’சித்தி’ தொலைக்காட்சித் தொடர் மூலமாக சின்னத்திரையில் கால் பதித்த பாலாஜி, அந்த நாடகத்தில் டேனியல் என்ற வேடத்தில் நடித்திருந்தார்.
வில்லனாக இவரது நடிப்பு, பட்டிதொட்டி எங்கும் இவரை பிரபலமாக்கியது. இதனால், அவரை டேனியல் பாலாஜி என்றே அழைத்தனர். உடல்மொழி, அவரது தனித்துவமாக இருந்தது.
டேனியல் பாலாஜி, தொடக்கத்தில் சிறுசிறு பாத்திரங்களில் சினிமாவில் நடித்து வந்தார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, சூர்யா ஹீரோவாக நடித்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் என்ற காவல்துறை அதிகாரி பாத்திரத்தில் நடித்தார்.
கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.
தொடர்ந்து பொல்லாதவன், வை ராஜா வை, அச்சம் என்பது மடமையடா, பைரவா, வடசென்னை, பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லனாகவே நடித்துள்ளார்.
இந்த நிலையில், டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48.
டேனியல் பாலாஜியின் மறைவு திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
– பாப்பாங்குளம் பாரதி.
#டேனியல்_பாலாஜி #கவுதம்_வாசுதேவ்_மேனன் #சூர்யா #ஸ்ரீகாந்த் #கமல்ஹாசன் #சித்தி காக்க காக்க #வேட்டையாடு_விளையாடு #Actor_Daniel_Balaji #gowtham_vasudev_menan #surya #srikanth #kamalhassan #vettaiyadu_vilaiyadu