இந்தியாவில் ஒவ்வொரு மதங்களுக்கும் ஒவ்வொரு சடங்குகள், சம்பிரதாயங்கள் இருக்கின்றன. மதங்களுக்கு ஏற்றது போல் அவர்கள் வழிபாட்டு முறைகளும் வேறுபடும்.
அந்த வகையில் தற்போது இஸ்லாமிய மக்களால் மிகவும் புனிதமாகப் பார்க்கப்படும் ரமலான் மாதம் தொடங்கிவிட்டது.
இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் ரமலான் நோன்பை அதிகாலையில் தொழுகையுடன் தொடங்குகின்றனர்.
நோன்பு மேற்கொள்ளும் இந்த மாதத்தில் உலகத்தில் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களும் சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை தண்ணீர் அருந்தாமல், எச்சில்கூட விழுங்காமல் கடுமையான நோன்பை மேற்கொள்கின்றனர்.
11 வயதைக் கடந்தவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இந்த நோன்பைக் கடைபிடிக்க வேண்டும்.
இதில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நோன்பில் இருந்து விலக்கி வைக்கப்படுகின்றனர்.
இவர்கள் நோன்பு முறை என்ன?
எத்தனை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது?
எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொண்டால் பகல் பொழுதில் உடல் சோர்வகாமல் இருக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்த சமயத்தில் இவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு இரண்டு விதமாகப் பிரிக்கப்படுகிறது. சூரிய உதயத்திற்கு முன் உண்ணும் உணவு சுஹர் என்றும், சூரிய அஸ்தமனத்திற்கு பிந்தைய உணவு இஃப்தார் என்றும் கூறப்படுகிறது.
அவர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பு மொத்தம் 30 நாட்கள் வரை இருக்கின்றன. இந்த நோன்பு முடியும் நாள் தான் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த ரமலான் மாதத்தில் நோன்பு மேற்கொள்ளும் போது ஆரோக்கியமான உடல்நிலை முக்கியமானது. ஒரு நாள் முழுவதும் இயங்கத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் அவர்கள் அதிகாலை எடுத்துக்கொள்ளும் உணவின் மூலம் மட்டுமே கிடைக்கிறது.
1) சுஹர் உணவுகள் எப்படி இருக்க வேண்டும்?
விடியலுக்கு முன்னாடியான உணவு ஆரோக்கியமான மிதமான உணவாக இருக்க வேண்டும். பல மணி நேரங்களுக்கு உடல் இயங்குவதற்கான சக்தியை காலை உணவு கொடுக்கிறது.
பசியைத் தாமதப்படுத்தும் மெதுவாக செரிக்கக்கூடிய உணவுகளாக இருப்பது முக்கியமானது.
ஓட்ஸ், திணை, பீன்ஸ், பருப்பு வகைகள், தவிடு உணவுகள், அத்திப்பழம், முந்திரி, உலர் திராட்சை, பேரீச்சை, பாலுடன் பாதாம், பிஸ்தா போன்றவைகளை பொடியாக அரைத்து கலந்து பாலில் கலந்து குடிக்கலாம்.
இந்த உணவுகள் பகலில் உங்களை நீரோட்டமாக வைத்திருக்க உதவுகிறது.
கிரீன் டீ, காபி, உலர்ந்த பழங்களின் ஜூஸ், முட்டையின் வெள்ளைக் கரு, காய்கறி சாண்ட்விச் உடன் ஊறவைத்த சியா விதைகள் மற்றும் பாதாம் பால் குடிக்கலாம்.
2 சப்பாத்தி, சப்ஜி, பழங்கள் வால்நட் பருப்புகள் ஆகியவைகளை அதிகாலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் பேரிச்சம் பழம் ரமலான் நோன்பு முடிக்கும்போது பாரம்பரியமாக உட்கொள்ளப்படும் ஒரு உணவாக பார்க்கப்படுகிறது.
இந்த பேரிச்சம் பழம் உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. இதில் இருக்கும் இயற்கைச் சர்க்கரை, இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும். நோன்பின் போது அதிகம் எடுத்துக் கொண்டால் உடல் சோர்வு தடுக்கப்படுகிறது.
உலர் பழங்கள், உலர்ந்த ஆப்ரிகாட், உலர் திராட்சை, உலர்ந்த முந்திரி பழம் ஆகியவற்றில் இயற்கை சர்க்கரை மற்றும் நார்ச் சத்து நிறைந்து காணப்படுகிறது. எனவே இவற்றை ரமலான் நோன்பின் போது அதிகம் எடுத்துக்கொண்டால் உடலின் ஆற்றல் பராமரிக்கப்படுவதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்க உதவும்.
2) இஃப்தார் அஸ்தமனத்திற்கு பிந்தைய உணவுகள்
இப்தார் என்பது அன்றைய நோன்பை முறிக்கும் உணவாகும். இந்த உணவில் முக்கியமானதாக இருப்பது நட்ஸ், பேரிச்சம் பழம் மற்றும் விதைகள், சோறு, சப்பாத்தி, பரோட்டா, நூடுல்ஸ், காய்கறிகள் எடுத்துக் கொள்ளலாம்.
முஜாதரா (அரிசி மற்றும் பருப்பு சேர்த்து செய்யப்படும் உணவு) ஆகியவை எடுத்துக் கொள்ளலாம்.
இதுபோன்ற நோன்புக் காலங்களில் சத்தாண உணவுகள் சாப்பிடுவது முக்கியம் அவற்றில சில உணவுகளைப் பார்ப்போம்.
உலர் பழங்கள் மற்றும் விதைகளால் செய்யப்படும் சத்து உருண்டைகள்:
தேவையான பொருட்கள்:
பாதாம் -1 கப்
முந்திரி -1கப்
ஆலிவிதை – ½ கப்
வால்நட்ஸ் – ¼ கப்
பூசணி விதைகள் – ½ கப்
பேரிச்சை – 10 எண்ணிக்கை
உலர் திராட்சை – 1 கைப்பிடி
அனைத்தையும் ஒன்றாக கலந்து கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
பிறகு பேரீச்சை, உலர் திராட்சை இரண்டையும் ஏற்கனவே அரைத்த பருப்பு வகையுடன் கலந்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பிறகு இவைகளை உருண்டைகளாக உருட்டி எடுத்தால் இப்போது சுவையான உலர் பழ சத்து உருண்டை ரெடி….
இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்கவும்.
இது இரவு அல்லது அதிகாலை எடுத்துக் கொள்ளலாம். இந்த உருண்டையானது உடலில் நீர்ச்சத்து குறையாமலும், சோர்வடையாமல் உங்களை பார்த்துக் கொள்ளும்.
நோன்புக் காலத்தில் துரித உணவுகள், எண்ணெயில் வறுத்த உணவுகளைத் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
-யாழினி சோமு.
#இஸ்லாம் #ரமலான் #நோன்பு #இஃப்தார் #சுஹர் #ஆரோக்கியம் உணவு ##உடல் ஆரோக்கியம் #Islam #Ramalan #Fasting #Healthy Food ##Suhoor #Iftar