‘நீருக்குள் மூழ்கிடும் தாமரை’ என்று தொடங்கும் வாரணம் ஆயிரம் படப்பாடல் ‘சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை’ என்று நகரும். அந்தப் பாடல் முழுக்கவே இதமான புறச்சூழலில் மனம் மகிழ்ந்த இளம் காதலர்களின் மனநிலை தெளிவாகக் காணக் கிடைக்கும்.
அதே போன்று ஒரு திரைப்படத்தில் நாயகனோ, நாயகியோ அல்லது இதர பாத்திரங்களோ கோபத்திலோ, இயலாமையிலோ, சோகத்திலோ மூழ்கையில் வானம் தானாக இருண்டு மழை பொழிவதாகக் காட்டப்படும்.
அப்போதெல்லாம், ‘திடீர்னு அடிச்ச வெயிலு மாயமா மறைஞ்சு மழை பெய்ஞ்சிடுமா’ என்ற கிண்டல் ரசிகர்கள் மத்தியில் ஏற்படும்.
ஆனால், இன்றைய புவிச்சூழல் கிட்டத்தட்ட அப்படியொரு நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது.
அதுவே தொடர்கதையாகும் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.
அதனைக் கேட்கும் நம்மைவிடவும், இந்தப் பூமியில் உள்ள பிற உயிரினங்கள் குழம்பித் தவிக்கின்றன.
ஏனென்றால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவற்றின் புழக்கத்தில் இருந்த மரபுவழித் தகவல்கள் இப்போது கேள்விக்குறிகளாக மாறியிருக்கின்றன.
என்ன ஒன்று, அந்த மாற்றங்களுக்கு மிகப்பிரதான காரணம் மனிதர்கள் என்ற உண்மை மட்டும் அவற்றுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்!
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்து வந்த இயற்கையான மாற்றங்களுக்குப் பிறகே இப்போதைய நிலையை வந்தடைந்திருக்கிறது பூமி.
கி.பி.16-ம் நூற்றாண்டு முதல் மனிதர்கள் தொழில்துறையில் பெற்று வரும் முன்னேற்றங்கள் அதற்கிணையான மாற்றங்களைத் தந்துவிடுமோ என்ற பயம் தற்போது உருவாகியிருக்கிறது.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலைக்கழிவுகள், எங்கும் பிளாஸ்டிக் நுகர்வு, இயற்கையில் இருந்து விலகிய வாழ்க்கை முறை, அதீத நுகர்வுக்காக அழிக்கப்படும் வனங்கள் என்று இந்தப் பூமியை உருக்குலைக்கும் மனிதர்களால் அதன் சமநிலை பாதிப்படைந்துள்ளது என்பதே உண்மை.
துருவப் பகுதிகளில் பனி உருகி கடல் மட்டம் உயர்வதாக வரும் தகவல்கள் வயிற்றில் புளியைக் கரைக்கின்றன. அதுவும் போதாதென்று தற்போது திடீரென்று ஏற்படும் பெருமழையால் மக்கள் நிலைகுலைந்துள்ளனர்.
2015-ல் பெய்த பெருமழையால் சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது.
கிட்டத்தட்ட அதே போன்றதொரு பாதிப்பினைக் கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் நிகழ்த்திச் சென்றது.
பலூனுக்குள் நிறைந்திருக்கும் நீர் உடைந்து கொட்டுவது போன்று, மேகத்திரள்கள் வளிமண்டலத்தின் கீழ் பகுதியில் கொத்துக்கொத்தாகப் படையெடுப்பது இதுவரை நாம் கேள்விப்படாதது.
பெருமழைப் பொழிவு தொடர்கதையாகிவிட்ட நிலையில், பருவமழை என்ற பதத்திற்கான அர்த்தம் கேள்விக்குறியாகியுள்ளது.
அது மட்டுமல்லாமல், வானிலை கணிப்புகளை மீறித் திடீரென்று மழையும் வெயிலும் பனியும் பூமியைச் சூழ்வது இதுவரையிலான சுழற்சியையே புரட்டிப் போடுவதாக உள்ளது.
அதன் விளைவுகள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதால் மனிதர்கள் மீண்டும் இயற்கையை அண்ணாந்து பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.
எதற்கெடுத்தாலும் எல்-நினோ!
பசிபிக் கடலின் ஒரு பகுதியில் மேற்பரப்பில் வீசும் காற்றால் நீரின் மேற்பகுதி சூடாவதும், அதன் இன்னொரு பகுதியில் கடலின் ஆழத்தில் இருந்து மேல்நோக்கி வரும் நீர் குளிர்ந்திருப்பதும் இயற்கையின் சுழற்சியால் தொடர்கின்றன.
எப்போதாவது சில காரணிகளால் அச்செயல்பாடுகள் பாதிக்கப்படும்போது பூமியில் வெப்பநிலை உயர்வதும், மழை மேகங்கள் திடீரென்று திரள்வதும் நிகழும்.
இதனை ‘ஸ்பானிஷ்’ மொழியில் ‘எல் நினோ’ மற்றும் ‘லா நினா’ என்று அழைக்கின்றனர். இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த நிகழ்வுகளால் ஒருபக்கம் வறட்சி வறுத்தெடுக்கும். இன்னொரு பக்கம் கொட்டும் மழையால் மக்கள் அவதிப்படுவார்கள்.
இது போன்ற இயற்கைச் சீற்றங்கள் அவ்வப்போது வந்துபோன காலம் மலையேறி, ’இனிமேல் இதுவே நிரந்தரம்’ என்ற பேச்சு பரவலாகியிருக்கிறது.
காரணம், பருவநிலை மாற்றம் தொடர்பான கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமல் மேலும் மேலும் பூமியை மாசுபடுத்தும் மனிதர்களின் செயல்பாடுகள் தான்.
உலக வானிலை தினம்!
1961ஆம் ஆண்டு முதல் ‘உலக வானிலை தினம்’ அனைத்து நாடுகளாலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐநாவைச் சேர்ந்த உலக வானிலை அமைப்பு நிறுவப்பட்ட நாளைக் கொண்டாடும் விதமாகத் தொடங்கப்பட்டு, இன்று வானிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரிடம் ஏற்படுத்தும்விதமாக வளர்ந்து நிற்கிறது.
வானிலை ஆய்வுகளின் முக்கியத்துவத்தைச் சொல்லும்விதமாகவும் இந்நாள் அமைகிறது.
இன்றைய தேதியில், உலகின் எந்தவொரு பகுதியில் நிலவும் வானிலை மாற்றமும் இன்னொரு இடத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.
அந்த மாற்றம் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், அதனை முன்கூட்டியே கண்டறிந்து மக்களிடம் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதுவே, வானிலை ஆய்வில் ஈடுபடுபவர்களின் தோள்களில் அதிகச் சுமையை ஏற்றியுள்ளது.
அவ்வாறு முன்கூட்டியே பேரிடர்கள் குறித்து எச்சரிப்பதன் வழியாகப் பொருட்சேதமும் மனித உயிரிழப்பும் பெருமளவில் தவிர்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அவற்றைத் தைரியமாக எதிர்கொள்வதற்கான வல்லமை கிடைக்கிறது.
‘காலநிலை நடவடிக்கைகளின் முன்னணியில்’ என்ற கருப்பொருளைக் கொண்டு, 2024-ம் ஆண்டுக்கான ‘உலக வானிலை தினம்’ கொண்டாடப்படுகிறது.
பசியில்லாமல், நோய் நொடி இல்லாமல், குறை ஏதும் இல்லாமல் மனிதன் வாழ வேளாண்மையும் சுகாதாரமும் மனிதவளமும் சிறப்பாக இருக்க வேண்டுமானால், அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிற பருவநிலை சீர்மையுடன் இருந்தாக வேண்டும்.
அதற்குப் பருவநிலை மாற்றங்கள் குறித்தும், அவை நிகழாமல் தவிர்ப்பது குறித்தும் அறிந்தாக வேண்டும்.
அதற்கு, இயற்கையின் ஒரு கிளையில் அமர்ந்தவாறே, அடிமரத்தை அறுக்கச் சொல்லும் உத்தரவுகளை நாம் பிறப்பிக்காமல் இருக்க வேண்டும். அவ்வளவு ‘சூதானமாக இருந்தாலே போதும்; இந்த பூமிப்பந்து நசியாமல், நசுங்காமல் பாதுகாக்கலாம்.
இப்போது வரை, இதர உயிரினங்கள் மனிதரோடு பேசக் கற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்படவில்லை. அது நிகழாதவரைக்கும் நமது ‘சமாளிப்புகள்’ எடுபடும்.
உண்மையைச் சொன்னால், அவ்வாறு நிகழ்வதற்கு முன் நாம் பெருந்தன்மை கொண்டவர்களாக மாறிவிடுவது உத்தமம். அது, பருவநிலை மாற்றங்களைக் கண்டு அஞ்சாமல், அவற்றின் இணைகோடாக நம்மைப் பயணிக்கச் செய்யும்!
– உதய் பாடகலிங்கம்