முழுக்கப் பெண்களை மட்டுமே மையமாகக் கொண்ட படங்களை வரிசைப்படுத்தினால் ‘மகளிர் மட்டும்’, ‘சினேகிதியே’ என்று மிகச்சிலவே நம் நினைவுக்கு வரும்.
ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிகளில் அது போன்ற படங்கள் கணிசம். அவை வெவ்வேறு வகைமைகளிலும் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பு.
அந்த வரிசையில் தபு, கரீனா கபூர், க்ரிதி சனோன் மூவரையும் சம அளவில் திரையில் முன்னிலைப்படுத்தியது ‘க்ரூ’ படத்தின் ட்ரெய்லர்.
அவர்களது கவர்ச்சிகரமான தோற்றமும், குற்றப் பின்னணியில் அமைந்த காட்சியமைப்பும், இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்களும் இப்படத்திற்கான வணிக வெற்றிக்கு உத்தரவாதம் தந்தன.
சரி, இந்த படம் எப்படியிருக்கிறது? சாதாரண ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தைத் தருகிறதா?
தங்கம் கடத்தல்!
இந்தியாவின் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான விஜய் வாலியா (சாஸ்வதா சாட்டர்ஜி), தனது குழுமத்தைச் சேர்ந்த எந்த நிறுவனத்திலும் பணப் பிரச்சனைகள் இல்லை என்று ஊடகங்களில் பேட்டி அளித்து வருகிறார்.
காரணம், பல மாதங்களாகச் சம்பளம், தினசரிப் படி மற்றும் இதர பண பலன்கள் என்று பலவற்றை அந்நிறுவனம் நிலுவையில் வைத்திருப்பது தான்.
கோஹினூர் ஏர்லைன்ஸில் ஏர் ஹோஸ்டஸ் ஆகப் பணியாற்றுகின்றனர் கீதா சேதி (தபு), ஜாஸ்மின் கோஹ்லி (கரீனா கபூர்), திவ்யா ராணா (க்ரிதி சனோன்) ஆகியோர்.
மூவருமே வெவ்வேறு வகையில் பணப் பிரச்சனைகளால் தினசரி வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் அல்லாடுகின்றனர்.
அல் புர்ஜ் செல்லும் விமானத்தில் இவர்களைத் தவிர்த்து இன்னும் நான்கு பேர் பயணிகள் சேவைப் பிரிவில் பணியாற்றுகின்றனர். அவர்களில் சூப்பர்வைசர் ராஜ் வன்ஷியும் ஒருவர்.
ஒருமுறை அல் புர்ஜ் செல்லும்போது, விமானத்திலேயே ராஜ் வன்ஷி இறந்து போகிறார். அதனை உறுதிப்படுத்துவதற்கு முன்பாக கீதா, ஜாஸ்மின், திவ்யா மூவரும் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முற்படுகின்றனர்.
அப்போது, தங்கக் கட்டிகளை மார்போடு சேர்த்துக் கட்டி அவர் எடுத்து வந்திருப்பதைக் காண்கின்றனர்.
அந்த தங்கத்தைத் திருடலாம் என்கிறார் ஜாஸ்மின். ஆனால் கீதாவும் திவ்யாவும் அதற்கு உடன்படுவதில்லை.
இறுதியில், ராஜ் வன்ஷியின் உடலை விமான நிலையத்தில் இருக்கும் சுங்க அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கின்றனர். விஷயம் ஊடகங்களில் வெளியாக, பிரச்சனை பூதாகரமானதாக மாறுகிறது. விமானநிலையத்தில் காவல் பலப்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், ராஜ் வன்ஷியைப் போல நாமே அந்த தங்கத்தைக் கடத்தினால் என்ன என்ற யோசனை ஜாஸ்மின், கீதா, திவ்யா மூவருக்கும் எழுகிறது.
ராஜ் வன்ஷியின் மொபைல் போனை திருடிய ஜாஸ்மின், அதன் மூலமாக அவருக்குத் தங்கம் தந்த நபரைப் பிடிக்கிறார். அவரும் அதே நிறுவனத்தில் பணியாற்றுபவர் தான்.
மூவரும் அந்த நபரை நேரில் சந்திக்கின்றனர். தாங்களும் அது போன்று தங்கம் கடத்துவதில் ஈடுபடத் தயார் என்கின்றனர். அதனைச் சாதிக்கவும் செய்கின்றனர்.
ஒருகட்டத்தில் மூவரது கைகளில் பணம் தாராளமாகப் புழங்குகிறது. அது இதர பணியாளர்களிடத்தில் புகைச்சலை உண்டுபண்ணுகிறது.
இந்த நிலையில், திடீரென்று ஒருநாள் அவர்கள் தங்கம் கடத்தும் தகவல் சுங்க அதிகாரிகளுக்குக் கிடைக்கிறது.
விமான நிலையத்தில் அவர்கள் மூவரும் விசாரிக்கப்படுகின்றனர். ஆனால், தங்கம் கடத்தியதற்கான சான்றுகள் ஏதும் இல்லாத காரணத்தால் அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
அந்த சம்பவத்திற்குப் பிறகு, தங்களை மாட்டிவிட்டது யார் என்று மூவரும் கண்டறிகின்றனர்.
அதேநேரத்தில், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குத் தங்கத்தைக் கடத்துவதே செய்திகளில் இடம்பெற்றுவரும் நிலையில், இங்கிருந்து அல் புர்ஜுக்கு தங்கத்தை ஏன் கடத்த வேண்டும் என்பதற்கான காரணத்தையும் அவர்கள் அறிகின்றனர்.
அதனாலேயே, கோஹினூர் ஏர்லைன்ஸின் தங்களைப் போன்ற பல பணியாளர்கள் உரிய பண பலன்களைப் பெற முடியாமல் அவதிப்படுவதற்குக் காரணம் என்பதைத் தெரிந்தவுடன் அவர்கள் கொதிப்பு நிலையை அடைகின்றனர்.
அதன் விளைவாகத் தாங்கள் கடத்திய தங்கத்தை அல் புர்ஜ் சென்று திருடத் திட்டமிடுகின்றனர்.
அதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா என்று சொல்கிறது ‘க்ரூ’வின் மீதி.
சமமான முக்கியத்துவம்!
தொண்ணூறுகளில் தபுவும், 2000 ஆண்டுவாக்கில் கரீனா கபூரும், 2020களில் க்ரிதி சனோனும் இந்தித் திரையுலகைக் கலக்கியவர்கள் என்பது நாம் அறிந்ததே. அவர்களது திரையுலக அனுபவத்திற்கு முக்கியத்துவம் தந்து ஒரு கதையை யோசித்த வகையில் தனித்துவம் பெறுகிறது ‘க்ரூ’.
ரசிகர்கள் விரும்பும் வகையில் அவர்களுக்கான காட்சிகளை வடிவமைத்ததோடு, திரையில் அவர்களைக் கவர்ச்சிகரமாகவும் காட்டியிருக்கிறது இத்திரைப்படம். அதனை எதிர்பார்த்து திரையரங்குக்குச் சென்றவர்களை ‘க்ரூ’ ஏமாற்றவில்லை. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
தபு, கரீனாவின் முகங்களில் மேக்கப் அதிகம் அப்பியிருப்பது சில காட்சிகளில் அசூயையை உருவாக்குகிறது. அதேநேரத்தில் அவர்களது நகைச்சுவை உணர்வும், காட்சியின் தன்மையை உயர்த்திக் காட்டும் நடிப்பும் அதனை மறக்கடிக்கிறது.
வெறுமனே கவர்ச்சிப் பதுமையாக மட்டுமல்லாமல் வித்தியாசமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் க்ரிதி சனோன். இதிலும் அப்படியொரு வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.
இவர்கள் தவிர்த்து ராஜேஷ் சர்மா, கபில் சர்மா, சாஸ்வதா சாட்டர்ஜி உட்பட சுமார் ஒரு டஜன் பேர் இதில் முகம் காட்டியிருக்கின்றனர்.
அவர்களில் முக்கியமானவர் இளம் உள்ளங்களைக் கவர்ந்த தில்ஜித் தோசன்ஞ். இரண்டொரு காட்சிகளில் வந்தாலும், அவரது இருப்பு ரசிகர்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
மூன்று நாயகிகளைச் சம அளவில் முன்னிலைப்படுத்திக் காட்சிகளை அமைத்திருக்கிறது எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கும் நிதி மெஹ்ரா, மெகுல் சூரி இணை.
அது கமர்ஷியல் ரசனைக்கு ஏற்றதாக இருக்கிறது என்பதை திரையரங்கில் வெளிப்படும் ஆரவாரத்தில் இருந்து உணர முடிகிறது.
சாஸ்வதா ஏற்ற தொழிலதிபர் பாத்திரத்தின் பெயர் விஜய் வாலியா என்று குறிப்பிட்டிருப்பது, இக்கதையில் உண்மை நிகழ்வுகள் எத்தனை சதவிகிதம் கலந்துள்ளன என்பதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிடுகிறது. ஏர்லைன்ஸ் நிறுவனம் திவால் ஆவது போன்ற தகவல்கள் நாட்டுநடப்பைப் பிரதிபலிப்பதாக உள்ளன.
அதேநேரத்தில், கிளைமேக்ஸ் காட்சிகள் அவசர அவசரமாக முடிவை நோக்கி நகர்த்தப்பட்டிருப்பது திரைக்கதையின் மிகப்பெரிய மைனஸ்.
ஜான் ஸ்டூவர்ட் எடூரியின் பின்னணி இசை, பெரும்பாலான காட்சிகளில் விறுவிறுப்பை அதிகப்படுத்த உதவியிருக்கிறது.
பாடல்களைப் பொறுத்தவரை தில்ஜித், பாதுஷா, ராஜ் ரஞ்சோத், விஷால் மிஷ்ரா, அக்ஷய் – ஐபி, பார்க் – ரோகித் ஆகியோர் தங்களது பங்களிப்பைத் தந்துள்ளனர்.
அவற்றில் ’சோளி கே பீச்சே க்யா ஹை’, ‘சோனா இத்னா சோனா ஹை’ பாடல்களின் ரீமிக்ஸ் நம்மை ஈர்க்கின்றன.
விமானப் பயணத்தைக் காட்டும் காட்சிகளில் திஷா டேயின் தயாரிப்பு வடிவமைப்பு நம்மை ஈர்க்கிறது.
போலவே, ஒரு விளம்பரப் படம் போலக் கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது அனுஜ் ராகேஷ் தவானின் ஒளிப்பதிவு.
பாதியில் தொடங்கிச் சட்டென்று முடியும் காட்சிகளின் வடிவத்தைச் சரியாக உள்வாங்கியிருக்கிறது மனன் சாகரின் படத்தொகுப்பு. அது படத்தின் நீளத்தை வெகுவாகக் குறைத்துள்ளது.
‘லூட்கேஸ்’ எனும் காமெடி த்ரில்லரை தந்து நம் மனம் கவர்ந்த ராஜேஷ் கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். திரையரங்கில் பார்வையாளர்கள் சோர்வை வெளிப்படுத்தாத வகையில் காட்சிகளை ஆக்கியிருப்பது, அவரது திறமையைப் பறை சாற்றுகிறது.
‘க்ளிஷே’ அதிகம்!
‘க்ரூ’ திரைக்கதையில் ‘க்ளிஷே’ அதிகம். அதுவே, அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான் இருக்குமென்ற ஊகிப்புக்கு வழி வகுக்கிறது.
ஆனால் தபு, கரீனா, க்ரிதி சனோன் ஆகியோரது இருப்பு அதனை மறக்கடித்துவிடும் என்று நம்பியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் கிருஷ்ணன்.
அதற்கேற்ற வகையில் காட்சியாக்கத்தைக் கையாண்டதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
இப்படத்தில் லாஜிக் மீறல்கள் அதிகம். குறிப்பாக, அல் புர்ஜில் நடப்பதாகக் காட்டப்படும் கிளைமேக்ஸ் காட்சி கொஞ்சம் கூட மனதில் ஒட்டவே இல்லை.
பிரமாண்டமான செட், விஎஃப்எக்ஸ் பயன்பாடு மற்றும் சண்டைக்காட்சி வடிவமைப்பை அக்காட்சியில் புகுத்தியிருந்தால், படத்தின் பட்ஜெட் எக்குதப்பாக எகிறிவிடும் என்று தயாரிப்பு தரப்பு கருதியிருக்கலாம்.
அதனைச் சரி செய்திருந்தால், இப்படத்தின் தரம் இன்னொரு உயரத்தை எட்டியிருக்கும்.
அந்தக் குறையைக் கடந்துவிட்டால், இரண்டு மணி நேரம் பொழுதுபோக்குவதற்கு ஏற்ற படமாக இந்த ‘க்ரூ’ நிச்சயம் இருக்கும்.
படத்தில் தபு, கரீனா பேசும் ஆபாச வசனங்கள், அவர்களது கவர்ச்சிகரமான தோற்றம் போன்றவை சிலருக்கு அபத்தமாகத் தென்படலாம்.
ஆனால், தங்களது இலக்கு அவர்கள் இல்லை என்பதில் மிகுந்த தெளிவோடு செயல்பட்டிருக்கிறது ‘க்ரூ’ குழு. அந்த தெளிவைப் பார்வையாளர்களும் பெற, ‘க்ரூ’ ட்ரெய்லரை ஒருமுறை பார்த்துவிட்டு தியேட்டருக்குச் செல்வது நல்லது!
– மாபா