அறிந்த தமிழகம்; அறியாத வரலாறு!

நூல் அறிமுகம் :

நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் தான் இந்த ‘அறியப்படாத தமிழகம்’ நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத கூறுகளைக்கொண்டு தமிழ்ச் சமூகத்தின் ஈராயிரம், மூவாயிரமாண்டு வரலாற்று அசைவியக்கம் இந்தப் புத்தகத்தில் கோடிட்டுக் காட்டப்பெறுகிறது.

வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் ‘வலிமை’ இழந்து போன நமது இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது.

இது சில முற்போக்காளர்கள் கருதுவதுபோலப் ‘பழமை பாராட்டுதல்’ அன்று. வேர்களைப் பற்றிய அறிமுகமும் விஞ்ஞானத்தின் பகுதிதான்.

இந்நூல் குறித்து எடுத்துரைக்கும் ஆசிரியர் தொ.ப., “இந்த நூலில் உள்ள சிறு கட்டுரைகள் சிந்திப்பதற்குரிய சில களங்களை நோக்கிக் கை காட்டுகின்றன.

இன்று படைப்பு உணர்வைவிட ‘விற்பனை உணர்வே’ சமூகத்தை ஆட்டிப் படைக்கின்றது. கல்விச் சந்தையும் தாலிச் சந்தையும் அழுகி நாற்றமெடுக்கின்றன.

தனது ‘விஞ்ஞானக் கண்ணால்’ திரைப்படத்துறை கிராமத்தின் மென்மையான அசைவுகளை விலைப் பொருளாக்குகிறது. மறுபுறமாக நுகர்வியம் என்னும் வாங்கும் உணர்வைத் தகவல் தொடர்புச் சாதனங்கள் தினந்தோறும் கண்காணித்து வளர்க்கின்றன.

உண்மையில் எக்காலத்தும் மனிதன் வாங்கவும் விற்கவும் பிறந்தவனல்லன்; ஆக்கவும் கற்கவும் கல்விக்கு ஊடாக நுகரவும் பிறந்தவன்.

கடந்த முப்பது ஆண்டுகளாக நான் கண்டும் கேட்டும் வாசித்தும் அறிந்தவை மட்டுமே இந்த நூலில் பதியப்பட்டுள்ளன.

தமிழகத்தின் தென் மாவட்டங்கள்தாம் என் வளர்ப்புக்கும் கல்விக்கும் வாழ்வுக்கும் பட்டறிவுக்கும் எல்லையாகும். ஆயினும் என் தேடல் மனிதனை நோக்கியே” எனக் கூறுகிறார்.

*****

அறியப்படாத தமிழகம்
தொ. பரமசிவன்
நற்றிணை பதிப்பகம்
விலை : ரூ. 150/-

ariyappadaatha tamizhagam booktho patho paramasivanஅறியப்படாத தமிழகம்தொ.பதொ.பரமசிவன்
Comments (0)
Add Comment