’சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் இப்போது ’வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். ’ஜெய்பீம்‘ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இந்த படத்தை ‘லைகா’ நிறுவனம் தயாரிக்கிறது.
ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதி வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது
இந்தப் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’தலைவர் 171’ படத்தில் நடிக்கிறார் ரஜினி. அவருக்கு மெகா ஹிட் படமாக அமைந்த ‘ஜெயிலர்’ படத்தை வழங்கிய சன் பிக்சர்ஸ், இந்த படத்தை தயாரிக்கிறது.
படத்தின் பெயர், அடுத்த மாதம் 22-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
’தலைவர் 171’ படத்தில் ரஜினிகாந்த்தின் கேரக்டர் குறித்த தகவல் இணையத்தில் பரவிவருகிறது.
ரஜினிகாந்த், இந்தப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தங்க கடத்தல்காரராக நடிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்த படத்துக்கு ‘கழுகு’ என ‘டைட்டில்’ வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
இதே பெயரில் ரஜினிகாந்த் நடித்த படம் 1981-ம் ஆண்டு வெளியானது. பஞ்சு அருணாசலம் தயாரித்த ‘கழுகு’ படத்தில் ரதி கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த படத்துக்காக ‘ஸ்பெஷல்’ பேருந்து ஒன்றை பஞ்சு அருணாசலம் உருவாக்கி இருந்தார். குற்றாலம், தென்காசி பகுதியில் பெரும்பகுதி ‘ஷுட்டிங்’ நடைபெற்றது.
போலி சாமியாரின் தில்லுமுல்லுகளை வெளிக்கொணர்ந்த ‘கழுகு’ திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
- பாப்பாங்குளம் பாரதி.