மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சியில் தனது முதல் பிரச்சார கூட்டத்தை, தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் மூன்று நாட்களுக்கு முன்னர் துவக்கினார்.
அதேபோல் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தனது முதல் பிரச்சார பொதுக்கூட்டத்தை திருச்சியில் இருந்து நேற்று ஆரம்பித்தார்.
அங்குள்ள வண்ணாங்கோவில் பகுதியில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அவர், அறிமுகம் செய்தார்.
கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, ’’தமிழ்நாட்டில் 3 அணிகள் போட்டி என்கின்றனர், மக்களுக்குத் தெரியும். தேர்தலில் போட்டி என வந்துவிட்டால், அது அ.தி.மு.க மற்றும் தி.மு.க.விற்கு இடையேதான்’’ என்று குறிப்பிட்டார்.
”உதயநிதி ஸ்டாலின் 3 ஆண்டுகளாக செங்கல்லை ரோட்டில் காட்டிக் கொண்டுள்ளார். அதை நாடாளுமன்றத்தின் உள்ளே காட்டுங்கள்” என்று கர்ஜித்த எடப்பாடி பழனிசாமி, ”விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்தது அ.தி.மு.க அரசு. இல்லை என்று சொல்லும், ஸ்டாலின் என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா?” என்று சவால் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய ஈபிஎஸ், திமுகவை சகட்டு மேனிக்கு விளாசினார். “தி.மு.க ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு அடியோடு குலைந்துவிட்டது. தி.மு.க ஆட்சியில், போதைப்பொருள் மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. தி.மு.க அமைச்சர்களின் ஊழல்களை சேகரித்து வைத்துள்ளேன்.
2026-ம் ஆண்டு, அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.
இந்தத் தேர்தலில் மக்கள் திமுகவுக்கு மரண அடி கொடுப்பார்கள்” என ஆருடம் சொல்லி தனது பேச்சை நிறைவு செய்தார், எடப்பாடி பழனிசாமி.
இந்த பொதுக்கூட்டத்தில், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா, எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களும் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.
கமல் 29-ம் தேதி பிரச்சாரம்
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது. ஆனால் அவரது கட்சிக்கு சீட் அளிக்கப்படவில்லை. மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என திமுக உறுதி அளித்துள்ளது.
இந்த நிலையில் கமல்ஹாசன், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 29-ம் தேதி முதல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
அன்று ஈரோட்டில் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் கமல், இதனை தொடர்ந்து சேலம், திருச்சி, சிதம்பரம், ஸ்ரீபெரும்புதூர், சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
– பி.எம்.எம்