ஆடு ஜீவிதம் தருவது மாறுபட்ட அனுபவமா, ஏமாற்றமா?

மலையாளத் திரையுலகில் மம்முட்டி, மோகன்லாலை அடுத்து தற்போது துல்கர் சல்மான், நிவின் பாலி, டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன் என்று பல நட்சத்திரங்களின் படங்கள் பிறமொழி ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. அவர்களுக்கு முன்னதாகவே தெலுங்கு, தமிழ், இந்திப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் பிருத்விராஜ்.

அவரது படத்தில் வித்தியாசமானதொரு அம்சம் நிச்சயம் இருக்குமென்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பினை இன்று வரை பூர்த்தி செய்து வருபவர்.

அப்படியொரு நட்சத்திரம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர் பிளெஸ்ஸி உடன் ‘ஆடு ஜீவிதம்’ படத்தில் இணைகிறார் என்றபோது பலரது புருவங்கள் உயர்ந்தன. அப்படத்தின் ட்ரெய்லர் சர்வதேசத் தரத்தில் இருந்ததைக் கண்டு ஆச்சர்யம் பன்மடங்கானது.

இதோ, இப்போது ‘ஆடு ஜீவிதம்’ படமானது மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தியிலும் ‘டப்பிங்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. எப்படிப்பட்ட அனுபவத்தை நமக்குத் தருகிறது இப்படம்?!

பிளெஸ்ஸியின் உழைப்பு!

மலையாளத்தில் வெளியான ‘ஆடு ஜீவிதம்’ என்ற நாவல், திக்கு தெரியாத அரேபியப் பாலைவனத்தில் மொழி புரியாமல் அடிமை வாழ்வில் உழலும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்பனுவங்களைச் சொன்னது.

பென்யாமின் இதனை மலையாளத்தில் எழுதினாலும், அப்படைப்பு உலகம் முழுக்கப் பல மொழிகளில் ஆக்கம் பெற்று புகழை அடைந்தது.

அதற்குக் காட்சி வடிவம் கொடுக்க வேண்டுமென்ற ஆவலுடன், 2008இல் இப்படத்திற்கான பணிகளைத் தொடங்கினார் இயக்குனர் பிளெஸ்ஸி. அதற்காக நடிகர் பிருத்விராஜையும் அணுகியிருக்கிறார்.

தன்மாத்ரா, காழ்ச்சா போன்ற படங்களை மலையாளத்தில் தந்திருக்கும் பிளெஸ்ஸி, சசிகுமாரின் இரண்டாவது படமான ‘ஈசன்’னில் அபிநயாவின் தந்தையாக நடித்திருக்கிறார் எனும் தகவல் அவரை நம் மனதுக்கு நெருக்கமாக்கும்.

ஆடு ஜீவிதம் கதை திரை வடிவம் பெறப் பெரும் உழைப்பும் பொருட்செலவும் ஆகுமென்ற யதார்த்தம், பிளெஸ்ஸியின் கனவு நனவாவதைத் தள்ளிப்போட்டது.

2016 வாக்கில் தயாரிப்பாளர், இதர தொழில்நுட்பக் கலைஞர்கள், படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி போன்றவற்றுடன் தனது கனவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார் பிளெஸ்ஸி. சில ஆண்டுகள், சில மாதங்கள் இடைவெளியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சவுதி அரேபியா, ஜோர்டான் போன்ற மத்திய தரைக்கடல் பகுதி பாலைவனங்களில் களமிறங்கி முழுமூச்சாகப் படப்பிடிப்பினை நிறைவு செய்வதே பிளெஸ்ஸியின் திட்டமாக இருந்திருக்கிறது. ஆனால் கொரோனா கால ஊரடங்கு அதனை மொத்தமாய் சிதைத்தது.

படப்பிடிப்பும் நடத்த முடியாமல், ஊர் திரும்பவும் முடியாமல் அவதிப்பட்டது ‘ஆடு ஜீவிதம்’ படக்குழு. பின்னர் நிலைமை சீராகி, ஒருவழியாக எல்லாப் பணிகளும் நிறைவுற்று தற்போது திரையைக் கண்டிருக்கிறது இப்படம்.

‘ஆடு ஜீவிதம்’ தரும் காட்சியனுபவத்திற்கும் இந்த தகவல்களுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கலாம். உண்மையைச் சொன்னால், அந்த தகவல்களே இப்படத்தினை நோக்கி நம் கால்களை நகர்த்துகின்றன.

கொடுமையான வாழ்க்கை!

ஆயிரமாயிரம் கனவுகளோடு, நஜீப் முகமது (பிருத்விராஜ்) எனும் சாதாரண மனிதர் பிழைப்புக்காக சவுதி அரேபியா செல்கிறார். ‘கம்பெனி வேலை’ என்று சென்றவரைப் பாலைவனத்தில் ஆடுகளையும் ஒட்டகங்களையும் மேய்க்கச் சொல்கிறார் முதலாளி. அது மட்டுமல்லாமல் அங்கு எந்த வசதியுமே இல்லை.

உணவு, உடை, தங்குமிடம் போன்ற அத்தியாவசியத் தேவைகள் மட்டுமல்லாமல் தண்ணீர் குடிப்பது, குளிப்பது, தூங்குவது என்று உயிர் வாழ்வதற்கான அவசியங்களும் கூடக் கானல் நீராகிப் போன சூழல்.

தப்பித்துச் செல்லலாம் என்று பார்த்தால், வழி ஏதும் தெரியாமல் மீண்டும் மீண்டும் முதலாளியிடம் மாட்டி அவதிக்குள்ளாகிறார் நஜீப். கால் எலும்பு உடைந்து, முகம் கருத்து, தாய்மொழி மறந்து ஒரு நடைபிணமாக மாறுகிறார்.

ஒருநாள், தன்னுடன் சவுதி அரேபியாவுக்கு வந்த உறவினர் ஹக்கீமை (ராகுல்) தற்செயலாகச் சந்திக்கிறார். ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இப்ராஹிம் காதிரி (ஜிம்மி ஜீன் லூயிஸ்) அவருடன் வந்திருக்கிறார்.

அடிமை வாழ்க்கையில் இருந்து விடுதலைப் பெற, காதிரி நம்மை வழிநடத்துவார் என்று நஜீப்பிடம் கூறுகிறார் ஹக்கீம். அவர்கள் விருப்பம் போலவே, ஒரு நன்னாள் வருகிறது.

நஜீப் வேலை செய்யும் முதலாளியின் மகள் திருமணத்தில் கலந்துகொள்ளச் செல்கிறார் அங்கிருக்கும் சூப்பர்வைசர். ஹக்கீம் வேலை பார்க்குமிடம் உட்பட அப்பாலைவனத்தில் உள்ள அனைத்து கூடாரங்களிலும் அதுவே நிகழ்கிறது.

அன்றைய தினம் காதிரி, ஹக்கீம், நஜீப் மூவரும் பாலைவனத்தில் சூரியன் மறையும் திசை நோக்கி நடக்கத் தொடங்குகின்றனர்.

பல கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும் அந்தப் பாலைவனத்தை ஒரே நாளில் நடந்து கடக்க முடியாது என்பதே யதார்த்தம்.

அதனை மூவரும் எதிர்கொண்டார்களா? பசி, தாகம், தூக்கத்தை இழந்து சுதந்திரக் காற்றைச் சுவாசித்தார்களா என்று சொல்கிறது ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் மீதி.

இரவு வேளையில் பிரபஞ்சத்தின் பிம்பத்தைப் பிரதிபலிக்கும் நீரில் முகம் புதைத்து நஜீப் தண்ணீர் அருந்துவதில் இருந்து ‘ஆடு ஜீவிதம்’ திரைக்கதை தொடங்குகிறது. அருகில் நீர் அருந்தும் ஒட்டகங்களே, அவரது வாழ்வு எப்படிப்பட்டது என்பதை நொடியில் நமக்குச் சொல்லிவிடுகிறது.

அப்படியிருந்தும், படம் முழுக்க அந்தப் பாலையில் நஜீப் எப்படியெல்லாம் கொடுமைகளை அனுபவித்தார் தெரியுமா எனும் ரேஞ்சில் பல காட்சிகளை அடுக்கியிருக்கிறார் இயக்குனர் பிளெஸ்ஸி. அது படத்தின் நீளத்தை அதிகப்படுத்தியிருப்பதோடு, நம் மனதில் வெறுமையையும் நிறைக்கிறது.

ஏன் இந்த சோதனை?

சோகமான தருணங்களில் ‘ஆண்டவா ஏன் இப்படி சோதிக்கிற’ என்று மன்றாடுவது சாதாரண மனிதர்களின் இயல்பு. இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் அப்படித்தான் இருக்கின்றன.

உயிர் பிழைத்து வாழ்வதே பெரும்சாதனை என்றாகிப்போன வாழ்வைச் சொல்லும் ‘சர்வைவல்’ கதைகளை திரையில் ரசிக்க, அவற்றில் கொஞ்சமாய் நகைச்சுவை இருந்தாக வேண்டும். இந்தப் படத்தில் அது மருந்துக்குக் கூட இல்லை.

அப்படியிருந்தும் ‘ஆடு ஜீவிதம்’ படத்தை ரசிக்கக் காரணமாக இருப்பது திரையில் விரியும் நஜீப்பின் பாலைவன வாழ்க்கையனுபவங்கள். அது மட்டுமே இப்படத்தின் யுஎஸ்பி.

இந்தப் படத்தில் கண்ணில் ஒற்றிக்கொள்ள வைக்கும் பிரேம்களை தந்து நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறார் ஒளிப்பதிவாளர் சுனில் கே.எஸ். பல கட்டங்களாகப் படப்பிடிப்பு நடந்த காரணத்தால், வேறு சில ஒளிப்பதிவாளர்களின் பங்களிப்பும் இப்படைப்பில் உள்ளது.

படத்தொகுப்பாளர் ஃபின் ஜார்ஜ் வர்கீஸ் உழைப்புடன் ஸ்ரீகர் பிரசாத்தின் பங்களிப்பும் சேர்ந்து, இப்படத்தினை நேர்த்தியானதாக மாற்றியிருக்கிறது.

இன்னும் கலை இயக்குனர் பிரசாந்த் மாதவ், ஒப்பனையாளர் ரெஞ்சித் அம்பாடி, ஆடை வடிவமைப்பாளர் ஸ்டெபி சேவியர் உள்ளிட்ட பல கலைஞர்களின் உழைப்பு கனகச்சிதமான காட்சியாக்கத்திற்கு துணையாக உள்ளன.

பாலைவனத்தில் பறவைகளின் இருப்பினைக் காட்டுவது உட்பட சில இடங்களில் விஎஃப்எக்ஸ் நுட்பத்தின் தரம் நம்மை எரிச்சல்படுத்துகிறது. அதனை ஈடு செய்யும்விதமாக, ‘பத்திக்காத தீயாய்’ பாடலின் முடிவில் ஒரு காட்சி வருகிறது.

காதலில் உருகும் நாயகனும் நாயகியும் ஆற்றில் மூழ்குவதையும், அந்நினைவுகளை அசை போடுவதில் இருந்து நாயகன் மெல்ல விடுபடுவதையும், ஆற்று நீர் வற்றி பெரும் மணல்பரப்பாக மாறுவதாகத் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர். அந்தக் காட்சியில் விஎஃப்எக்ஸ் குழுவின் உழைப்பு நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.

‘பத்திக்காத தீயாய் எனைச் சூழ்ந்தாய்’ பாடலில் சினேகனின் வரிகளோடு இணைந்து காதல் உணர்வைப் பெருக்குகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். போலவே, இறையுணர்வை நம் நெஞ்சத்தில் நிறைக்கும்படியாக அமைந்துள்ள ‘பெரியோனே’ பாடல் படம் முழுக்க ஆங்காங்கே வந்து செல்கிறது.

இந்தப் படத்திற்காக ரஹ்மான் தந்திருக்கும் பின்னணி இசையில் எளிமை அதிகம்.

அது காட்சிகளின், கதாபாத்திரங்களின் தன்மையை மிகச்சரியாகப் பிரதிபலிப்பதோடு நம்மைச் சட்டென்று உள்ளிழுத்துக் கொள்கிறது.

பாலைவனத்தில் தோற்றமே மாறிப் போவதாய் காட்டுவதில் தொடங்கி வீங்கிச் சீழ் வடியும் கால்களுடன் தள்ளாடி நடப்பது வரை, நஜீப் எனும் பாத்திரமாக மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறார் பிருத்விராஜ். அந்த உழைப்பு நிச்சயம் அவரைத் தேசிய விருது விழா மேடைக்கு அழைத்துச் செல்லும்.

இப்படத்தில் நாயகி அமலா பாலுக்கான இருப்பு மிகக்குறைவு. ஆனாலும், முன்பாதியில் அவருக்கும் பிருத்விராஜுக்குமான காதல் காட்சிகளே திரைக்கதையின் இறுக்கத்தைக் குறைக்க உதவியிருக்கின்றன.

பிருத்விராஜின் தாயாக வரும் ஷோபா மோகன் வழக்கமான அம்மாவாகத் திரையில் தெரிகிறார். உறவினராக வரும் ராகுல், பின்பாதியில் மென் தாடியும் மீசையுமாகத் தோன்றும்போது கண்ணீரை வரவழைக்கிறார். அதேபோல காதிரியாக வரும் ஜிம்மி ஜீன் லூயிஸின் நடிப்பும் நம்மைத் திரையுடன் கட்டிப் போடுகிறது.

இவர்கள் தவிர்த்து பாலைவனத்தில் நாயகனை வேலை வாங்குபவர்கள், கிளைமேக்ஸில் அவருக்குப் புகலிடம் தரும் சவுதி அரசு ஊழியர்கள் என்று சிலர் படத்தில் தலைகாட்டியிருக்கின்றனர்.

படம் தரும் அனுபவம்!

இயக்குனர் பிளெஸ்ஸி தத்துவார்த்த ரீதியில் சில காட்சிகளை இப்படத்தில் தந்திருக்கிறார். சில இடங்களில் பெரிதாக விளக்கமளிக்காமல் அப்படியே விட்டுச் சென்றிருக்கிறார். இப்ராஹிம் காதிரி பாத்திரம் பாலைவனத்தின் நடுவே எப்படி மாயமானது என்பதும் அதிலொன்று.

நாயகன் பாலைவனத்தில் வேதனையில் தவிப்பதையே திரைக்கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை காட்டுகிறார் இயக்குனர் பிளெஸ்ஸி.

அந்த வலிகளின் தகிப்பை நாம் மறக்கும் அளவுக்குப் படத்தில் சுவாரஸ்யமான விஷயங்களே இல்லை.

என்னதான் உலகப்படங்களை ரசிக்கக்கூடிய ரசிகர்களாக இருந்தாலும், அந்த வெறுமை நிச்சயம் எரிச்சலைத் தரும். ‘ஆடு ஜீவிதம்’ அந்த தடையைக் கடக்க முடியாமல் தள்ளாடுகிறது.

சிறுகதை, நாடகம், நாவல் வடிவில் இருக்கும் படைப்புகள் திரைப்படமாக மாறும்போது, ஒரிஜினலுக்கு நியாயம் சேர்த்திருக்கிறதா என்ற கேள்வி கட்டாயம் எழும்.

இயக்குனர் பிளெஸ்ஸி அதனைக் கருத்தில் கொண்டு, நாவலாசிரியரின் கற்பனையைக் குலைக்காமல் உலகத்தரத்திலான திரைமொழியின் வழியே அக்கதைக்கு உருவம் தர முயன்றிருக்கிறார்.

அதனை ஏற்பவர்கள் மட்டுமே இறுதிக்காட்சி வரை திரையரங்கில் அமர்ந்திருப்பார்கள். அல்லாமல் வெறுமனே திரைப்படத்தில் இருந்து உத்வேகத்தை மட்டுமே பெற வேண்டுமென்று வந்தவர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தையே தரும்!

– உதய் பாடகலிங்கம்

aadu jeevithamPrithvirajThe Goat Lifeஆடு ஜீவிதம்இயக்குனர் பிளெஸ்ஸிஈசன்ஏ.ஆர். ரஹ்மான்கொரோனாதுல்கர் சல்மான்நடிகர் பிருத்விராஜ்நஜீப் முகமதுநாவல்நிவின் பாலிபென்யாமின்மம்முட்டிமோகன்லால்விமர்சனம்ஷோபா மோகன்
Comments (0)
Add Comment