“சமூக மாற்றத்திற்கு பயன்படாத கலையும், இலக்கியமும் குப்பைகள்” என்றார் மாசேதுங்.
கலை, இலக்கியத்தை மக்கள் புரட்சிக்கான ஆயுதமாக மாற்றிய ஒரு மேதைதான் மாக்சிம் கார்க்கி.
பைபிளுக்கு பிறகு உலக மொழிகளில் அதிகமாக பதிப்பிக்கப்பட்ட ஒரு நூல் அவர் எழுதிய ‘தாய்’ நாவல்.
இந்நாவலுக்கு ரஷ்ய பல்கலைக் கழகம் இலக்கியத்திற்கான டாக்டர் பட்டம் கொடுத்து பெருமைப்படுத்தியது.
பட்டத்தினை பெற்றுக்கொண்ட கார்க்கி வெளியே வந்தபோது நிருபர் ஒருவர், “நீங்கள் எந்தக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றீர்கள்…?” என்றார்.
“நான் எந்தக் கல்லூரிக்கும் சென்றதில்லை. உலகம் என்ற பெரிய பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு மனிதரும் ஒரு புத்தகமாக தோன்றினார்கள். அவர்களைத்தான் படித்தேன்” என்றார் கார்க்கி.
ரஷ்ய மொழியில் கார்க்கி என்றால் கசப்பு என்று பொருள். அந்த பெயருக்கேற்ப அவரது வாழ்க்கை பயணம் துன்பமும் துயரமும் நிறைந்ததுதான்.
அப்பா, அம்மாவை 5 வயதிலேயே பறிகொடுத்து தனது பாட்டியால் வளர்க்கப்பட்டு பிறகு அனாதையாக்கப்பட்டவர் கார்க்கி.
செருப்புத் தைப்பது, மூட்டை தூக்குவது, மண்பாண்டம் செய்வது, வேட்டையாடுதல், ரயில்பாதை காவலன், மீன்பிடித் தொழில், இடுகாட்டு காவலன், பிணம் சுமத்தல், பழ வியாபாரி போன்ற ஏழைகள் செய்யும் வேலைகளெல்லாம் செய்ததோடு அல்லாமல் நாடக நடிகராகவும் இருந்திருக்கிறார்.
8 வயதிலிருந்தே வேலைக்கு செல்லும் கார்க்கிக்கு ரஷ்ய, ஃபிரஞ்சு, இத்தாலி, ஜெர்மனி, ஆங்கில மொழிகளை நன்றாகக் கற்றவர்.
தேனீக்கள் பல்வேறு பூக்களிலிருந்து தேனை சேகரித்து தேன்கூடு கட்டுவது போல கார்க்கி தனது இலக்கிய அறிவை வளர்த்துக்கொண்டு மாபெரும் காவியங்களை இவ்வுலகிற்கு தந்தவர்.
அடிப்படை வாழ்வுரிமை கோரி ஜார் மன்னனை எதிர்த்து இரண்டாயிரம் பேர் ஒன்று திரண்டு ஊர்வலம் சென்றபோது ஜார் படை அவர்களை சுட்டுத்தள்ளியது. அதில் தப்பித்து சிறைபடுத்தப்பட்டவர்தான் கார்க்கி.
பிறகுதான் அவருக்கு ரஷ்ய புரட்சியாளர் லெனின் தொடர்பு கிடைக்கிறது. இருவரும் நெருங்கிய நண்பர்களாகின்றனர்.
புரட்சிக்கு நிதி வேண்டி கார்க்கி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார் லெனின். அங்கு அகிரோந்தாக் மலைப்பகுதியில் அமர்ந்து கார்க்கியால் எழுதப்பட்டதுதான் உலகப்புகழ் பெற்ற தாய் நாவல்.
127 மொழிகளில் பதிக்கப்பட்டு கோடிக்கணக்கில் விற்பனையான ‘தாய்’ நாவலில்,
குடிகார கணவனால் கொடுமைகளுக்கு ஆளாகின்றன தாய்…..
அவளது மகன் தொழிலாளர் சஙகத்தலைவர் பாவெல்….
அவனது காதலி நதாஷா….
அவனது நண்பன் ஆந்திரேயுஷ்…..
இவர்களின் உரையாடல்கள்தான் உலக சோசலிச புரட்சியை நமக்கு நாவல் வடிவில் கொடுத்திருப்பார் மாக்சிம் கார்க்கி.
குடிகார கணவனிடம் அடிபட்டு, மிதிப்பட்டு, அல்லல்பட்ட நிலாவ்னா தன் மகன் பாவலைத் திருத்தி அவனை அறிவார்ந்த ஆற்றல் மிக்க புரட்சித் தலைவனாக உருவாக்கி தன்னையும் அப்புரட்சி இயக்கத்திற்கு ஒப்படைத்துக் கொண்டு போராடி மடிகிறாள் ஒரு பெண்.
இதுதான் ‘தாய்’ நாவலின் மையக்கரு.
இதை படைத்தவர்தான் ரஷ்யாவில் 28.03.1868-ல் இதே நாளில் பிறந்த அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ் என்ற இயற்பெயர் கொண்ட மாக்சிம் கார்க்கி.
பாட்டாளி வர்க்கம் இருக்கின்றவரை பன்முகத் திறன் கொண்ட எழுத்தாளர் தோழர் கார்க்கி வாழ்வார்.
வாழ்க கார்க்கி!
– இரா.திருநாவுக்கரசு