பட்டம்மாள் இசையைத் தென்றலுக்கு ஒப்பிடவேண்டும்; அவ்வளவு சுகம்!

கவிஞர் நா. விச்வநாதன்

காஞ்சிபுரம் ‘தாமல்’ குடும்பம் இசைக் குடும்பம். அலமேலு என்ற பட்டா என்ற பட்டம்மாளின் தந்தை கிருஷ்ணசாமி தீக்ஷிதர் அப்பைய தீக்ஷிதர் பரம்பரை என்று பெருமை பேசுவாராம். அந்தக்கால வழக்கப்படி பெண்கள் பொதுவெளியில் பாடுவதற்கு அனுமதி இல்லை. ஆனால், நான்கு வயதிலேயே பாட ஆரம்பித்து விட்டார் பட்டம்மாள்.

பெண்களின் எந்த வித்தையும் வீட்டுக்குள் மட்டுமே. பட்டம்மாளின் சகோதரர்கள் மூவருமே பாடகர்கள். டி.கே.ரெங்கநாதன், டி.கே.ஜெயராமன், டி.கே.நாகராஜன். பட்டம்மாளுக்கு முறையான இசைப்பயிற்சி அளிக்கப்படவில்லை. கேள்வி ஞானம்தான். பூஜையறையில் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பதோடு சரி. பூஜை ஸ்வாமிகள்தாம் கேட்கணும்.

பிரபல எழுத்தாளரும் சமூக சேவகியுமான வை.மு.கோதைநாயகியம்மாள் தலையிட்டு பட்டம்மாளை வெளியுலகத்திற்குக் கொண்டுவந்தார்.

ஹெச்எம்வி, கொலம்பியா ரிக்கார்டு கம்பெனிக்கு இசைப்பதிவுக்கு ஏற்பாடாயிற்று. நல்ல குரல்வளம் என்பதைக் கண்ட ரிக்கார்ட் கம்பெனிகள் பட்டம்மாளின் பாடல்களைப் பதிவுசெய்ய போட்டி போட்டன.

பாபநாசம் சிவன் பாடல்கள், மகாகவி பாரதியார் பாடல்கள், கோபாலகிருஷ்ண பாரதியின் பாடல்கள், முத்துதாண்டவர் பாடல்களையும் பதங்களையுமே தேர்ந்தெடுத்தார்.

தமிழிசை இயக்கம் தோன்றாத காலத்திலேயே அதற்கு முன்னரும் தமிழிசையைப் பிரபலப்படுத்தினார். இதற்கு தந்தையார் எதிர்ப்பு இருந்தது. புகைப்படம் எடுத்துக் கொண்டால் ஆயுள் குறையும் என்பதுபோல குரல் பதிவுசெய்தால் குரல் போய்விடும் என்ற நம்பிக்கை.

ஆண்கள் மட்டுமே ராகம் தானம் பல்லவி பாடிக் கொண்டிருந்தனர். பெண்களால் முடியாது. பாடவும் கூடாது என்ற நிலை.

ஒரு ராகத்தை எடுத்துக் கொண்டு விஸ்தாரமாய்ப் பாடி சில பாடல்ளை மட்டுமே பாடுவது. ராகம் சார்ந்த ஆழ்ந்த ஞானம், தாளக்கணக்கும் துல்லியமாக இருக்கவேண்டும்.

காலப்பிரமாணம் மத்தியம கால சௌக்கம் துரிதம். பட்டம்மாளின் பிடி வேறு. குரல் வீணை இசையை ஒத்தது. ராகம்தானம் பல்லவியில் அபார வித்தை காட்டினார். “பட்டா”வின் ராகம்தானம் பல்லவி என்றானது. உஸ்தாத் படேகுலாம் அலிகானை அசரவைத்தது.

“தேச சேவை செய்ய வாரீர்..” என்று ‘தியாகபூமி’ சினிமாவில் அமர்க்களப்படுத்தியது.

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, வெற்றி எட்டுதிக்கு, நாம் இருவர், தேசபக்திப் பாடல்களையும் பக்திப் பாடல்களையுமே பாடுவேன் என்று உறுதியாக இருந்தார்.

‘வேதாள உலகம்’ படத்தில் “சின்னஞ்சிறு கிளியே.” பாடலை அருமையாகப் பாடியிருந்தார் பட்டம்மாள். இதை விஞ்ச இன்னும் யாரும் வரவில்லை.

சுத்தானந்த பாரதியின் “எப்படிப் பாடினரோ..” கர்நாடக தேவகாந்தாரியை வேறு யாராலும் தொடமுடியவில்லை.

“ஆடுவோமே பள்ளு பாடுவோமே” பாடல், பள்ளி ஆண்டுவிழாக்களில் ஆடல்பாடலாய் ரெட்டை ஜடைப் பெண்களால் தவறாமல் இடம்பெறும். இதுபோலவே “தீராத விளையாட்டுப் பிள்ளை”யும். பட்டம்மாள் கொடிகட்டி பறந்தார்.

இப்படியான அமோக ஆமோதிப்பு இருந்தால் நம்ம கல்கி வராமல் இருப்பாரா?. வந்தார்.

“பூவுலகில் கூவும் பூஞ்சோலையில்‌ ஒருநாள், குழலோசை கேட்டாயோ கிளியே”, “இன்பக் கனாவொன்று துயிலினிலே கண்டேன்” எனப் பாடல்கள் எழுதி பட்டம்மாள் வழியாகப் பாடவைத்தார்.

“தேச சேவை செய்ய வாரீர்”, “பாருக்குள்ளே நல்ல நாடு”, “தீராத விளையாட்டுப்பிள்ளை” போன்ற பாடல்களை உருக்கமாகப்பாடி பாரதிக்கு அஞ்சலி செய்தார். ஹேராம் என்ற கமல்ஹாசன் படத்தில் வைஷ்ணவ ஜனதோ” குரல் பட்டம்மாவினுடையது.

பட்டம்மாளின் இசைபாணி என்பது காஞ்சிபுரம் நாயினாப்பிள்ளை வழிதான். அது அவரிடம் உறைந்து நின்றிருந்தது. கற்றலின் கேட்டல் நன்று என்பதைப்போலத்தான்.

நாட்டியத்தில் ருக்மிணி அருண்டேல், பாகவதத்தில் சரஸ்வதிபாய், இசையில் டி.கே.பட்டம்மாள்தான் என்றானது. பல்லவி பாடுவதில் பட்டம்மாதான். இது திருவையாறு சேதுராம ஐயர் வழிதான். தீக்ஷிதர் கொள்ளுப்பேரன் அம்பி தீக்ஷதர் தாக்கமும் இருந்தது.

‘மாமவ பட்டாபிராம சுப்ரம்மண்யாய நமோஸ்துதே.. மானஸ குருகுஹா.. போன்றவை முத்திரை பதித்த கீர்த்தனைகள். பட்டாம்மாவின் உருக்கம் மாளாது.

கங்குபாய் ஹங்கல் போன்றோருக்குக் கிடைக்காத பிறவி வாய்ப்பு பட்டம்மாளுக்குக் கிடைத்தது என்ற விமரிசனமும் உண்டு. பிறந்த சமூகம் இவரை மேடையேற்றவே பல்லாண்டுத் தயக்கம் இருந்தது என்பதுதான் உண்மை.

எம்எஸ், பட்டம்மாள், எம்எல்வி என்ற மூவருக்குமே உடன் மேடையேற ஏகப்பட்ட சிபாரிசுகள் தேவைப்பட்டன. பட்டம்மாள் பின்னால் தன் சகோதரர் ஜெயராமனோடு ஒரே மேடையில் பாடினார்.

“நாதாடி குருஹோ” என்ற தீக்ஷிதரின் முதல்கிருதியைப் பாடியிருக்கிறார். மாயாமாளவ கௌள. க்ருபஜுடுகு ‘சாயா தரணி, கன்னதல்லி தேவகாந்தாரி, சுகுணமுலே சக்ரவாகம் சங்கரி நீவே” பேகடா என எண்ணற்ற கீர்த்தனைகள் பட்டம்மாவால் பிரபலமாயின.

குந்தளவராளியில் “உன்னைத் துதிக்க அருள்வாய், “குமரன் தாள் பணிந்தேத்துவீர்… பாபநாசம் சிவனின் யதுகுல காம்போதி, ஸ்வாமி சரணம்.. ஆனந்தபைரவி கபாலி, மோகனம், பராத்பரா வாசஸ்பதி, தாயே ஏழையாய் பைரவி, எந்நாளும்… முகாரி என வரிசைப்படுத்தலாம்.

“பட்டா” பாணி எளிய ரசிகனுக்குமானது. சுதந்திரப் போராட்டத்திற்கு பட்டாவின் பாடல்கள் உந்துசக்தியாய் இருந்தன.

பிராசீன வைதிக சம்பிரதாயங்களை உடைத்தெறிந்தவர் என்ற வகையிலும் சிறப்புதான்.

பட்டம்மாள் இசையை தென்றலுக்கு ஒப்பிடவேண்டும். அவ்வளவு சுகம்.

தேச விடுதலைப் பாடல்கள் பாடி காந்தியத் தாக்கத்தால் தேசபக்தியை முன்நிறுத்திய பட்டம்மாள் மறைந்தபோது அரசுகள் ஓர் அஞ்சலிக் குறிப்புகூட வெளியிடவில்லை என்பது முக்கியமான செய்தி.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment