேண்டஸி என்றிருக்கும் வகையில் பல செட்கள் அமைக்கப்பட்டுள்ளன; கூடவே, திரையில் குறிப்பிட்ட வண்ணங்கள் அதிகம் இடம்பெற வேண்டுமென்பதிலும் அவரது குழுவினர் அக்கறை காட்டியுள்ளனர்.
கோபி சுந்தரின் பின்னணி இசை, காட்சிகளில் இருக்கும் குறைகளை உணராமல் நம்மை உணர்வெழுச்சிக்கு ஆட்படுத்துகிறது. அவர் தந்திருக்கும் பாடல்களும் கூட நம்மைச் சட்டென்று ஈர்க்கின்றன.
இந்த படத்தில் மொத்தம் மூன்று சண்டைக்காட்சிகள் உள்ளன. அவற்றில் முதலிரண்டு கதையோடு ஒட்டாமல் துருத்தலாகத் தெரிகின்றன.
அவற்றுக்கு ‘கத்தரி’ போட்டிருந்தால், கதைக்குத் தேவையான இரண்டொரு காட்சிகளைச் சேர்த்திருக்கலாம்.
இயக்குனர் பரசுராம் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவை ஒரு சாதாரண மனிதனாகக் காட்டி, அதன் மூலமாகத் திரையில் அவரது ‘ஹீரோயிசத்தை’ அனைவரும் ரசிக்கும்படியாகக் காட்ட விரும்பியிருக்கிறார். ஆனால், அதில் அவருக்குப் பாதியளவு வெற்றியே கிடைத்துள்ளது.
திருப்தி இல்லை!
இந்தக் கதையில் விஜய் தேவரகொண்டாவின் பாத்திரம் நடுத்தரக் குடும்பத்தின் கஷ்டங்களை ஒற்றை ஆளாகத் தாங்குவதாகக் காட்டியிருப்பது கூடப் பரவாயில்லை. அதற்காகவே, குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதார் அட்டைகளையும் ரேஷன் கடையில் நீட்டி, சாக்குப் பையில் வெங்காயம் வாங்குவதாகக் காட்டியிருப்பதெல்லாம் ’ஓவர் டிராமா’ ரகம்.
ஒரு கோடீஸ்வரரின் மகள் எதற்காக மானுடவியல் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்? அப்படியொருவர் திடீரென்று தந்தையின் நிறுவனத்தை நிர்வகிக்கச் செல்வது எப்படி? அந்த கேள்விகளுக்குக் கொஞ்சமும் பதிலளிக்காத அப்பாத்திர வார்ப்பே மிருணாள் தாகூரை முழுமையாக ரசிப்பதற்குத் தடையாக உள்ளது.
மிக முக்கியமாக, இந்தக் கதையில் வில்லன் என்று எந்தப் பாத்திரமும் பெரிதாகச் சோபிக்கவில்லை. விஜய் – மிருணாள் பாத்திரங்களின் தவறான புரிதல் அந்த இடத்தை எடுத்துக்கொள்வதாகக் காட்ட நினைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால், நம்மால் அதனை உணர முடிவதில்லை.
கதையின் தொடக்கத்தில், நாயகனின் நண்பர்களாகச் சில பாத்திரங்கள் இடம்பெறுகின்றன. அதன்பிறகு, அவை என்னவகின என்று தெரிவதில்லை.
நாயகனின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் நாயகன் குறித்து கொண்டுள்ள அபிப்ராயங்கள் திரையில் முழுமையாக வெளிப்படவில்லை. இதுபோன்ற காரணங்களே திருப்தியைப் பெறவிடாமல் நம்மை இருக்கையில் இருந்து எழ வைக்கிறது.
‘நாற்பதில் நாய்க்குணம்’ என்று சொல்வதற்கு ஏற்ற வகையிலான ஒரு பாத்திர வார்ப்பை அப்படியே இளம் வாலிபனுக்குப் பொருத்தினால் ’தி பேமிலி ஸ்டார்’ கதை ரெடி என்று களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் பரசுராம்.
அதற்கேற்றவாறு இதர பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தந்து, திரைக்கதையில் ‘லாஜிக் மீறல்’களைக் குறைத்து, யதார்த்தத்தைத் திரையில் படர விட்டிருந்தால் இப்படம் தொட்டிருக்கும் உயரமே தனி.
அதனைச் செய்யாமல், விஜய் தேவரகொண்டா இரும்புக் கம்பியை வளைப்பதாகக் காட்டியிருக்கிறார். தனி ஆளாகப் பெரும்படையையே புடைத்தெடுப்பதாகக் காட்டியிருக்கிறார். அந்தக் கணமே, ‘எதுக்கு..’ என்ற குரல் நமக்குள் பலமாக ஒலிக்கத் தொடங்குகிறது.
அது மட்டும் நிகழாமல் இருந்திருந்தால், இந்த ‘தி பேமிலி ஸ்டார்’ உண்மையாகவே குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக மாறியிருக்கும். இப்போது, ஒரு சில குடும்பங்களே தியேட்டருக்கு வருவதற்கு வழி வகை செய்திருக்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!
– உதய் பாடகலிங்கம்