ஓரிரு படங்களில் பங்களிப்பைத் தந்த சில புதுமுகங்கள். அவர்களோடு எம்.எஸ்.பாஸ்கர், ரமா என்று மிகச்சில தெரிந்த திரை முகங்கள். முற்றிலும் புதிய தொழில்நுட்பக் கலைஞர்கள். அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வித்தியாசமான டைட்டிலுடன் ஒரு படத்தைத் தருவது எத்தகைய எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் உருவாக்கும். நிச்சயம் அது பெரிதாக அமையாது.
‘வெப்பம் குளிர் மழை’ திரைப்படம் அப்படியொரு நிலையிலேயே தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஒரு சின்ன பட்ஜெட் படம் என்பதைத் தாண்டி, ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் என்ற உயரத்தை இது எட்டியிருக்கிறதா?
தம்பதியரின் மன வலி!
சிவகங்கை அருகேயுள்ள மாவிடுதிக் கோட்டை எனும் சிற்றூரில் எழுபதுகளில் நடப்பதாக, இப்படத்தின் திரைக்கதை தொடங்குகிறது. அப்போது, கருவுறுதலை எதிர்பார்க்கும் ஒரு பசுவுடன் காளையை இணை சேர விடுகின்றனர். அதனைக் காணும் சிறுவர் கூட்டத்தைப் பெரியோர் விரட்டியடிக்கின்றனர்.
இவ்விரு காட்சிகளுமே ‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் அடிப்படை கதையோட்டத்தைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது.
அந்தக் கிராமத்தில் பசுக்களுக்கு சினை ஊசி போடும் வேலையை செய்து வருகிறார் பெத்தபெருமாள் (திரவ்). அவரது மனைவி பாண்டி (இஸ்மத் பானு). திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆனபிறகும், அவர்கள் குழந்தைப்பேறு இன்றித் தவித்து வருகின்றனர்.
அது, பெத்தபெருமாளின் தாயை (ரமா) கவலைக்குள்ளாக்குகிறது. ஊராரின் கேலி கிண்டல்களுக்கு அக்குடும்பத்தை உள்ளாக்குகிறது.
குழந்தைப்பேறு வேண்டி கோயில் குளம் சென்றுவரும் அத்தம்பதி, மருத்துவமனையில் சிகிச்சை பெறத் தயங்குகின்றனர். ஒருமுறை சென்னையில் இருந்து வந்த பெத்தபெருமாளின் நண்பரும் அவரது மனைவியும் அந்த யோசனையைச் சொல்லிச் செல்கின்றனர்.
இதற்கிடையே, பெத்தபெருமாளின் சகோதரி மகளை அவருக்குத் திருமணம் செய்துவைக்கப் பேச்சுகள் நடக்கின்றன. பாண்டியும் கூட அதற்குச் சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால், அந்த நேரத்தில் பாண்டியின் தாயார் மரணமடைய, அந்த நிகழ்வு தள்ளிப்போகிறது.
அதன் தொடர்ச்சியாக, பாண்டி மனதளவில் தளர்ந்து போகிறார். அதனைக் காணும் பெத்தபெருமாள், மருத்துவமனையில் கருவுறுதலுக்குச் சிகிச்சை மேற்கொள்ளச் சம்மதிக்கிறார்.
மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் செல்கின்றனர் இருவரும். அங்கிருக்கும் நடைமுறைகள் பெத்தபெருமாளை ‘டென்ஷன்’ ஆக்குகின்றன. சோதனை முடிவுகளுக்குக் காத்திராமல் அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறி விடுகிறார்.
தம்பதியர் இருவரையும் சோதனை செய்த விவரங்களைத் தெரிவிக்கிறார் ஒரு செவிலிப்பெண். அப்போது, பாண்டியிடம் எந்தக் குறையும் இல்லை என்று சொல்கிறார்.
அதனைக் கேட்டதும், அவர் நொறுங்கிப் போகிறார். குழந்தைப்பேறு வேண்டி பிரமை பிடித்தவாறு இருக்கும் கணவனைச் சரி செய்யும் நோக்கில், செயற்கைக் கருவுறுதலுக்குச் சம்மதிக்கிறார் பாண்டி.
வேறொருவரின் விந்தணு மூலம் குழந்தை பெற்றெடுக்கிறார். அதற்கு கார்த்திக் என்று இருவரும் பெயரிடுகின்றனர்.
குழந்தைக்கு ஐந்து வயதாகும் வரை பாண்டி அந்த உண்மையை எவரிடம் சொல்லவில்லை. சந்தர்ப்பச் சூழலால் ஒருநாள் அதனைப் பெத்தபெருமாளிடம் சொல்கிறார்.
அவரால் அதனைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதன்பிறகு கார்த்திக்கைக் கண்டாலே வெறுப்பை உமிழ்கிறார் பெத்தபெருமாள். குழந்தையைக் கொலை செய்யும் நிலைக்குச் செல்கிறார்.
அதன்பிறகு என்னவானது? பெத்தபெருமாள் – பாண்டி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்களா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
ஸ்பாய்லர் என்றபோதும் இதனைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. தம்பதிகள் மகிழ்ச்சியோடு வாழ்வதாகவே படம் முடிவடைகிறது.
அதற்கு இயக்குனர் என்ன காரணம் சொல்கிறார் என்பதே இப்படத்தின் யுஎஸ்பி.
அறிவியல்பூர்வமான கருத்தாக்கங்களுக்கு எதிரான போதும், அதுவே இயற்கையோடு ஒன்றிவாழ்பவர்களின் அடிப்படை நம்பிக்கையாக உள்ளது என்பதே ‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் சிறப்பு.
வழக்கமான படம் கிடையாது!
இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் திரவ். புதுமுகம் என்று தெரியாத வகையில் அவரது நடிப்பு அமைந்திருப்பது சிறப்பு.
அது மட்டுமல்லாமல் அவர் இப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார். படத்தொகுப்பையும் அவரே கையாண்டிருக்கிறார்.
இப்படத்தைத் தயாரித்திருப்பதும் அவரே. இத்தகவல்களே இப்படத்தின் மீது திரவ் கொண்டிருக்கும் நம்பிக்கை எத்தகையது என்பதை உணர்த்துகிறது.
நாயகியாக நடித்துள்ள இஸ்மத் பானு, இதற்கு முன்னர் ‘அசுரன்’ உள்ளிட்ட சில படங்களில் தலைகாட்டியிருக்கிறார். ஆனால், இதில் அவரே பெரும்பாலான காட்சிகளில் இடம்பெறுகிறார்.
அந்த பொறுப்பினைத் தாங்கும் அளவுக்குப் பலம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது, தமிழுக்கு நல்லதொரு நடிகை கிடைத்திருக்கிறார் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.
‘அந்த தூக்குகல்லு பெட்டிய வாங்கிட்டு வா’ என்ற வசனத்துடன் அறிமுகமாகும் எம்.எஸ்.பாஸ்கர் மிகச்சில காட்சிகளில் வந்தாலும் ஆங்காங்கே நம்மை கிச்சுகிச்சு மூட்டுகிறார்.
அவரது பாத்திர வடிவமைப்பு கதையோடு ஒட்டவில்லை என்றபோதும், பல கிராமங்களில் அது போன்ற நபர்களை நாம் பார்க்க முடியும் என்பதே அதனைத் தனித்துவமானதாக மாற்றுகிறது.
தனது மருமகள் சொல்லாமல் சொல்லும் உண்மையை அறிந்தபிறகும், அதிர்ச்சியடையாமல் இருப்பார் நாயகனின் தாய். அந்தக் காட்சியில் ரமா ரசிகர்களின் கைத்தட்டல்களைப் பெறுகிறார்.
இவர்கள் தவிர்த்து காந்தி எனும் பாத்திரத்தில் நடித்தவர் உட்பட இதில் நடித்த பலர் நம் மனதைக் கவர்கின்றனர்.
ஓரிரு பாத்திரங்களைத் திரையில் காட்டியபோதும், கிராமத்து அழகைப் பருகக் கொடுத்த வகையில் நம்மைத் திருப்திப்படுத்துகிறது பிருத்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவு.
கோயில் கொடை விழா, இறப்பு சடங்குகள் போன்றவற்றைக் காட்சிப்படுத்திய வகையில் கவர்கிறது சி.எஸ்.பாலச்சந்தர் குழுவினரின் கலை வடிவமைப்பு.
ஸ்டன்னர் சாம் வடிவமைத்துள்ள சண்டைக்காட்சிகள் மிகச்சில நிமிடங்களே வருகின்றன. ஆனால், அவற்றில் நிறைந்துள்ள எளிமையும் இயல்புத்தன்மையும் படத்தின் கதையோட்டத்தோடு சட்டென்று கலந்துவிடுகின்றன.
இசையமைப்பாளர் சங்கர் ரங்கராஜன், இந்த படத்தில் ‘டமக்கு டமக்கா’, ‘எப்போ எப்போ’, ‘ஊர் ஊரா நின்னு’, ’எங்க ஊரு இது’, ‘யாரை நானும் குத்தம் சொல்ல’ என்று ஐந்து பாடல்கள் தந்திருக்கிறார். ஓரிரு முறை கேட்டாலே அப்பாடல்கள் மனதோடு ஒட்டிக்கொள்கின்றன.
பின்னணி இசையிலும் அவரது கற்பனை வளம் மாயாஜாலத்தை செய்திருக்கிறது. இளையராஜா உள்ளிட்ட பல ஜாம்பவான்களின் பிரதிபலிப்பு அதில் தெரிந்தபோதும், காட்சியின் தன்மையை உயர்த்திப் பிடிக்கும் வித்தை அந்த இசையில் நன்றாகவே தென்படுகிறது.
நாயகன் மனதில் ஆத்திரம் விஸ்வரூபம் எடுக்கும் தருணத்தில் அவர் தந்துள்ள பின்னணி இசை அதற்கொரு உதாரணம்.
இன்னும் டிஐ, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, ஒலி வடிவமைப்பு என்று பல அம்சங்களை இதில் குறிப்பிட முடியும்.
அறிமுக இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து, முதல் படத்திலேயே தான் ஒரு வித்தியாசமான சிந்தனையாளர் என்பதை உணர்த்த முற்பட்டிருக்கிறார்.
‘இது வழக்கமான படம் அல்ல’ என்று ரசிகர்களைச் சொல்ல வைத்த வகையில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
நல்ல படமா?
பெத்த பெருமாள் – பாண்டி என்ற தம்பதி ‘தங்களுக்குக் குழந்தை இல்லையே’ என்று ஏங்குவதையும் வருந்துவதையும் மட்டுமே சுற்றிச் சுழல்கிறது ‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் பெரும்பகுதி. அதனால் கதையில் பெரிதாகத் திருப்பங்கள் இல்லை.
செயற்கைக் கருவுறுதலை நோக்கி நாயகி நகர்வதாகக் காட்டப்படும்போது, திரைக்கதையில் எழுபது சதவிகிதம் முடிந்துவிடுகிறது.
அதுவே, இக்கதையின் முக்கியமான திருப்புமுனை. அதனால், ஒரு கமர்ஷியல் படத்திற்கான திரைக்கதை இலக்கணத்திற்குள் இப்படத்தினை நிச்சயமாக அடக்க முடியாது.
மீண்டும் மீண்டும் ஒரேமாதிரியான காட்சிகளைப் பார்ப்பது ரசிகர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தக் கூடும். நிச்சயமாக அது இப்படத்தின் பெரிய மைனஸ் ஆகவும் உள்ளது.
அதேநேரத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மனிதர்களின் வாழ்க்கையை நேரில் பார்த்த உணர்வை மிக அதிகமாகவே ஏற்படுத்துகிறது இப்படம். அதுவே இதன் சிறப்பு.
பசுக்களை காளைகளோடு இயற்கையாக இணையவிடுவதே துடிப்பான கன்றுகள் பிறக்க வழி வகுக்கும் என்ற கருத்து நெடுங்காலமாக முன்வைக்கப்படுகிறது.
‘கருவுறுதல் மட்டுமன்றி கலவியின் திருப்தியையும் அந்த இரு உயிர்கள் அனுபவிக்கின்றன; ஊசியின் மூலமாகச் செயற்கையாகக் கருவை உண்டாக்கி அந்த இன்பத்தைத் தடுக்க நமக்கு என்ன உரிமை உள்ளது’ என்ற கருத்தை முன்வைக்கிறது ‘வெப்பம் குளிர் மழை’.
அதன் வழியே நாயகன் நாயகியின் பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது.
முன்னோர்கள் சொல்லிச் சென்ற இந்தக் கருத்தினை, இன்று மருத்துவர்கள் தொடங்கி மக்கள் நலனில் அக்கறை கொண்ட பலரும் பகிர்ந்து வருகின்றனர். திருமணமான சில மாதங்களிலேயே குழந்தைப்பேறு இல்லையே என்று கவலைப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வரும் இக்காலத்தில், அது அத்தியாவசியமான ஒன்றாகவும் உள்ளது.
ஆதலால், கருவுற விரும்பும் தம்பதியரோடு குழந்தைகளைப் பெற்றெடுத்தவர்களும் கூடக் காண வேண்டிய படம் இது. ‘அறிவியலுக்கு எதிராக உள்ளதே இக்கருத்து’ என்பவர்கள் இந்தப் படம் ஓடும் தியேட்டர் பக்கம் ஒதுங்காமல் இருப்பது நல்லது!
- பா.உதய்