போதைப்பொருள் கடத்தல்: அமீரிடம் 12 மணி நேரம் விசாரணை!

போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள், டெல்லியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் செயல்பட்டு வந்த குடோனில் அதிரடியாக நுழைந்த டெல்லி போலீஸார், சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து .2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவை வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து ஜாபர் சாதிக்கை, கடந்த மாதம் 9-ம் தேதி டெல்லியில், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அதிகாரிகளிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

‘வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்தேன் – அந்தப் பணத்தில், கயல் ஆனந்தி நடிப்பில், ‘மங்கை என்ற படத்தை தயாரித்தேன்.

அமீர் இயக்கத்தில், ‘இறைவன் மிகப்பெரியவன்‘ என்ற படத்தை தயாரித்து வருகிறேன்” என்று கூறி இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க, இயக்குநர் அமீருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.

அமீர் வாக்குமூலம்

அதன் பேரில், டெல்லியில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அமீர் நேற்று காலை 10 மணிக்கு ஆஜரானார். அவரிடம் இரவு 10 மணி வரை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர்.

அமீரிடம் விசாரணை நடைபெற்றபோது, அவரது தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஜாபர் சாதிக்குடன் உள்ள தொடர்பு குறித்தும் அவரது பணப்பழக்கம் தொடர்பாகவும் அமீரிடம் விசாரணை நடைபெற்றது.

அமீர் அளித்த வாக்குமூலம் குறித்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்த தகவல்:

’’ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது, தனக்கு தெரியாது என அமீர் விடாப்பிடியாக சாதித்தார் – இது, ஜாபர் சாதிக் அளித்த வாக்குமூலத்துக்கு முரணாக உள்ளது-

திரைப்பட தயாரிப்பையும் தாண்டி, பணப்பரிவர்த்தனை செய்தது குறித்த கேள்விகளுக்கு அமீர் சரியாக பதில் சொல்லவில்லை – பல கேள்விகளுக்கு ‘தெரியாது.. ஞாபகம் இல்லை” என்றே அவர் தெரிவித்தார்.

எனக்கும், ஜாபர் சாதிக்குக்கும் சினிமா தொழில் சார்ந்த பழக்கம் மட்டுமே இருந்தது என அமீர் கூறினார்.’’

கைதாவாரா?

’இயக்குநர் அமீரை தற்போதைக்கு கைது செய்யும் எண்ணம் இல்லை’ என அதிகாரிகள் கூறினர்.

அவர் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே ஜாபர் சாதிக், புரசைவாக்கத்தில் 2021-ம் ஆண்டு ஒரு நிறுவனம் ஆரம்பித்தார் என்றும் அதில் அமீரும் ஒரு பங்குதாரர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

‘பருத்தி வீரன்‘ உள்ளிட்ட சினிமாக்களை இயக்கியுள்ள அமீர், சில திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

– பாப்பாங்குளம் பாரதி.

 

director amirdrugs casenational narcotics control boardproducer jafar sadiqஇயக்குனர் அமீர்தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவுஜாபர் சாதிக்
Comments (0)
Add Comment